சென்னை, ஜூலை 30 மேனாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயா் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையைச் சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகு கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதற்கான கல்வெட்டில் அவரது பெயா் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி, முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்தத் திட்டத்தைப் பார்வையிட்டார். அப்போது, பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி, ஸ்டாலின் பெயா் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு வலையால் மூடப்பட்டிருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய திருப்போரூா் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவா்மன், வலையைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாக, திருப்போரூா் தொகுதி திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவா்மன் உள்ளிட்ட இருவா் மீது மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, இதயவா்மன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் காழ்ப் புணா்ச்சி காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் 29.7.2026 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசார ணையை ஆக. 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
