டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அயோத்தி ராமன் கோயில் நிதி திருட்டு விவகாரம்: சிறீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை பொதுநல அமைப்பாக மறுசீரமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என நிர்மோகி அகாரா மனு தாக்கல் செய்துள்ளது. அறக்கட்டளையில் முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அதன் செயல்பாடுகளுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்பு அவசியம் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
* வந்தே மாதரம் அவமதிப்பு குற்றமாக்கும் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. வந்தே மாதரம் பாடுவதை அவமதித்தல் அல்லது தடைசெய்தல் குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* டில்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு: நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில் நீட் முறைகேடு, கட்சித் தாவல் பிரச்சனைகளை எழுப்ப வாய்ப்பு
* ஆதிதிராவிடர் மதமாற்றம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறும் தலித்துகள் பட்டியல் ஜாதி (SC) தகுதியை இழக்கின்றனர் என நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மதமாற்றத்திற்கு பிறகும் தொடரும் ஜாதி பாகுபாட்டை கருத்தில் கொண்டு சட்டத்தில் மாற்றம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் திரளாக பங்கேற்குமாறு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அழைப்பு விடுத்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். அவரது அழைப்பை ஏற்று ஏராளமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அனைத்தும் காவி மயம்: பீகாரில் உள்ள 551 மாதிரி பள்ளிகளுக்கும் காவி நிறம் பூச மாநில அரசு எடுத்துள்ள முடிவு, எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமல்லாமல், பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான ஜே.டி.(யு)விடமிருந்தும் கேள்விகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தற்போதைய மக்களவைத் தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களை பாதிக்கக் கூடாது என்றும், அதற்கான நடைமுறை குறித்து ஒன்றிய அரசு தெளிவு அளிக்க வேண்டும் என்றும் எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
தி இந்து:
* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கல்விப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற உறுதி கிடைத்தால் சோனம் வாங்சுக் தனது பட்டினிப் போராட்டத்தை முடிப்பார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உள்ள நிலையில், சி.ஜே.பி. பேரணியை முன்னிட்டு காவல்துறையினர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தி டெலிகிராப்:
* தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு நன்கொடை மசோதாக்கள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* புதிய கட்சித் தாவல் தடுப்பு சட்டம் தேவையா என்பதை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார். அரசியல் கொள்கை வேறுபாடுகள் இன்றி கட்சி மாறும் “ஆயா ராம், காயா ராம்” வகை சந்தர்ப்பவாத அரசியலை கட்டுப்படுத்தவும், உண்மையான கொள்கை வேறுபாடுகளுக்கு உரிய தீர்வு காணவும் புதிய சட்டம் குறித்து விவாதம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா
