பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்திய பின்னர் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர திட்டம்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 19 முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனிச் சட்டங்களை மாற்றி,அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பாஜக கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு மக்களவை தேர்தல் அறிக்கையிலும் பாஜக இதை குறிப்பிட்டு வருகிறது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக பொது சிவில் சட்டம் பற்றி பேசுவதாக பாஜக மீது புகார்கள் உள்ளன. எனினும், பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக படிப்படியாக அமல்படுத்தவும், அது மக்களிடம் பெறும் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் அமல்படுத்தவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவை தேர்தல்களுக்கு சற்று முன்பு உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. உத்தராகண்டில் ஆய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. பாஜக ஆளும் உத்தர பிரதேசத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தனிச் சட்டங்களை சீர்திருத்துவது தொடர்பான கருத்துகளை தெரிவிக்க நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத் துறை நிலைக் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘‘மூன்று முக்கிய வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்த போது, விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அவற்றை திரும்பப் பெற வேண்டி வந்தது. இந்த நிலை, பொது சிவில் சட்டத்தில் வராமலிருக்க, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் அமல்படுத்திய பின்னர் தேசிய அளவில் சட்டம் கொண்டுவர முயற்சிப்போம். இதனால், தனிச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்கள் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்’’ என்று தெரிவித்தனர்.

முத்தலாக் தடை சட்டம்

இதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறி மணவிலக்கு செய்வதை தடை செய்யும் சட்டத்தை ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு கடந்த 2017-இல் கொண்டு வந்தது. இதன் பலன் 2019 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்தது. உ.பி. முஸ்லிம் பெண்கள், பாஜகவுக்கு வாக்களித்தனர். இதேபோல் தனிச் சட்டத்திலும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகப் புகார்உள்ளது. எனவே, இவர்களது வாக்குகளுக்காக, பாஜக 2024 மக்களவை தேர்தலை குறி வைத்து பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது.

தமிழ்நாடு குழுவுக்கு எதிர்ப்பு

பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துகள் அறிவது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத் துறை நிலைக் குழு அளித்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இக்குழு பொது சிவில் சட்டத்தை வரவேற்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி அதை கலைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்டிபிஅய், அய்க்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் கடிதங்கள் அனுப்பியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *