புதுடில்லி, ஜூலை 18 டில்லி பாஜக அரசுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் விநியோகம் செய்ததில் சுமார் ₹650 கோடி வரை முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் ராஜீவ் ரங்கிலா இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டார். நீரவ் மோடி, விஜய் மல்லையா வரிசையில் தற்போது ராஜீவ் ரங்கிலாவும் வெளிநாட்டுக்குத் தப்பி சென்று இருப்பது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.650 கோடி மருத்துவ ஊழல்
டில்லி மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, டில்லி லக்ஷ்மி நகரைச் சேர்ந்த மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகம் தொடர்பான புதிய ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders) வெளியிடப்பட்டன. இந்த ஒப்பந்தப் புள்ளிகளை முறைகேடான வழிகளில் பெற்று, டில்லி அரசுக்கு மருத்துவப் பொருட்களை விநியோகிக்கும் உரிமத்தை ராஜீவ் ரங்கிலா பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, இவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு அரசுக்கு விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுப் கருவூலத்திற்கு சுமார் ரூ.650 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது.
துணை நின்ற அதிகாரிகள் கைது
போலி நிறுவனங்களைத் தொடங்கி இவ்வளவு பெரிய ஊழலைத் தனியாகச் செய்திருக்க முடியாது என்பதால், இந்த மோசடிக்கு உடந்தையாகவும் துணையாகவும் இருந்த மூன்று உயர் அரசு அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ஏற்ெகனவே கைது செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையில் முதன்மைக் குற்றவாளியாக ராஜீவ் ரங்கிலாவின் பெயர் இடம் பெற்றிருந்தும், ஊழல் தடுப்புப் பிரிவு அவரை ஒரு மாதத்திற்கும் மேலாகக் கைது செய்யாமல் காலதாமதம் செய்தது ஏன் என்ற கேள்வி தற்போது பலமாக எழுந்துள்ளது. மேலும், அவர் தாக்கல் செய்த பிணை (ஜாமீன்) மனுவை அரசுத் தரப்பு எதிர்க்கவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
முக்கியக் கேள்வி
தலைமறைவான ராஜீவ் ரங்கிலாவை கைது செய்யாமல் காலதாமதம் செய்து, அவருக்குப் பின்னால் இருந்து பாதுகாத்தது யார்? அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விரிவான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி, விஜய்மல்லையா, மோகுல் ஷோக்ஷி, குப்தா பிரதர்ஸ் போன்றோர்கள் பிரிட்டன், மேற்கிந்திய தீவு நாடுகள் மற்றும் மொனாக்கோ போன்ற நாடுகளில் சுகபோகமாக வாழ்கின்றனர் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்களை இந்தியா கொண்டுவர முடியவில்லை அவர்கள் வரிசையில் மற்றுமொரு மக்களின் பணத்தை தின்று ஏப்பம் விட்ட குற்றவாளி ராஜீவ் ரங்கீலா இணைந்துள்ளார்.
