இதோ ஓர் இலக்கியப் புதுமைத் தென்றல் (3)

5 Min Read

சிலப்பதிகாரத்தில் ஓர் ஆண், இரு பெண்கள். இருவரும் ஒருவனை நம்பியது தவிர வேறெதுவும் அறியாதவர்கள். முதலில் கண்ணகிக்கு மணமாகிறது கோவலனோடு. தொடக்கத்தில் சீராகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கோவலனின் தவறான ஆசைகள், முடிவுகள், திடீர் மனமாற்றம் காரணமாகக் கண்ணகியைவிட்டுமாதவியிடம் செல்கிறான். ஆனால்தண்டனை, அவமானம், துயரம் ஆகியவற்றைத் தனியொருத்தியாய் நின்று அனுபவித்தவள் கண்ணகியே. அந்தக் காலத்தைச் சமூகத்தில் வழக்கமாயிருந்த கொடுமைகளைச் சொல்கிறது கண்ணகியின் கதை. இங்கு ஆண் தவறு செய்கிறான், அதனால் வருகின்ற விளைவுகளைப் பெண் மட்டுமே சுமப்பது கொடூர நடைமுறை. வாழ்க்கைத் துணைவனின் தவறுகளால் பெண்களின் வாழ்க்கை முழுவதும் உருக்குலைந்து போகின்ற நிலையைக் காட்டும் இலக்கியச் சின்னம் கண்ணகியின் வாழ்க்கை.

கணவனின் தவறு அவள் வாழ்க்கையின் அடித்தளத்தையே சிதைத்து விட்டது. ஆனாலும் கணவனைக் காத்திட அவளே துணைநின்று போராடும் நிலைக்கு வருகிறாள் கண்ணகி. ஒரு பெண்ணின் உண்மைக் குரல் புறக்கணிக்கப்படும்போது ஒரு நகரமே எரிந்து சாம்பலாக்கப்படும் என்னும் உறுதியையும் இவள் கதைவழிக் காணமுடிகிறது. இது பெண்களின் உணர்ச்சிப் பொறுப்பை எதிர்பார்க்கும் ஆண் சமூக அமைப்பின் ஒழுங்கற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. அவளின் வாழ்க்கையை “ஆண்முடிவு” என்பதற்குள் அடக்கி வைத்துள்ளது ஆண் சமூகச் சூழலமைப்பு. ஆண் அரசியல் வியூகத்தினால் சிக்கல்களில் சிக்கிக் கொண்டாள்.

வாழ்வியல் சிந்தனைகள்

சமூகமும், அரசும் கோவலன் கைது செய்யப்பட்டதற்கும், நீதியின்றி கொல்லப்பட்ட தற்கும் காரணமாக மாதவியைக் குற்றவாளியாகப் பார்த்தன. இப்படி ஆண்கள் நிறைந்த சமூக அமைப்பினால் நிர்ணயிக்கப்படும் தீர்ப்புகள் பெண்களுக்கு எத்தகைய கொடுமையைச் செய்கின்றன என்பதைக் காட்டும் கதைநாயகி மாதவி. தன் முழுமனதையும் கோவலனுக்குத் தந்துவிட்டு, அவனுக்காகத் தனது கலைவாழ்க்கையே தியாகம் செய்தவள். ஆனால் ஒரு கட்டத்தில் அவளை விட்டு நீங்கிப் போகிறான். இலக்கியத்திலும் கூட ஆணின் விருப்பம் மட்டுமே ஓர் உறவுநிலையைத் தீர்மானிக்கும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. பெண்ணின் உணர்வுகள் மொத்தமாய்ப் புறக்கணிக் கப்பட்ட நிலையை மாதவியின் கதை சொல்கிறது. பழியைச் சுமப்பதோடு, பெண்ணாகப் பிறந்த ஒரு காரணத்தினாலேயே தனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகள் எதையும் எதிர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவள். அத்துடன் சமநிலையற்ற சமூகச் சூழலில் வாழ்ந்ததன் விளைவாகவே கண்ணகி, மாதவி இருவரும் மாறி மாறித் துன்பத்தை அனுபவித்தனர். ஓர் ஆணின் ஆசையினால் அழிந்துபோன இரண்டு பெண்களின் துன்பக்கதையை விளக்கிச் சொல்கிறது இவர்களின் கதை.

இதுபோன்று நன்மை தீமைகளைச் சுமக்கும் பலவித கதைமாந்தர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இராமாயணம். இராமன் நல்லவன், கதையின் தலைவன், இராவணன் கொடுமை செய்தவன், சீதையின் அமைதி பெருமை, சூர்ப்பணகையின் எதிர்ப்புரல் சிறுமை… இப்படி அவரவருக்குப் பிடித்த ஒரு கதைமாந்தனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் நோக்கில் இலக்கியம் படிக்கப்படுகின்றது. கதையை கதையாகப் படிக்கும் வழக்கத்தை விட்டு குறிப்பிட்ட ஒரு கதைமாந்தரைப் போற்றும் பண்பாடு வாசக உலகில் இயல்பாகிப் போனது. ஆய்வு அல்லது விமர்சன நோக்கில் இராமாயணக் கதையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றிய கருத்துகளைத் தொகுத்ததே இந்த நூல்.

ஒரு கதைமாந்தரை காலம் முழுவதும் ஒதுக்கி வைத்து வில்லன் பட்டம் அளிப்பது பெரும் அநீதி. இந்த நிலைக்குக் காரணமானச் சூழல் என்ன? அதன் பின்னணி என்ன? என்பதைப் பொதுப்படையாகச் சிந்தித்து முடிவு செய்யாமல் போனது சமூகத்தின் இழப்பு. அப்படித் தீய எண்ணத்தவள் என்று தீர்மானிக்கப்பட்டவளே சூர்ப்பணகை. வீண்பேச்சு, விளையாட்டு, உடல் சிதைத்தல், அவமானப்படுத்தி விரட்டி அடித்தல் என அவளுக்கு நடந்தது. தீயவள் என்று குறிப்பிட்டச் சூர்ப்பணகையை இதுநாள்வரை எடுத்துக்காட்டாய்ச் சொல்வது ஏன் என்று தெரிந்து கொள்ளும் முயற்சியில் படித்தறிந்த கதைப் பின்னணியை விமர்சனமாக்கி எழுதியதே இந்தப்பகுதி. கம்பனின் நியாயங்களுக்கேற்ப, கதையின் சுவாரசியத்தைத் தூண்டுகின்ற வகையில் அவனின் கதைமாந்தர்கள் அமைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவடைகிறது. கம்பராமாயணம் ஒரு கதையாகப் பார்க்கப்படுவதே சரியான நோக்கு என்பதும் விளங்குகிறது.

அந்தந்தக் கதைமாந்தர்கள் கதையின் பண்பிற்கும், தன்மைக்கும் ஏற்ற வகையில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கம்பன் அமைத்துள்ளான் என்பதே உண்மை. இப்படி வால்மீகி எழுதியதை மாற்றியும், தேற்றியும் கம்பனால் உருவாக்கப்பட்ட ஒரு கதையினை கதையாகப் படிப்போம். அக்கதையினை இரசிப்போம். பிடித்த கதைமாந்தர்களைக் கொண்டாடுவோம். கதையோட்டத்தினை சிறப்பிக்க உதவிய முரண் பாத்திரங்களின் நுணுக்கங்களை அறிந்து தெளிவோம். உண்மைக்கதையாக்கம் அறியாமல் ஒரு கதைமாந்தரின் மீது குற்றத்தைத் திணித்து அநீதி செய்வது தவிர்ப்போம். வீண் வெறுப்புகள் மறப்போம். விருப்பு, வெறுப்பற்ற வாசிப்புப் போக்கே ஆரோக்கியமான இலக்கியங்களைப் படைக்க உதவும் என்பதை உணர்த்தும் முயற்சியோடு, சூர்ப்பணகையைச் சுற்றிலும் கம்பனால் உருவாக்கப்பட்ட கதைமாந்தர்களின் இயல்புகள், செயல்கள் ஆகியவற்றின் எதிர்வினையே இராமன், இராவணன் போரைத் தொடங்கி இராமாயணக்கதையில் ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்தது. இராவணகாவியத்தை உருவாக்கியது என்பதை உறுதிபடக் கூறுவதே இந்தப் பகுதியின் நோக்கம்.

