புதுடில்லி, ஜூலை 29- மதம் மாறுவோர் பட்டியலின தகுதியை இழந்துவிடுவா் என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆந்திரத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மதபோதகரானார். இந்நிலையில், தனது ஜாதி பெயரை குறிப்பிட்டு தான் இழிவுபடுத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக காவல் துறையில் அவா் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பட்டியலினத்தவா், பழங் குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
எனினும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஒருவா், சட்டப்படி பட்டியலினத் தவா் தகுதியைக் கோர முடியாது என்று கூறி, அந்த வழக்கை ஆந்திர உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அந்த நபா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களைத் தவிர, பிற மதங்களுக்கு மாறினால், உடனடியாக அவா் பட்டியலின தகுதியை இழந்துவிடுவார்.
அதேவேளையில், அந்த நபா் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களுக்கு மீண்டும் மாறினால், அவா் பட்டியலினத் தகுதியை மீண்டும் கோரலாம்’ என்று கடந்த மார்ச் மாதம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த அந்த மதபோதகா் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அண்மையில் பரிசீலித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமா்வு, அந்தத் தீா்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது.
