28 வயதில் சாகு மகராசர் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை!
பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும்
50% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!
சமூகநீதிச் சரித்திரத்தின் 125 ஆம் ஆண்டு தொடக்கம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும்
50% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!
சமூகநீதிச் சரித்திரத்தின் 125 ஆம் ஆண்டு தொடக்கம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
‘28 வயதில் சாகு மகராசர் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை! பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! சமூகநீதிச் சரித்திரத்தின் 125 ஆம் ஆண்டு தொடக்கம்! நீதித் துறையிலும், தனியார் துறையிலும் சமூகநீதியைச் செயல்படுத்த உறுதியேற்போம்!’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, வர்ணாசிரம முறையால், மனுஸ்மிருதியால், பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டு, கல்வியும் உயர் அதிகாரப் பதவிகளும் மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்னும் நோக்கோடு சமூகநீதிப் பார்வையில், இட ஒதுக்கீடு என்னும் முறையைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க சாகு மகராசரின் சமூகநீதிச் சாசனம் ‘கோல்ஹாப்பூர் சமஸ்தானத்தின்’ அரசிதழில் வெளியான நாள் இன்று.
இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான முதல் வெற்றி சாகுமகராசருடையது ஆகும்! அதை நிறைவேற்றும்போது அவருக்கு வயது 28 என்பது வரலாற்றிலேயே வியப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்திய ஜாதிய சமூகத்தின் உண்மை நிலையை உணர்த்திய ஜோதிபாபூலே – சாவித்திரிபா பூலே ஆகியோரின் சத்தியசோதக் சமாஜ் அமைப்பு உருவாக்கிய விழிப்புணர்வு காரணமாகவே, பார்ப்பன ஆதிக்கம் பற்றி புரிந்துகொண்ட சாகு மகராஜ், இளம் வயது முதலே பார்ப்பன ஆதிக்கத்தை உடைப்பதிலும், சமூகநீதியை விதைப்பதிலும் அக்கறை செலுத்தியவர் ஆவார்.
அதன் காரணமாகத் தான், சென்னை ராஜதானியில் 1921 ஆம் ஆண்டு முதல் முயற்சித்து, 1928 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வகுப்புவாரி உரிமைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே 1902 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாளில் தனி சமஸ்தானமாக இருந்த கோல்ஹாப்பூரின் அரசராக, இடஒதுக்கீட்டை சாகு மகராசர் நடைமுறைப்படுத்தினார்.
நீதிக்கட்சியின் தோற்றத்துக்கு
முக்கியக் காரணமாகும்!
முக்கியக் காரணமாகும்!
அவருடைய ஊக்கம் தான், தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கி வேகமாகச் செயல்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்பதும் வரலாறு! 48 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், இந்தியாவில் ஒரு மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தியவர் அவர்! பார்ப்பனரல்லாதார் எழுச்சி தென்னகத்தில் அதிகாரப் பீடத்தை நோக்கி நகர்ந்து, சமூகத் தளத்தில் விரிவடையத் தொடங்கிய அந்தக் காலத்தில், டாக்டர் டி.எம்.நாயரின் இழப்பு எத்தகைய பேரிழப்போ, அப்படிப்பட்ட ஒன்று தான் சாகுமகராசரின் இழப்பும் ஆகும்! இருவரும் கருத்தொருமித்த நண்பர்களாக இருந்தது நீதிக்கட்சியின் தோற்றத்துக்கு முக்கியக் காரணமாகும்.
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தில், தந்தை பெரியாரால் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தத்தின் விளைவாக இடஒதுக்கீடு சட்டப்படி ஏற்கப்படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே சாகு மகராசரின் சரித்திரச் சாதனை நிகழ்ந்துவிட்டது. அரசியலமைப்புச் சட்டத்தைக் கொணர்ந்த பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும், சாகுமகராசருடன் இணைந்து செயல்பட்டவராவார்.
“ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு!’’
டாக்டர் அம்பேத்கர், தத்தோபா பவார், தித்தோபா தல்வி ஆகிய கலைஞர்களின் உதவியுடன் சாகு மகாராசரைச் சந்தித்தார். இளம் அம்பேத்கரின் அறிவாற்றலாலும், தீண்டாமைக்கு எதிரான அவரது கருத்துகளாலும் சாகு மகாராசர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1917 முதல் 1921 வரையிலான காலகட்டத்தில் இருவரும் பலமுறை சந்தித்து, “ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு’’ வழங்குவதன் மூலம் ஜாதிப் பிரிவினையின் தீமைகளை ஒழிப்பதற்கான சாத்தியமான வழிகளைப் பற்றி விவாதித்துள்ளனர். 1920 மார்ச் 21 முதல் 22 வரை தீண்டத்தகாதவர்களின் மேம்பாட்டிற்காக அவர்கள் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தனர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் தலைவர் அம்பேத்கர்தான் என்று நம்பிய சாகு மகாராஜ், அவரை அந்த மாநாட்டின் தலைவராக முன்மொழிந்தார். 1921 ஜனவரி 31 அன்று அம்பேத்கர் தனது ‘மூக்நாயக்’ என்ற செய்தித்தாளைத் தொடங்கியபோது, சாகு மகராசர் டாக்டர் அம்பேத்கருக்கு ரூ. 2,500 நன்கொடையாக வழங்கினார் என்பது அவரது சமூகநீதி மீதான அக்கறையை, தீவிர பங்களிப்பை உணர்த்துவதாகும்.
படிப்படியாய் சமூகநீதி வந்த வரலாறு!
சமூகநீதியின் முதல் படி தான் சாகுமகராசரின் சாதனை (1902)! அடுத்த நிலை என்பது சென்னை மாகாணத்தில், நீதிக்கட்சியின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட கம்யூனல் ஜி.ஓ. (1928).
ஆனால், அதன் பிறகு இந்திய அளவில், ஒடுக்கப் பட்டோருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 1950 ஆம் ஆண்டுதான் வழங்கப்பட்டது.
கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கும், ஒடுக்கப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்ற வாய்ப்பு தந்தை பெரியாரின் போராட்டத்தால் நிறை வேற்றப்பட்ட முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் வாயிலாகவே கிடைத்தது.
1993 இல் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக…
அதில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கிடைக்க மேலும் 41 ஆண்டுகள் ஆனது. 1993 இல் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இடஒதுக்கீட்டின் மூலம் ஒன்றிய அரசு அதிகாரி ஆனார்.
2006 ஆம் ஆண்டுதான், பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வித் துறையிலும் இடஒதுக்கீடு கிடைத்தது. அதுவும் பிரித்துப் பிரித்தே முதல் மூன்று ஆண்டுகள் வழங்கப்பட்டன. இன்னும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்கத் தொடங்கி 20 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்த 20 ஆண்டுகளிலும் இடஒதுக்கீட்டு அளவில் முழுமையான இடங்கள் நிரப்பப்படவில்லை என்பது அதிலும் ஒரு கொடுமையாகும்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உறுதிப்பட்ட 1992-க்குப் பிறகு, அதை குறுக்குவழியில் பயனற்ற தாக்க தனியார் மயமாக்கலை ஊக்குவித்தது ஒன்றிய அரசு. அதன் காரணமாக இன்று தனியார் துறைகள் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. அங்கெல்லாம் பார்ப்பன- உயர்ஜாதி ஆதிக்கமே இன்றும் நீடிக்கி றது. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறு பான்மைச் சமூகத்து மக்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனவே, சமூகநீதியை முழுமை யாக வழங்க வேண்டுமானால், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்னும் நிலையை நாம் எட்ட வேண்டும்.
நாம் வெற்றிபெற வேண்டிய
களங்கள் ஏராளமாக இருக்கின்றன!
களங்கள் ஏராளமாக இருக்கின்றன!
அரசு, பொதுத் துறையிலும் இடஒதுக்கீட்டுக்கு, இன்னும் பல இடையூறுகளும், வழிப்பறிகளும் தொடர்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டியது அவசியம். நீதித்துறையில் இடஒதுக்கீடு, மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கும் உரிய பிரதிநிதித்துவம், மொத்த இடஒதுக்கீட்டு இடங்களை முறையாக நிறைவேற்றுதல், பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்று நாம் வெற்றிபெற வேண்டிய களங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை யெல்லாம் செய்து முடிக்க, சாகுமகராசரின் சரித்திரச் சாதனை நிகழ்ந்த 125 ஆம் ஆண்டில் உறுதியேற்போம்!
வாழ்க சாகு மகராசர்! வெல்க சமூகநீதி!!
திராவிடர் கழகத்தின் சார்பில் இவ் வாண்டு நடைபெறவிருக்கும் ஜோதிபாபூலேவின் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மாநாடு, சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு, டாக்டர் அம்பேத்கரின் சவுதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டத்தின் நூற்றாண்டு விழாக்களுடன், சாகு மகராசரின் சமூகநீதிச் சாதனை நிகழ்ந்த 125 ஆம் ஆண்டு விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
வாழ்க சாகு மகராசர்! வெல்க சமூகநீதி!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
26.7.2026
