சென்னை, ஜூலை 26- அண்ணா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மய்யம் ஆன்லைனில் எம்பிஏ படிப்பை வழங்கி வருகிறது. பிசினஸ் அனலிட்டிக்ஸ், பொது மேலாண்மை ஆகிய 2 பாடப்பிரிவுகளில் இந்த எம்பிஏ வழங்கப்படும். இந்த 2 ஆண்டுக்கான ஆன்லைன் படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆன்லைன் கல்வி நுழைவுத் தேர்வு என்ற சிறப்பு நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், தற்போது 2026ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மய்யம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 17ஆம் தேதி முடிவடைகிறது. நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை www.onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு:
மீன் உருவம் பொறித்த முழுமையான சுடுமண் பானை கண்டெடுப்பு!
மதுரை, ஜூலை 26- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பழமையான கீழடியில், 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பண்டைய தமிழர்களின் கைவினைத் திறனுக்கும் பண்பாட்டிற்கும் சான்றாக மீன் உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் பானை ஒன்று முழுமையான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பானையானது ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்டதாக உள்ளது. கருப்பு-சிவப்பு என இரு நிறங்கள் கலந்த சுடுமண்ணால் இந்தப் பானை புனையப்பட்டுள்ளது. பானையின் மேல் பகுதியில் மிகத் துல்லியமாக மீன் உருவம் கோட்டுச் சித்திரமாக வரையப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கீழடி அகழாய்வில் ஏற்கெனவே மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறை கிணறு மற்றும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது முதன்முறையாக மீன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பானை உடைந்துபோகாமல் முழு வடிவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பாண்டிய நாட்டின் பண்பாட்டு அடையாளத்தையும், அன்றைய மக்களின் குறியீட்டு முறைகளையும் மேலும் உறுதிப்படுத்தப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
