மாந்திரீக பூஜைக்காக தாயை ‘நரபலி’ கொடுத்தாரா? சந்தேகத்தின் பேரில் மகனிடம் காவல்துறை தீவிர விசாரணை!

2 Min Read

கொல்லம், ஜூலை 27– கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியில், உயிரிழந்த தாயின் உடலுக்கு மாந்திரீக பூஜைகள் செய்த மகனிடம், தாய் ‘நரபலி’ கொடுக்கப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்துப்புழாவைச் சேர்ந்த சின்னத்தாமா (வயது 90) என்ற முதியவர், தனது மகன் கிருஷ்ணசாமி (வயது 62) என்பவருடன் வசித்து வந்தார். கணவரை இழந்த சின்னத்தாமாவை பராமரித்து வந்த கிருஷ்ணசாமி, மாந்திரீகம், பில்லி சூனியம் மற்றும் மூடநம்பிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சமீபகாலமாக அவர் தனது தாயாரின் உடலை வெள்ளைத் துணியால் மூடி சில பூஜைகளை செய்து வந்துள்ளார்.

அதிர்ச்சி உண்மை

இந்நிலையில், 24.7.2026 அன்று மாலை கிருஷ்ணசாமியின் மகள் தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பாட்டி சின்னத்தாமாவின் உடல் வெள்ளை நிறத் துணியால் மூடப்பட்டு, அதன் அருகே பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சந்தேகமடைந்து விசாரித்தபோது, கடந்த 3 நாட்களாகவே உயிரிழந்த தாயின் உடலை வைத்து கிருஷ்ண சாமி பூஜை நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக அவரது மகள் உள்ளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணை

தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல் துறையினர், சின்னத்தாமாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயார் எவ்வாறு இறந்தார், அவர் இறந்தது குறித்து ஏன் காவல்துறைக்கோ அல்லது உறவினர்களுக்கோ தெரிவிக்கவில்லை என்ற கேள்விகளுக்கு கிருஷ்ணசாமி முரண்பாடான பதில்களை அளித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகத்திற் கிடமான மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு கேரளாவில் லைலா என்பவரால் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே போன்று, மாந்திரீக பூஜைக்காக கிருஷ்ணசாமியும் தனது தாயை நரபலி கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *