புதுடில்லி, ஜூலை 18– தென் பெண்ணையாறு நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டு மென்று வழங்கிய தீர்ப்பை மறுபரி சீலனை செய்யக்கோரி கருநாடக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்பெண்ணையாறு
காவிரி நதிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நதி தென் பெண்ணையாறாகும். இந்த நதி கருநாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட் டங்கள் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.
இந்த, தென் பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேயா நதியின் குறுக்கே “யர்கோல்” என்ற பகுதியில், கருநாடகா அரசு அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்தப் பகுதியில் அணை கட்டப்பட்டால் கீழ் பாசன மாநிலமான தமிழ்நாட்டிற்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இது ஆற்று நீரை நம்பி இருக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டியும், கருநாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாகவும், எனவே அணை கட்டுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் கருநாடகா இடையேயான தென் பெண்ணையாறு நீர் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்குமாறு கடந்த 2024 ஜனவரி மாதம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, ஒன்றிய நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது. இக்குழுவின் கூட்டம் கடந்த 2024 அக்டோபர் மாதம் டில்லியில் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
நடுவர் மன்றம்
இந்நிலையில் தென் பெண்ணை யாறு வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ‘நீர் பங்கீடு குறித்து தீர்வு காண்பதற்காக குழு அமைக்கப்பட்டு, இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வியடைந்து விட்டது. எனவே ஒன்றிய அரசு நடுவர் மன்றம் அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு கருநாடக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
அப்போது, ஒன்றிய அரசு தரப்பில், நீர் பங்கீடு விவகாரத்தில் ஓர் இறுதி முடிவை எட்ட ஒன்றிய அரசு உதவுவதற்கு தயாராக இருந்தும் இரு மாநில அரசுகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறியது. இதனைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அதில், ஒன்றிய அரசு ஒரு மாத காலத்திற்குள் தென் பெண்ணையாறு நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை அமைத்து, அதிகாரப்பூர்வமாக அரசு இதழில் அறிவிப்பை வெளியிட வேண்டுமென ஆணையிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தென்பெண்ணை யாறு நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க 6 மாத காலம் ஒன்றிய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
மனு தள்ளுபடி
இந்நிலையில், நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமென்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கருநாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மறுஆய்வு மனு ஜூலை 14ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சேம்பரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தென் பெண்ணையாறு நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய் வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் காண இயலவில்லை என தெரிவித்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