சமூக என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஆணாதிக்க மனநிலையே. காலங்கள் மாறியும் மனநிலை மாறாமல், அதை மாற்றாமல் இருப்பதே இன்றும் பெண்கள் சமநீதிக்காகப் போராடுகின்ற சூழலின் வேறாகத் திகழ்கின்றது. சமத்துவம் என்பது பெண்ணுக்குத் தரப்படும் சலுகை என்ற எண்ணம் மாறி, அது ஒரு மனிதனுக்கான அடிப்படை உரிமை. பெண்களின் வரலாறு பெரும்பாலும் சொல்லப்படாத துன்பங்களாலும், மறைக்கப்பட்ட வலிகளாலும் நிரப்பப்பட்டதாகும். தொடர்ந்து நடந்த சமூக மாற்றத்திற்காகப் போராடிய பெரியார்களின்னால் மாற்றத்திற்கான பாதை பிறந்தது.

பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களின் முடிவுகளே பெண்ணின் வாழ்க்கையை வடிவமைத்தன. இந்த முறை இயற்கையின் விதியல்ல. மனிதன் மனிதமற்று உருவாகிய சமூகசதி. ஆனால் மரபுகளும், பெயர்களும், பாகுபாடுகளும் மாற்றிச் சுற்றிக் கொண்டிருக்கிறது இன்னும் பெண்களைச் சுற்றி. உண்மையான சமத்துவம் பெற்று, அது நிலையாகிப் பயனாகும் வரை அதற்கான போராட்டக் குரல் ஓயாது. ஒரு பெண் பேசுவது என்பது வெறும் குரல் அல்ல. ஒரு தலைமுறையின் விழிப்பு.

சூர்ப்பணகை, சீதை, பாஞ்சாலி, மாதவி, கண்ணகி போன்ற பெண்களின் குரல்கள் மறைக்கப்பட்டு, ஆண்களின் வீரம் மட்டுமே போற்றப்பட்ட நிலையே இலக்கியத்தில் நடந்தது. சூர்ப்பணகை போன்று போராடிய பெண்களின் குரல் ஒரு விழிப்புணர்வு, ஒரு போராட்டக்குரல், முந்தைய தலைமுறையின் அறிவுரை. பெண்ணின் குரல் ஒடுக்கப்படுகின்ற சமூகம் மாறும்வரை, சூர்ப்பணகை போன்று குரலற்றவராகி நிற்கும் பெண்களின் வரலாறு தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும்.’’

(‘தமிழ்க்காரி’யின் ‘சூர்ப்பணகை:
பெண் – உடல் – அரசியல்’  நூலில் பக்கம் 44 – 50)

இலக்கியங்களில் மீள் வாசிப்பு மட்டும் போதாது – மீள் பார்வை – தேவை. தேவை மீட்டுருவாக்கம் அதன் கனிந்த பயனாக இருக்க வேண்டும்.

புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’   கம்பனின் காவியப் பெருமைக்குச் சற்றும் குறையாத காவியம். அதை எத்தனை கம்ப  ரசிகர்கள், கம்பர் ஆய்வாளர்கள், காலட்சேப தொழில் வல்ேலார் புரிந்து பயன்படுத்தியுள்ளனர்?

‘‘கம்பனை இலக்கிய  நயத்திற்காகவாவது படிக்க வேண்டாமா தோழரே?’’ என்று கேட்கும் ’முற்போக்கு’த் தோழர்களைப் பார்த்து, அதே கேள்வியை சற்று திருப்பிக் கேட்கலாம்.

‘‘காவிய நயத்துக்காக வேண்டுமென்றால் புலவர் குழந்தையின் ‘இராவண காவியத்தை’ப் படிக்கலாமே?’’

நமது சிலம்பொலி செல்லப்பனார் இதிலும் புது வழிகாட்டி, 100 பொழிவுகள் ஆற்றியுள்ளாரே!  ஆனால் ஏனோ கம்பனை ஒரு வழி பாதையாக மட்டும் ஏற்றவர்கள், இதை ஏற்க மறுக்கிறார்களே?

புதிய சிந்தனை   வரவேற்கக் கூடிய விடியல் தேவை அல்லவா? அதற்கு ஒரு வெளிச்சம்தான் இந்த ‘தமிழ்க்காரி’யின்  நூல்!

(நிறைவு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *