மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்! இணையவழி சுய கணக்கெடுப்பு வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

3 Min Read

சென்னை, ஜூலை 18- தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முறைப்படி தொடங்கியுள்ளன. இதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் தங்களின் விவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவுசெய்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுய கணக்கெடுப்பு

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு: “இது வெறும் எண்ணிக்கை அல்ல, வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்.

மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இணையவழி சுய கணக்கெடுப்பினைப் பதிவு செய்த பிறகு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது:

வளர்ச்சியின் அடிப்படை: மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானது. இது வெறும் எண்ணிக்கையல்ல; மக்கள் வழங்கும் துல்லியமான தகவல்கள்தான் அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் அடிப்படையாகும்.

உண்மைத் தகவல்கள்: எனவே, கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு குடும்பமும் தங்களின் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும். சுய கணக்கெடுப்பு வசதி: பொதுமக்கள் அனைவரும் se.census.gov.in என்ற இணையதளம் மூலமாகச் சுய கணக்கெடுப்பு செய்துகொள்ளலாம். நான் ஏற்கெனவே என் விவரங்களைப் பதிவு செய்துவிட்டேன்.

ரகசியம் காக்கப்படும்: நீங்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைக்கப்படும். மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த கணக்கெடுப்பை அனைவரும் இணைந்து வெற்றிகரமாக முடிப்போம்.

“முழு மனதுடன் பங்கேற்க வேண்டும்”
– ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது:

“அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்புத் தகவல்களை இணையவழியில் எளிதாகப் நிறைவு செய்ய முடியும். பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை விரைவாக நிறைவு செய்ய வேண்டும்.

இணையவழி சுய கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்களுக்கு, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு நடைபெறும். அப்போது கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து விவரங்களைச் சேகரிப்பார்கள். இந்த வரலாற்றுப் பணியில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இருவரும் தங்களது வாழ்த்துக்களுடனும், கோரிக்கைகளுடனும் இச்செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

 

மாணவர்களுக்கு எளிதாக கல்விக்கடன் கிடைக்க

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்: அமைச்சர் தகவல்!

சென்னை, ஜூலை 18- தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொருளாதாரச் சூழல் காரணமாக தங்களது படிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு பிணையின்றி எளிதாகக் கல்விக்கடன் கிடைக்க புதிய வசதியைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், புதிய திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்த விவரங்களை வெளியிட்டார்.

மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள்

கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்விக்கடன் நடைமுறைகளை விரைவுபடுத்தவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாணவர்கள் எளிதாகக் கல்விக்கடன் பெற வழிகாட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி பேராசிரியர் அல்லது பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்கள் மூலம் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

நேரடி உதவி: இவர்களுக்கென தனிச் சிறப்பாக கைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் இவர்களைத் தொடர்புகொண்டால், கல்விக்கடன் குறித்த அனைத்து விவரங்களையும் வழங்குவதோடு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளையும் செய்து தருவார்கள்.

ரூ.3,000 கோடி கல்விக்கடன் இலக்கு

கடந்த 2025-2026ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் 1.02 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,860 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடன் உச்ச வரம்பு உயர்வு?

தற்போது பிணையின்றி ரூ.7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *