மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்!
புதுடில்லி, ஜூலை 25 இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்து உள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்ப தாவது: இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் 387-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 844-ஆக உயர்ந்துள்ளது. இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை இடங்கள் 51,348-லிருந்து 1,39,489-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 31,185-லிருந்து 86,360-ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மாவட்ட வசிப்பிட திட்டத்தின்’ கீழ், முதுகலை மருத்துவ மாணவர்கள் தங்களது பயிற்சிக் காலத்தில் 3 மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளில் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
