விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் ஆய்வரங்கம் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் புகழாரம்

4 Min Read

விழுப்புரம், ஜூலை 29- விழுப்புரம் கழக மாவட்ட சார்பில் 19.7.2026 அன்று காலை 11 மணி அளவில் விழுப்புரம்கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை”நூல் ஆய் வரங்கில் முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் த.பழமலய் ஆசிரியருக்கு புகழாரம் சூட்டினார்.

பல்வேறு விருதுகள் பெற்ற முற்போக்கு எழுத்தாளர் கவிஞர் பேராசிரியர் த.பழமலய் விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற நூல் ஆய்வரங்கில் கலந்துகொண்டு தமிழர் தலைவரின் ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை என்னும் நூலை அறிமுகம் செய்து ஆற்றிய உரை வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை 1970களில் நான் கடலூர் கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றிய போதிலிருந்து அறிந்தவன். அவரின் பெரியார் இயக்க பெரும் பணியை உணர்ந்தவன். அவர் சிறப்புரையாளராக கலந்து கொண்ட பல நிகழ்வுகளில் நானும் கலந்து கொண்டவன்.. பேசியவன்… அவரைப் போலவே தந்தை பெரியார் மீது அளவற்ற பற்றுதல் கொண்டவன். அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன். அவர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார் அவரின் பேச்சுக்கள் பல நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன

எனது மாணவர், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வுக்கு வந்த என்னை இந்த சிறப்பான நூலைப் பற்றி பேசவும் அழைத்து உள்ளீர்கள். கிரேக்க எழுத்தாளர் கஹோமரின் இலியட் நூலில் டிராய் கோட்டை முற்றுகை பற்றிய செய்திகள் அடிப்படையில் அந்த முற்றுகையில் வெற்றி பெற எந்த அளவு சூழ்ச்சியும், வஞ்சகமும் பின்பற்றப்பட்டதோ அதைவிட சூழ்ச்சியும் வஞ்சகமும் அதிகம் கொண்ட அமைப்புதான் ஆர்எஸ்எஸ் என்னும் கொடிய விஷமுள்ள மதவெறி அமைப்பாகும் என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நம்முடைய ஆசிரியர் அவர்கள் படைத்துள்ள நூல்தான் ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன் குதிரை என்னும் நூலாகும். எனக்கு 82 வயது ஆகிறது. எப்போதும் போல் என்னால் இப்போது எழுதவும் படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் என்னை விட 11 வயது மூத்த தலைவர் 93 வயதில் நல்ல நினைவாற்றலோடு எழுதுகிறார், பேசுகிறார் பல்வேறு விவாதங்களில் பங்கேற்கிறார் பேட்டி அளிக்கிறார் என்பதை பார்க்கிற போது எனக்கு வியப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ‘விடுதலை’ வாயிலாக அவசியமான அறிக்கைகளை வெளியிடுகிறார் அதற்கு சிறந்த சிந்தனையாற்றல் தேவை, நினைவாற்றலும் தேவை. இவையெல்லாம் கைவரப்பெற்றவராக ஆசிரியர் அவர்கள் இருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. தந்தை பெரியார் அவர்கள் 94-95 வயது வரை ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து பேசினார். ஆனால் எழுதினாரா என்று என்னால் உறுதியாக கூற முடியாது. ஆசிரியர் அவர்கள் 300க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளதாக எனது மாணவர் துரை.சந்திரசேகரன் குறிப்பிட்டார். அது ஒரு பெரிய சாதனை என்றே கருதுகிறேன். இன்றைக்கு பயன்படுவது மட்டுமல்ல, இப்படிப்பட்ட நூல்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய வரலாறாக சாதனை படைக்கக்கூடிய சக்தி உடையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தந்தை பெரியார் அவர்கள் மறைந்தாலும் அவரின் எழுத்தும் பேச்சும் இன்றும் நூல்களாக ஆக்கப்பட்ட காரணத்தால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக காட்சி தர முடிகிறது. கால ஓட்டத்தில் நூல்கள் தான் எழுத்துக்கள் தான் நிற்கும் வரலாறு பேசும் அது போல இயக்கத்துக்கு வலு சேர்க்க பெரியார் காலத்தை காட்டிலும் ஆசிரியர் காலத்தில் இவ்வளவு நூல்கள் அவரின் எழுத்தும் பேச்சுமாக வெளிவந்துள்ளது. இயக்கத்தின் பெருமையை வலுவை மாற்றார் உணரும் வண்ணம் சாதனை படைத்துள்ளார். என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

பலமுறை ஆசிரியர் அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று நேரடி மக்களை படித்து வந்தவர் என்ற காரணத்தாலும். அவரே ஒரு சிறந்த வாசகர் என்ற காரணத்தாலும். ‘வாழ்வியல் சிந்தனைகள்’ போன்ற தொடர் நூல்களை அவரால் தர முடிந்தது. இயக்கத்தை கடந்து எல்லோரும் அந்த நூல்களை வாசிக்க வேண்டும். சமுதாயம் மேம்பட அவரின் வாழ்வியல் சிந்தனைகள் கண்டிப்பாக உதவும்.

அதுபோல படை கருவிகள், ஸநாதன காட்டை அழிக்கும் தீப்பொறிகளாய் அவரின் நூல்கள் பயன் தரும் திராவிடர் கழகத்திலோ பகுத்தறிவாளர் கழகத்திலோ சில பேர் தான் ஊரில் இருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. சிறு நெருப்பு பொறி தான் பெரும் தீயை உண்டாக்கக் கூடியது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவர்கள் பெரியாரின் அன்பர்கள். அந்த நெருப்பு ஜுவாலை அணையாமல் இந்த நூல்கள் பார்த்துக் கொள்ளும். நீங்களும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணம் போன்ற ஒரு விருந்துக்கு செல்லுகிறோம். சாப்பிடுகின்றவர்கள் ஆயிரக் கணக்கில் இருப்பர். ஆனால் அவ்வளவு பேருக்கும் சமைக்க கூடியவர்கள் சிலர்தான். சமையல் அறைகூட சிறியதாகத்தான் இருக்கும். கலந்து கொள்பவர்கள் இருக்கும் இடம் பெரியது அல்லவா? அதைப் போலத்தான் திராவிடர் கழகமும். எண்ணிக்கையில் சிலராக இருக்கலாம் ஆனால் கொள்கை பலத்தில் பல்லாயிரம் பேருக்கு சமமானவர்கள். நமது இயக்கத்தை வழி நடத்தும் தலைவர் சிறந்த எழுத்தாளராகவும், சிறப்பான பேச்சாளராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் போன்ற சிந்தனையாளராகவும் தமிழர் தலைவர் ஆசிரியர் கிடைத்தது இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அவரின் ஆளுமை கண்டு வியந்து நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் த. பழமலய் மேற்கண்டவாறு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *