விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாவது ஆரோக்கியமானதல்ல!

4 Min Read

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில்  ஜூன் 28, 1977 அன்று ஹரிஹர் சரண் என்பவர் கொலை செய்யப்பட்டதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கில் ராஜ் கிஷோர், ஹீரால் லால், தியோ பிரசாத் உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்தே தங்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டை மறுத்து வந்தனர். ஆனாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது. 1981 ஆம் ஆண்டு, விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, நவம்பர் 2011 இல் தண்டனைகளை உறுதி செய்தது. அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனிடையில் மூவர் இறந்து போய்விட்டனர். மிச்சமிருந்தவர்கள் தொடுத்த பிணை வழக்கில் 2013-இல் இருவருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஹீரால் லால் என்பவருக்கு மட்டும் பிணை மறுக்கப்பட்டது. பின்னர் உ.பி. அரசு அவருக்குத் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலை செய்தது.

தற்போது அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம் இதனிடையில் 49 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆறுபேரின் வாழ்க்கை ஒரு வழக்கினால் நாசமானது. ஆயுள் தண்டனையை விட அதிகக் காலம் அவர்கள் சிறையில் கழித்திருக்கிறார்கள். சிலர் வழக்கு முடியும் முன் இறந்தும்விட்டார்கள்.

ஹீரால் லால் மட்டுமல்ல… இந்தியச் சிறைகளில் இப்படி வாடுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 39ஆயிரம் பேர். இந்தியாவில் சிறையில் உள்ள மொத்தப் பேரில் 76% பேர் வழக்கு விசாரணை முடியாமல் சிறை வைக்கபப்ட்டிருப்போராவர். ஆண்டுக்காண்டு இந்த விகிதம் கூடிக்கொண்டேயிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. குற்ற விகிதங்களின் அதிகரிப்பும் (2023-ல் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 448.3 குற்றங்கள் – முன்பிருந்ததை விட 7.2% உயர்வு) தொடர்ந்து நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றின் காரணமாகவும், 2023-ல் 4,22,238-ஆக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையை விட, 4% அதிகரித்துள்ளதைத் தற்போதைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் மொத்தம் 5 கோடியே 25 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுவும் கடந்த ஆண்டை விட 10 லட்சம் அதிகம். இவற்றுள் ஏறத்தாழ இரண்டு கோடி குற்றவியல் வழக்குகளும் அடங்கும். கீழமை நீதிமன்றங்களில் 4.5 கோடி வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 62 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையிலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையிலும் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 28000 விசாரணைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களின் இருபதாண்டுகளுக்கு மேலாக இன்னும் விசாரணைக் கைதிகளாகவே இருப்போர் பலர்; அதில் இஸ்லாமியர்கள் கணிசமானவர்கள்.

சிறைகள் போதவில்லை; கைதிகள் மொத்தம் மொத்தமாக அடைக்கபப்ட்டுள்ளனர். நீதிமன்றங்களும், நீதிபதிகளும் போதவில்லை; வழக்குகள் நிரம்பி வழிகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு 50,000 பேருக்கும் ஒரு நீதிபதி என்ற விகிதத்தில், வெறும் 21,000 நீதிபதிகள் மட்டுமே உள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் மிக மெதுவாகவே நடைபெறுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில், ஒரு நீதிபதி 2,000 வழக்குகள் வரை கையாள வேண்டிய சூழல் உள்ளது; இதனால் சாதாரண வழக்கு விசாரணைகளில் கூட 2 முதல் 5 ஆண்டுகள் வரை தாமதம் ஏற்படுகிறது.

உச்சநீதிமன்றம் வரைக்கும் வந்து வாதாட வாய்ப்பிருக்கும் ஹீரால் லாலுக்கே தன்னை விடுவித்துக் கொள்ள 49 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இன்னும் வழக்காட வாய்ப்பின்றி வறுமையில் இருப்போர் நிலையை எடுத்துச் சொல்ல முடியுமா?

இந்தியாவில் விசாரணைக் கைதிகளின் அவல நிலையைச் சரிசெய்ய விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். விடுதலை பெறுவதற்கு ‘வறுமை’  தடையாக அமையாத வகையில், மேலும் தாராளமான, சமத்துவமான பிணை முறை உருவாக்கப்பட வேண்டும். விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையில் பாதியை நிறைவு செய்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க வழிவகை செய்யும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) 436ஏ பிரிவினைச் (தற்போது BNSS-இன் பிரிவு 479) சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்று நீதித் துறை சீர்திருத்தத்தை வேண்டுவோர் பரிந்துரைக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல், நீதித்துறை தாமதங்களைக் குறைப்பதற்காக, அதிக நீதிபதிகளை நியமிக்க வேண்டியதன் அவசியத்தையும், விரைவான விசாரணைமூலம் வழக்கை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார ரீதியாக நலிந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு இலவசச் சட்ட உதவியை வலுப்படுத்துதல், சிறையின் தரத்தை மேம்படுத்துதல், விசாரணைக் கைதிகள் தண்டனை பெற்ற கைதிகளிடமிருந்து தனியாகத் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை சிறைத்துறை மூலம் நடைமுறைப்படுத்த  வேண்டும். சமத்துவம், கண்ணியம், தனிநபர் சுதந்திரம் ஆகிய அரசியலமைப்பின் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக, குற்றவியல் நீதி அமைப்பிற்குள் நிலவும் பொருளாதாரப் பாகுபாட்டைக் களைந்து, தேவையற்ற கைதுகளையும், அதிகப்படியான விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலையும் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

மனித சமூகத்தின் மேன்மை என்பது குற்றங்களைக் குறைப்பதிலும், தண்டனைகளை முந்தைய காலத்துக் காட்டுமிராண்டித் தனங்களிலிருந்து மாற்றுவதிலும் தான் இருக்கிறது. ஆனால், விசாரணைக் காலமே தண்டனைக் காலத்தை விட அதிகமாகியுள்ள நாட்டில் நாம் செல்ல வேண்டிய தொலைவு எவ்வளவு நீளமானது என்பதை எண்ணிப் பார்த்தாலே மலைப்பு ஏற்படுகிறது. எதுவொன்றும் கடினமானதல்ல… மனிதர்கள் நினைத்தால்! மேற்சொன்ன பரிந்துரைகளை அரசும், நீதித் துறையும் கனிவுடன், துணிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *