‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

9 Min Read

மலேசியா – சிங்கப்பூரில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பெரியாரின் பயணம்!
பெரியாரின் லட்சியப் பயணம் முடிவதில்லை; அவருடைய கொள்கைகள் தோற்பதில்லை!
புத்தக ஆய்வுரையை கவரும் வகையில் நிகழ்த்திய முனைவர் சுபாஷினிக்குப் பாராட்டு

திராவிடர் கழகம்

சிங்கப்பூர், ஜூலை 26  மலேசியா – சிங்கப்பூரில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பெரியாரின் பயணம்! பெரியாரின் லட்சியப் பயணம் முடிவதில்லை! புத்தக ஆய்வுரையை கவரும் வகையில் நிகழ்த்திய முனைவர் சுபாஷினிக்குப் பாராட்டு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
மலேசியா – சிங்கப்பூரில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பெரியாரின் பயணம்! பெரியாரின் லட்சியப் பயணம் முடிவதில்லை; அவருடைய கொள்கைகள் தோற்பதில்லை! புத்தக ஆய்வுரையை கவரும் வகையில் நிகழ்த்திய முனைவர் சுபாஷினிக்குப் பாராட்டு ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வுஒரு புத்தகத்தை வாசிப்பதை விட, நேசிப்பதை விட…நம்மையே புத்தகத்துக்குள் அழைத்துப் போகிறார்!ஒருபோதும் சுற்றுலாவுக்குப் போகவில்லை, ‘கற்றுலா’வுக்காகத்தான் சென்றார்!எதிர்க்கிறவர்களைப் பார்க்கும் போதுதான், உற்சாகமும், ஊக்கமும் பிறக்கும்!பள்ளிக்கூடங்களுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க வையுங்கள்!மாறுதலை, பெரியாரே நேரில் காணுகிறார்!தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று நினைக்காதீர்கள்!பெரியாருடைய பயணங்கள் முடிவதில்லை! அவருடைய கொள்கைகள் தோற்பதில்லை!

கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில்  ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வுரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார். அந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்  சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் பங்கேற்றார் . ஆய்வுரையின் முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அவ்விவரம் வருமாறு:

 ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின்
359 ஆவது நிகழ்வு

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!

நமது ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

இப்போது நமது ஆசிரியர் அய்யா அவர்கள் அய்ந்து ஆண்டுகள் கழித்து நமது குழுவில் நம்மோடு இணைந்திருக்கின்றார். ‘திராவிடியன் மாடல்’ (Dravidian Model) திறனாய்வுக்குப் பின். அய்யா அவர்கள்,  இந்தத் திறனாய்வு குறித்து சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு புத்தகத்தை வாசிப்பதை விட,
நேசிப்பதை விட…

தமிழர் தலைவர் ஆசிரியர்:  வணக்கம்!

ஓர் அற்புதமான ஒரு வாய்ப்பு எனக்கு! அளவற்ற மகிழ்ச்சியோடு உங்களை எல்லாம் சந்திக்கின்றேன். இணைப்புரையாளராக இருக்கிற தோழியர் ஆனாலும், ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ ’ என்ற இந்த நூலை தொகுத்ததை விட, அந்தத்  தொகுப்பு எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது, எந்த அளவிற்கு அதை உள்வாங்கி மற்றவர்களுக்கெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அரிய பணியை, மிக செம்மையாகவும், சிறப்பாகவும், அதே நேரத்தில் எழுதியவர்களுக்கே வியப்பாக  இருக்கக்கூடிய அளவிற்கும் சிறப்பாக செய்துள்ளார் உலக புகழ் பெற்ற ஆய்வாளர் முனைவர் சுபாஷினி அவர்கள். அவர்களுக்கும், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த ‘வாருங்கள் படிப்போம்’ என்ற அமைப்புக்கும் முதற்கண் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரியதாக ஆக்குகிறேன். மிகச் சிறப்பான முறையில் அவர் சொன்னார், ஒரு புத்தகத்தை வாசிப்பதை விட, நேசிப்பதை விட, அந்தப் புத்தகம் இப்படி எல்லாம் அமைந்திருக்கிறதே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஓர் ஈர்ப்பை உண்டாக்கக்கூடிய, அற்புதமான உரையாக  ஆய்வாளர் சுபாஷினி அவர்களுடைய உரை அமைந்தது.

நம்மையே புத்தகத்துக்குள்
அழைத்துப் போகிறார்!

வெறும் இன்னின்ன பக்கத்தில் என்னென்ன செய்திருக்கிறார் என்று ஒரு புத்தகத்தை ஆய்வு செய்யும் போது சொல்லுவார்கள். ஆனால், இவர் முற்றிலும் மாறாக நம்மையே புத்தகத்துக்குள் அழைத்துப் போகிறார். 1929 இல், பிறக்காத நம்மைப் போன்றவர்களை எல்லாம், பெரியாருடன்  அழைத்துப் போகின்றார். ஒவ்வொரு இடத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார். ‘‘மலேசியாவில்  என்னென்ன இடங்கள், அப்போது இருந்த சிங்கப்பூர் எப்படிப்பட்டது? என்னென்ன சூழ்நிலைகள்’’ என்று எல்லாம், தனக்கு அளித்த  ஒரு 50 மணித்துளிகளிலே அற்புதமாக நமக்குக் கொடுத்தார்கள். அதற்கு நெஞ்சம் நிறைந்த மீண்டும் மீண்டும் பாராட்டுகள்! இதைவிட இரண்டொரு செய்திகளை நான் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற மணித்துளிகளுக்குள் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். முதலில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருபோதும் சுற்றுலாவுக்குப் போகவில்லை, ‘கற்றுலா’வுக்காகத்தான் சென்றார்!

அதைவிட சிறப்பு என்னவென்றால், பெரியாரின் இரண்டு பயணங்களையும் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்லி,  நான் எதிர்பார்க்காத வகையில், என்னுடைய பயணத்தையும் சேர்த்து அதில் போட்டிருக்கிற பகுதியை எடுத்துச் சொன்னார்கள். அப்படி வருகிற போது, ஒரே ஒரு வித்தியாசம்; மற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போகும்போது, அதற்கு பெயர் சுற்றுலா. ஆனால், தந்தை பெரியாருடைய பயணங்கள் இருக்கிறதே, அது 1929 ஆனாலும், அதேபோல 1953, 1954 ஆனாலும் அல்லது இடையிலே 1932 இல் அய்ரோப்பிய நாடுகள் சோவியத் ரஷயா உள்பட போன அந்தக் காலகட்டம் ஆனாலும், இலங்கை உபநியாசம் என்று ஆகக்கூடிய இலங்கைக்குப் போனாலும், எங்கு போனாலும் அவர் ஒருபோதும் சுற்றுலாவுக்குப் போகவில்லை. அதற்கு மாறாக ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டுமானால், ‘கற்றுலா’வுக்காகத்தான்  அவர் சென்றார். அதற்குப் பெயர் கற்றுலா.

எப்படி கற்றுலா என்று சொன்னால், அவர்கள் கற்றுக் கொள்வதை விட, மற்றவர்களுக்கு அங்கே இருக்கிற மக்களை ஒருங்கிணைத்து, ‘மாநிலத்தின் பரப்பு என்பதுதான் தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையின் சிறப்பு, எல்லை’ என்பதை அவர்கள் சிறப்பாகத் தந்திருக்கிறார்கள்.

எதிர்க்கிறவர்களைப் பார்க்கும் போதுதான், உற்சாகமும், ஊக்கமும் பிறக்கும்!

அதோடு இன்னொரு செய்தியை, அவர்கள் கூடுதல் தகவலாக நான் இணைக்க விரும்புகிறேன். பெரும்பாலும், பெரியார் அவர்களுக்குக் கொடுத்த வரவேற்பைப் பற்றியே அதிகமாகச் சொன்னார். ஆனால், பெரியார் அவர்களுக்கு எப்போதுமே வரவேற்பு, வாழ்க என்று சொல்வதை விட, அவர்களை எதிர்க்கிறவர்களைப் பார்க்கும் போதுதான், உற்சாகமும், ஊக்கமும் பிறக்கும்! எதிர்நீச்சல் தான் தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய, ஒரு வாழ்க்கை முறையும், போராட்டக் களமும். அப்படிப்பட்டவர் வரும்போது முதலில் ஈப்போ மாநாடு எல்லாம் ஏற்பாடு செய்து, முதல் முறையாக அவர் சென்ற, ஒரு தந்தி கிடைத்தது. ‘‘இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது, நீங்கள் வர வேண்டாம்’’ என்றது தந்தி.  தந்தை பெரியார் அவர்கள் எல்லா  ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, தமிழவேள் போன்றவர்கள்  எல்லாம் சங்கடப்பட்டுச் சொன்ன நேரத்திலே, அய்யாவுக்கு ஒரு சந்தேகம் வருகிறது, அப்போது சொல்லுகிறார், இல்லை இல்லை மறுபடியும் தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் மூலமாகத் தெரிந்து கொள்கிறார்கள். ‘‘மாநாடு உண்டு,  யாரோ விஷமம் செய்திருக்கிறார்கள்’’ என்று செய்தி கிடைக்கிறது.

எனவே, இறங்கும் போது பார்த்தீர்களேயானால், எதிர்ப்புகள்! அதை ஓரளவு ‘பெரியார்’ திரைப்படத்தில் கூட வைத்து காட்டப்பட்டிருக்கிறது. அவ்வளவு எதிர்ப்பையும் தாண்டி, மக்களுடைய ஆதரவு பெரு கியது. எனவே, எதிர்ப்பு எங்கே இருக்கிறதோ அங்கே எல்லாம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்பதை உருவாக்க வேண்டும் என்றுதான் தந்தை பெரியார் அவர்கள் அந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு வந்தார்கள்.

அதோடு மற்றவர்கள் எல்லாம் போனால், பெரிய பெரிய நகரங்களுக்குப் போவார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்களுடைய மலேசிய சுற்றுப்பணத்தில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், முதலில் அவர்கள் போன இடங்கள் எல்லாம், மலேசியாவினுடைய உழைப்பாளர்களாக இருக்கக்கூடிய நம்முடைய தொழிலாளர்களாக இருந்து வாழ்ந்து கொண்டு, வதிந்து கொண்டிருந்த, அந்தக் காலகட்டத்தில் இருந்த ரப்பர் பால் எடுக்கக்கூடிய தோட்டங்கள் – மலைத்தோட்டங்கள்! அந்தத் தோட்டங்களில், தொழிலாளர்களைப் பார்க்கிறார்கள், வேதனைப்படுகிறார்கள்.

பள்ளிக்கூடங்களுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க வையுங்கள்!

தமிழ்நாட்டிலிருந்து  அவர்கள், பிறந்த நாட்டில் வாழ்வு கிடைக்காததால், அங்கே  சென்று  கூலிக்காரர்களாகப் போகிறார்கள். இப்போதெல்லாம் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்து தமிழர்கள் போகும்போது, படித்தவர்களாகப் போகிறார்கள், பதவியில் இருக்கக்கூடிய அளவிற்குப் போயிருக்கிறார்கள். இது பெரியார் இயக்கம் செய்த புரட்சியினுடைய கனிந்த பலன். அன்றைக்கு எல்லாம் வெறும் கூலி, உடல் உழைப்புத் தொழிலாளர்கள்! அழகாகச் சொன்னார் சுபாஷினி அவர்கள்! அந்த உடலுழைப்புத் தொழிலால்,  ரப்பர் பால் வெட்டி அவர்களுக்குக் கிடைக்கிற சம்பளத்தை வைத்துக்கொண்டு, சிறப்பாக வாழ முடியாத அளவுக்கு, ஒரு பக்கம் கள்ளுக்கடை; இன்னொரு பக்கம், அங்கங்கே சிறு தெய்வங்கள் என்ற பெயரால் கோயில்கள். ஏனென்றால், ஆதிக்கவாதிகளுக்கு  பக்தி ஒரு போதை; அதேபோல மது ஒரு போதை என்ற அளவுக்கே கொண்டு வந்து வைத்துவிட்டு, கூலியை அதிகமாக்குவதற்கோ அல்லது பிற கோரிக்கைகளுக்கோ, எந்தவிதமான வேலை நிறுத்தம் செய்யாத அளவுக்கு அவர்களை ஆக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். பள்ளிக்கூடங்கள் இல்லை. அதை தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகிறார்கள், ‘‘பள்ளிக்கூடங்களுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க வையுங்கள். உங்கள் பிள்ளைகள் மீண்டும் கூலிக்காரர்களாய் இருக்கக்கூடாது. அவர்கள் அத்தனை பேரும் படித்தவர்களாக இருக்க வேண்டும்’’ என்ற அறிவுரையைச் சொன்னார். ‘‘வருவாய்க்கு உட்பட்டு செலவழியுங்கள், சிக்கனமாக இருங்கள்’’ என்று சொன்னார்.

மாறுதலை, பெரியாரே நேரில் காணுகிறார்!

பெண்கள் அதைக் கேட்டு பெரிய அளவிற்கு உணருகிறார்கள். அதுபோலவே ‘‘நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தில் நாகரீகமாகப் பழக வேண்டும்.  மற்றவர்களை விட நாம் குறைந்தவர்கள் அல்ல. எல்லோருக்கும் பகுத்தறிவு, ஆறறிவுதான்’’ என்பதை எல்லாம் எடுத்துச் சொன்னவுடனே,  ஒரு பெரிய எழுச்சி ஏற்படுகிறது. எழுச்சி ஏற்பட்டு, அதை உணர்கிறார்கள். அந்த உணர்வினுடைய விளைவு என்னவென்று கேட்டால், அடுத்தபடியாக  25 ஆண்டுகள் கழித்து 1953–1954 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் சென்றார் என்று சொன்னார் அல்லவா, அந்த சமுதாய மாறுதல் இருக்கிறதே, ‘சோசியல் டிரான்ஸ்பர்மேஷன்’ என்ற அந்த மாறுதலை, பெரியாரே நேரில் காணுகிறார். இவரை வரவேற்றவர்கள், அப்போது சிறு பிள்ளைகளாக இருந்தவர்கள். பலர் பிறக்கவும் இல்லை. பிறகு பிறந்து, வளர்ந்து, படித்து கல்லூரிகளுக்குப் போய், நல்ல உத்தியோகங்களுக்கு வரக்கூடிய அளவிற்கு அவர்கள் உயர்ந்திருந்தார்கள். அந்தத் தலைமுறை பெரியாரை வரவேற்கிறது! எங்கே? மலேயாவில் இருந்தாலும் சரி, சிங்கப்பூரில் இருந்தாலும் சரி மற்ற இடங்களில், அந்தத் தலைமுறை பெரிய அளவிற்கு மாற்றம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று நினைக்காதீர்கள்!

எனவே, ஒரு தலைவர் ஒரு கொள்கையில் எதிர்நீச்சல் அடித்துச் செய்து கொண்டிருக்கிற போது, அவருடைய காலத்தில், அவருடைய கொள்கை வெற்றியினால், சமூக மாறுதல் ஏற்பட்டதை அவர்கள் உணர்ந்து, மிகப்பெரிய அளவிற்கும் மகிழ்கிறார்கள். இந்த வாய்ப்பு எல்லாத் தலைவர்களுக்கும் கிடைக்காது. தான் விதைத்த விதை, முளை கிளம்பி, ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. விழுதுகள் பழுதில்லாமல் வந்து கொண்டிருக்கின்றன  என்பது வரை அவர் பார்த்தார். இவை எல்லாவற்றையும் விட, அங்கே  போகிறவர்கள் வழக்கமாக என்ன சொல்வார்கள், அவர்களைப் பார்த்து, ‘‘ஆகா!  நம்முடைய தாய் நாட்டை மறந்து விடாதீர்கள்’’ என்று  சொல்வார்கள்.

ஆனால், பெரியார் அவர்கள் என்ன சொன்னார் என்றால், ‘‘தயவுசெய்து நீங்கள் அந்த நாட்டிலேயே குடியுரிமை பெறுங்கள்! தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று நினைக்காதீர்கள். சொந்தக்காரர்களுக்குப் பணத்தையெல்லாம் அனுப்பி, அங்கே நிலம் வாங்குங்கள் என்று சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக நீங்கள் உங்களுடைய அளவுக்கு குடியுரிமை வாங்க வேண்டும்’’ என்றார்.

அப்போதெல்லாம் குடியுரிமை தாராளமாக கிடைத்துக் கொண்டிருக்கிற காலம். மற்றவர்கள், சீனர்கள் எல்லாம் குடியுரிமை வாங்கி அங்கே நிலைத்து விட்டார்கள். ஆனால், நம்மவர்கள், தமிழர்கள் மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால், அது பயன்தராது என்றார்.  இன்றைக்கு நல்ல அளவில், மலேசியாவில், சிங்கப்பூரில் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். தமிழவேள் ஓர் இயக்கமே நடத்தினார்கள்.  வீடு வீடாகச் சென்று அந்தக் குடியுரிமைச் சீட்டைக் கொடுத்து, ‘‘நீங்கள் குடிமக்கள் ஆகுங்கள்’’ என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூக மாற்றத்தினை அவர்கள் உருவாக்கினார்கள்.

பெரியாருடைய பயணங்கள் முடிவதில்லை!
அவருடைய கொள்கைகள் தோற்பதில்லை!

பெரியார் இன்றைக்கு உலகமயமாகி இருக்கிறார். உலகத்தினுடைய பற்பல நாடுகளிலும் பெரியாருடைய தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார்கள் அன்றைக்கு! அது காரணமாகத்தான் சுபாஷினி போன்றவர்,  இன்றைக்கு அதே போல ஒரு புரட்சிப்பெண், புதுமைப்பெண் ஒரு ஒருங்கி ணைப்பாளராக இருக்கிறார்.‘பெரியாரின் பெருவெற்றி! பெரியாருடைய பயணங்கள் முடிவதில்லை! அவருடைய கொள்கைகள் தோற்பதில்லை! லட்சியப் பயணம் வெல்லும்’ என்பதற்கு அடையாளமாகத்தான் மிகச் சுவையாகச் சொன்ன அனைவருக்கும், எனக்கும் வாய்ப்பளித்து, மகிழ்ச்சியோடு கலந்து கொள்ளக்கூடிய அளவிற்கு, உற்சாகத்தைத் தந்தார்கள்.

என்னுடைய கட்டுரை அப்புத்தகத்தில் இடம்பெறுவதற்கு ஒரே ஒரு காரணம், அது ஒரு தொடர் நிலை. அந்தத் தலைவனோடு முடிந்து விடவில்லை; அந்தத் தலைவனுடைய கொள்கை அவருடைய தொண்டர்களாலும் மேலெடுத்துச் செல்லப்படுகிறது என்பதற்காகத்தான் அந்தக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. அதையும் விடாமல் சொன்ன  ஆய்வாளர் சுபாஷினி அவர்களுக்கும் என்னுடைய நன்றி! கேட்டவர்களுக்கு நன்றி, வணக்கம்!

ஒருங்கிணைப்பாளர்: நன்றிங்க அய்யா!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *