நெல்லை, ஜூலை 26- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது தொடர்பான ஆளுநர் மாளிகையின் உத்தரவுக்கு, தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 33ஆவது பட்டமளிப்பு விழாவில், முதலில் ‘வந்தே மாதரம்’, அதனைத் தொடர்ந்து ‘தேசிய கீதம்’, இறுதியாகவே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட வேண்டும் என்றும், இந்த நடைமுறையை மீறினால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஆளுநர் மாளிகையின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.தமிழ்த்தாய் வாழ்த்தை இந்த உலகிற்குத் தந்த மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் தர வாழ்த்தாக மாற்ற முயற்சிக்கும் ஆளுநருக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் துணை போவதா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சிறு பங்கம் ஏற்பட்டாலும், மாணவர்கள் அனைவரும் பொங்கி எழுந்து தமிழ்த்தாய் வாழ்த்தையே முதலாவதாகப் பாடுவார்கள் என்று அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
