பம்மல், ஜூலை 30– பம்மல் பகுத்தறிவாளர் பேரவையின் சார்பில் 26.07.2026 அன்று மாலை 6 மணியளவில் பம்மல் கலைஞர் நூலகத்தில் சத்ரபதி சாகுமகராஜ் –சமூகநீதி—125 ஆண்டு தொடக்க விழா தலைவர் வை.பார்த்திபன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
தலைவர் தனது தலைமை யுரையில், ஜூலை 26இல் கூட்டம் ஏற்பாடு செய்வது என்று முடிவெடுத்தவுடன், 1902, ஜூலை 26இல் சாகுமகராஜ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு ஆணைபிறப்பித்த நாள் என்பதை நினைவுகூர்தல் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியா முழுவதிலும் நடைபெறுகின்ற சமூகநீதி மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மற்றும் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவது சாலப் பொருத்தமாகும் என்று குறிப்பிட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சாகுமகராஜ், வி.பி.சிங் ஆகிய இரண்டு மன்னர் களையும் எந்நாளும் மறக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பொறிஞர் நீ.வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்புப் பேச்சாளருக்கு புலவர் இ.ஆறுமுகம் புத்தகம் வழங்கிச் சிறப்பு செய்தார்.
கோ.கருணாநிதி தனது உரையில் இந்தியாவில், சமூகநீதிக்கு அடித்தளமிட்ட கோலாப்பூர் மன்னர் சத்ரபதி சாகுமகராஜ் ஆணை பிறப்பித்து, 124 ஆண்டுகள் முடிந்து, 125ஆம் ஆண்டு தொடங்கு வதைக் குறிக்கும் விதமாக நிகழ்ச்சி இந்தியாவிலேயே, தனக்குத் தெரிய தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த பம்மலில் பகுத்தறிவாளர் பேரவையின் சார்பில் அதுவும் கலைஞர் நூலகத்தில் நடைபெறு வதைப் பெருமையாகக் குறிப் பிட்டு, பேரவைக்கு தனது பாராட்டு தல்களைப் பதிவு செய்தார். மேலும், ஜோதிராவ்பூலேயின் கருத்துகளால் சாகுமகராஜ், ஈர்க்கப்பட்டு, தனது அரண்மனைப் பதவிகளில் 50 விழுக்காடு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு செய்தது;
ஆற்றில் குளித்துவிட்டு வரும்போது பார்ப்பனர்கள் மந்திரம் ஓதும்போது செய்த துரோகம் தெரிந்து அதனைக் கண்டித்து மாற்றியது;
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளில் இடஒதுக்கீடு, விடுதிகள் கட்டியது,
தேவதாசி முறையை நீக்கியது,
ஜாதி மதம் கடந்த திருமணங் களுக்கு அங்கீகாரம் வழங்கியது
விதவைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது மற்றும் பாபாசாகிப் அம்பேத்கருடன் இணைந்து ஜாதி ஒழிப்புப் பணிக்காக தொண்டாற்றியது போன்ற பல்வேறு சாதனைகளைக் குறிப்பிட்டு நீண்டதொரு உரை ஆற்றினார். நீதிக்கட்சி ஆரம்பித்த காலத்திலேயே சாகுமகராஜின் முயற்சிகள் தொடங்கியிருந்தாலும் தந்தை பெரியாரைப் போன்று மக்கள் இயக்கமாக மாற்றாத காரணத்தால்அவருக்குப் பின்னால் அந்தப் பணிகள் தொடராமல் போன காரணத்தையும் சுட்டிக் காட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
பம்மல் ந.கோபி நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
