கருநாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்புத் தீர்மானம் : காங்கிரசுக்கு நெருக்கடி

3 Min Read

சென்னை, ஜூலை 19  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றச் செயலகத்தில் அறிவிக்கை அளித்துள்ளனர். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் புயலைக் கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கி ஆக.13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில், கடந்த முறை கடும் எதிர்ப்பால் தள்ளிவைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்த ஒன்றிய  பாஜக அரசு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதையடுத்து தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல், அயோத்தி ராமன் கோயில் நில மோசடி சர்ச்சை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், வெளியுறவுக் கொள் கையில் ஒன்றிய அரசின் தொடர் தோல்விகள் மற்றும் சோனம் வாங்சுக் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங் களை எழுப்ப ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதில் வழக்கம்போல திமுக தங்களுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பும் என காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் நம்பியிருந்தன.

இந்தச்சூழலில் சில நாள்களுக்கு முன்பு ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டு வரப்படும் பட்சத்தில், அதில் உள்ள உள்ளடக்கங்களை நாங்கள் பரிசீலிப்போம். அது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நலனுக்கு எதிராக இருந்தால் மட்டுமே திமுக எதிர்க்கும். மாறாக, ஒன்றிய அரசு எங்களது பரிந்துரைகளை ஏற்றிருந்தால் அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து நேற்று (18.7.2026) டில்லியில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத் திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப் போது, ‘மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் எதிர்க் கட்சிகளுடன் திமுக இணைந்து நிற்கும்’ என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் நம்பிக்கை தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்களுக்கு, மேகதாது விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக அறிவிக்கை அனுப்பினர்.இது குறித்து திமுகவின் எக்ஸ் பக்கத்தில், ‘‘நடைபெறவுள்ள நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ள பிற அலுவல் களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

காவிரி ஆற்றின் மீது கருநாடக அரசால் முன்மொழியப் பட்டுள்ள மேகதாது அணை குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இதுதொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவ காரத்தை விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம்கொண்டு வர வேண்டும்’ என மக்களவை செயலருக்கு நாடாளுமன்ற திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை செயலருக்கு மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவாவும் அறிவிக்கை அனுப்பியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திமுக தலைவர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘மேகதாது விவகாரத்தில் காங் கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை நாடாளுமன்றத் தில் தோலுரித்துக் காட்ட வேண்டும்’ என முடிவு செய்யப் பட்டதாகத் தகவல்கள் கசிந்தன. அதை உறுதி செய்யும் விதமாக தற்போது டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் அறி விக்கை அளித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *