சென்னை, ஜூலை 25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கும் மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
டில்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள் போரட்டம், தமிழ்நாட்டிலும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டங்கள் என களத்தில் இறங்கியிருக்கின்றனர்
விரைவு நீதிமன்றங்கள் மூலம் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்றிரவு காணொலி காட்சிப் பதிவு வெளியிட்டிருந்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் போராடும் கரப்பான் பூச்சி அமைப்பினர் (காக்ரோச்கள்), தொடர்ந்து ஜந்தர் மந்தரில் குழுமி வருகின்றனர்.
ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலும் கரப்பான் பூச்சி அமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் களத்துக்கு வர தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை லயோலா, மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வுக்கு எதிரான முழக்கத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எஸ்எஃப்அய் (SFI) மற்றும் டிஒய்எஃப்அய் (DYFI) மாணவ அமைப்புகள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 5 மணி வரை மட்டுமே காவல்துறையினர் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். ஆனால், மாணவ அமைப்பினர் இந்தப் போராட்டத்தை ‘சென்னை ஜந்தர் மந்தர்’ எனப் பெயரிட்டு தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக ‘மே 17’ இயக்கத்தினர் சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட்டுருந்தனர். உழைப்போர் உரிமை இயக்கத்தினர் ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கும் மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
