ஆர்.எஸ்.எஸ். என்னும் ‘டிரோஜன்’ குதிரை
வில்லெடுத்த ஏகலைவன் விரலை வெட்டி
வேதஞ்சொல் சம்புகனின் தலையைக் கொய்து
புல்லெடுத்துப் பூஜைசெய்து ஆட்டங் காட்டிப்
புதைப்பாரே நம்மினத்தை மோட்சம் காட்டி!!
கல்லெடுத்து மாலையிட்டு கலகஞ் செய்து
கல்விக்கே வேட்டுவைக்கும் கயமை! தீமை!!
சொல்லெடுத்து விதைப்பதெல்லாம் பொய்யே! பொய்யே!!
சூழ்ச்சியொன்றே அவர்வழியாம் மெய்யே! மெய்யே!!
செத்தமொழி சமஸ்கிருதம் செழிக்கச் செய்வார்!
தேசமென்றால் ஒன்றென்றே பாடம் சொல்வார்!!
தத்தையென ஆங்காங்கே குறளைச் சொல்லித்
தமிழ்மேலே பொய்ப்பாசம் காட்டி நிற்பார்!!
இத்தரையில் பிறந்தவர்க்கோ “ஆதி வாசி”
என்றபெயர் மாற்றி’வன வாசி’ என்பார்!!
அத்தனைக்கும் மூலமவர் வேதம் என்றே
ஆழ்கிடக்கும் கீழடியை மூடப் பார்ப்பார்!!
‘எல்லோர்க்கும் தாமேலாம்’ என்றே சொல்லி
என்வீட்டில் உன்வீட்டில் மணமும் செய்ய
இல்லாத புனைகதைகள் பலவும் சொல்லி
ஏற்றிவைப்பார் நம் தலையில் இழிவாம் கொள்ளி!!
பல்நூறு ஜாதிவைத்துப் பகையை மூட்டிப்
பசப்பலுடன் நாம்ஹிந்து என்றும் பேசி
“எல்லோர்க்கும் யாவுமெனும்” திராவி டத்தை
இல்லையென்றே ஆக்குதற்கே வருவார் துள்ளி!!
ஆடாமல் வருங்குதிரை! மடமைச் சேற்றில்
அழுத்தவரும் மதக்குதிரை!! சமத்து வத்தைத்
தேடாத தீக்குதிரை! உரிமை கேட்டால்
தீதென்னும் மடக்குதிரை!! மனித நேயம்
நாடாத கொடுங்குதிரை! மதத்தின் பேரால்
நாடழிக்கும் குதிரையிது! அறிவைப் போக்கிக்
காடாக்க வருங்குதிரை காண்பீ ரென்றே
காட்டுகின்றார் வீரமணி கற்போம் நாமே!!
– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
