‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் சிறையாம்! மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 25 ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று (24.7.2026) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசிய கவுரவ பாதுகாப்பு (திருத்த) மசோதாவை, மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார்.

தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வது தண்டனைக்குரிய குற்றம். தேசிய கீதமான ‘ஜன கண மன’-வுக்கு உள்ள சட்டப் பாதுகாப்பை வந்தே மாதரத்துக்கும் அளிக்க மசோதா வழிவகை செய்கிறது.

பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல், கடந்த 1875-ஆம் ஆண்டு நவம்பரில் வங்கதர்ஷன் இலக்கிய இதழில் முதல்முறையாக வெளி யிடப்பட்டது. அந்தப் பாடல் வெளி யிடப்பட்டு 150 ஆண்டுகளான நிலையில், தற்போது இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

தேசியகீதமான ‘ஜன கண மன..’ பாடப்படும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த புதிய மசோதா நிறைவேறினால், தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புக்கு வழங்கும் அதே சட்டப்பூர்வத் தகுதியை தேசிய பாடலான ‘வந்தே மாதர’மும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா சட்டமாவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலைப் பெறு வதற்கு முன்பாக, நாடாளு மன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உள்ளிட்ட இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

தேசிய கவுரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி தேசிய கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றை சேதப்படுத்தினால் அல்லது அவமதித்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

சட்ட பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் நோக்கில், தேசிய கவுரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026-அய், ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித்ஷா வருகிற 27.7.2026 மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *