மீண்டும் மீனவர்கள் கைது:
இந்திய வெளியுறவுத் துறை என்ன செய்கிறது?
கடந்த 21-ஆம் தேதியன்று, ராமேஸ்வரத்தில் இருந்து 420 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்களும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையான தனுஷ்கோடி, தலைமன்னார் இடையிலான பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அப்போது மாலை 7:00 மணிக்கு அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியைக் காட்டி எச்சரித்து விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்துக் கொண்டு தப்பினர்.
அப்போது தங்கச்சிமடம் அந்தோணி பிரசாத் படகை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் பிரவீன் 45, அருள் லொயோலா 43, சபரி வினோத்வின் 42, கீர்த்திசன் 20, செந்தில் 41, கயாஸ் 31, மாலிக்தினார் 63, உள்ளிட்ட விசைப்படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 22-ஆம் தேதி அம் மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீனவர்களை ஆக.,6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மீனவர்களை இலங்கை காவல்துறையினர் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கைதான 9 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி இன்று (ஜூலை 25) மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவே தொடர்கதையா? தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வில் கடல் அலைகளின் கடுமையை விட, இலங்கை அரசின் கொடுமைதான் தொடர்ந்து அச்சத்தைத் தருகிறது. இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள். ஒரே குறுகிய கடற்பரப்பை எல்லையாகப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள். பாக் நீரிணையின் இயல்பான அகலம் 24 கடல் மைல்கள் இருந்தாலும், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கடல்பகுதி 9 கடல் மைல் மட்டுமே! இதில் உலகளாவிய ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்தக் குறுகிய இடத்தில் எல்லையைப் பகிர முடியாது என்பதால் தான், 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால், அநீதியாக, தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி, கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டது இந்திய அரசு. அதன் நீட்சியாகத்தான், இலங்கையில் கடல் எல்லை விரிந்து, இந்தியாவின் கடல் எல்லை சுருங்கிப் போனது. இது 50 ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், மாதந்தோறும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும், இவற்றையெல்லாம் தாண்டி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், வலைகள் பறிக்கப்பட்டு, மீனவர்கள் அவமானப்படுத்தப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
பிப்ரவரி 2026-இல் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், 116 தமிழ்நாட்டு மீனவர்களும் 259 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளார். பிப்ரவரி 23-இல் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது; ஏப்ரல் மாதத்தில் கோடியக்கரைக்குத் தெற்கே காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மீனவர்கள் கைது, படகு பறிப்பு, மே மாதத்தில் கன்னியாகுமரி மீனவர்களின் படகில் ஏற்பட்ட பழுது காரணமாக எல்லை தாண்டியதாகக் கைது, படகு பறிமுதல் என்ற வரிசையில் இப்போது ராமேஸ்வரத்தில் 9 பேர் கைது, படகு பறிமுதல் ஆகியன நடந்துள்ளன.
தமிழ்நாட்டு மீனவர்கள் சட்டத்திற்குட்பட்ட ஒரு தொழிலைச் செய்யும்போது, அவர்களை இப்படித் தொடர்ந்து அந்நிய நாடு ஒன்று சிறைப்பிடிக்கிறதே என்ற குறைந்தபட்ச உணர்வு கூட ஒன்றியத்தை ஆளும் அரசுக்கும், அதன் வெளியுறவுத் துறைக்கும் இல்லை. ஒவ்வொரு முறையும், தமிழ்நாட்டில் போராட்டங்களும், கூக்குரலும் எழுந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் கண்டனம் சொல்லிக் கடிதம் எழுதப்பட்ட பின்னர் தான் ஒன்றிய அரசுக்கு உறைக்கிறது.
இந்நிலையில், தற்போது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்குத் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று இதுவரை தகவல் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்யும்போது த.வெ.க. தலைவர் உறுதி தந்திருந்தார். இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் நிலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைத் தமிழ்நாடு எதிர்நோக்கி உள்ளது. ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் எப்போதும் கேளாக் காதாகவே இருக்கும் என்பதைப் புரிந்து உடனடியாக வலியுறுத்தி, சிறையில் வாடும் மீனவர்களையும், அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளையும் மீட்டுத் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்பு ஒன்றே இதற்கான நிரந்தரத் தீர்வு என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இந்திய – இலங்கை உறவு என்பது, இந்தியாவின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்ப்பதாக இருக்கக் கூடாது.
