– மின்சாரம்
சிறீவில்லிபுத்தூர் சங்கதி என்ன?
“பூணூல் போட்டுக்கிட்டு என்ன வேலை பண்ணிருக்கான்? அவனை சும்மா விடக்கூடாது. ஒரு கையியாச்சும் வெட்டினால்தான் அடுத்து எந்த பொம்பள மேலயும் கைவக்க மாட்டான்” என்று ஆவேசம் காட்டியபோது, சொந்தபந்தங்கள், இருக்கு. அவனை ஏதாச்சும் பண்ணிட்டா, இவ அசிங்கப்பட்டு தெருவுல நிற்கணும் தேவையா இது? பிரச்சனைய இத்தோடு விட்ருங்க என்று வேகத்தை தணித்துவிட்டனர்.
இந்தக் கசமுசா விவகாரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பல லட்சங்களை இறைத்திருக்கிறார்கள். சிறீ வில்லிபுத்தூரில் சமூக ஆர்வலர் ஒருவர் கொதித்துப்போய்ச் சொன்ன இந்த விவகாரத்தை உறுதி செய்த அரசியல் பிரமுகரான தேரடி மாரியப்பன். “சாமியை நம்பாதவன்கூட கோயிலை மதிப்பான். வாழ்க்கை, வசதின்னு எல்லாத்தையும் இவங்களுக்கு அள்ளிக் கொடுக்கிற அந்தக் கோயில்லயே தப்பு பண்ணுறத எப்படி பொறுத்துக்க முடியும்?” என்றார் குமுறலுடன்.
தந்தை பெரியார் கூற்றைக் கேளீர்!
“ஒரு சிறிய குட்டிக் கடவுள் இருக்கும் வரை நாம் சூத்திரர்கள்தான்” (‘விடுதலை’, 3.2.1956, பக்கம் 4) என்று தந்தை பெரியார் சொன்னதை நினைத்துப் பார்த்தால் எந்த நிலையிலும் கடவுளையும், மதத்தையும், கோயிலையும் குருமூர்த்தி வகையறாக்கள் கட்டிக் காக்கத் துடிப்பதன் ரகசியம் எளிதில் விளங்குமே!
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்கள் சிலரோடு உல்லாசமாக இருந்து, அதை தன் செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து ரசித்து வந்த அர்ச்சகர் தேவநாதன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே வழக்கில் சிக்கினார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில், சிறீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில், தேவநாதன் பாணியிலேயே லீலைகள் புரிந்திருக்கிறார் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார். பக்தியை முன்னிறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ராமராஜ்ஜிய ரத யாத்திரை, தமிழகத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த வேளையில், இந்த விவகாரம் அம்பலமாகிவிடக் கூடாது என்று ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்கள். அனைத்தையும் மீறி, கோயில் கருவறை ரகசியங்களுக்குள் நாம் ஊடுருவினோம்.

சிறீவில்லிபுத்தூரில் சிறீ ஆண்டாள் கோவில், வடபத்ரசாயி கோவில், தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருவண்ணாமலை-சிறீ நிவாச பெருமாள் கோவில் ஆகிய மூன்று வைணவகோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் சிறீவில்லிபுத்தூரில் உள்ள பண்ணையார் பட்டர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரம்பரை பரம்பரையாக, முறைமை வைத்து, மூலவர் இருக்கும் கருவறையில் தீபாராதனை காட்டி, பூஜைகள் செய்து, பக்தர்களிடம் தட்டுக் காணிக்கை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் பட்டாச்சாரியார் பத்ரி நாராயணன்.
சிறீவில்லிபுத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், திருவண்ணாமலையில் உள்ள மலைக்கோவிலான சிறீநிவாச பெருமாள் கோவிலில், பிரகாரம், உண்டியல் காணிக்கை செலுத்துமிடம், நகை அறை மற்றும் கருவறை ஆகிய 4 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறீ ஆண்டாள் கோயில் உட்பட சிறீநிவாச பெருமாள் கோவிலிலும் பட்டாச்சாரியராக இருந்து வருகிறார் பத்ரி. இவர்தான், சிறீநிவாச பெருமாள் கோவில் கருவறைக்குள் பெண் பக்தைகளை அழைத்துச் சென்று, பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.
ஆண்டாள் கோவில் அருகிலுள்ள பத்ரியின் வீட்டுக்குச் சென்றோம். பத்ரி ஊரிலேயே இல்லை என்றார்கள் எரிச்சலுடன். அவரது கைபேசி எண்ணுக்கு டயல் செய்தோம்; குறுந்தகவல் அனுப்பினோம். ரெஸ்பான்ஸ் இல்லை. பத்ரிக்கு எதிரான வீடியோ ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு, பணம் பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டதால், பத்ரி தலைமறைவாகிவிட்டார் என்று தகவல் சொன்னார்கள் ஆண்டாள் கோவில் வட்டாரத்தில்.
சிறீ ஆண்டாள் கோவில் அலுவலகத்தில் செயல் அலுவலர் நாகராஜனை சந்தித்தோம். “இது அஃபிசியல் மேட்டர்…. வெளியில் சொல்ல முடியாது” என்று முதலில் தயங்கியவர், பிறகு “இது வெளியில் தெரிந்தால் கோவிலுக்குத்தான் கெட்டபெயர். யார், யாரோ அவனை மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்கள். அதனால்தன், மூன்று நாட்கள் வரை அவன் செய்த குற்றம் வெளியில் தெரியவில்லை. தக்கார் ரவிச்சந்திரன் வரைக்கும் தகவல் போனது. தக்கார் சொன்னதன் பேரில், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தோம். பத்ரியைக் கூப்பிட்டு சத்தம்போட்டோம். அவனிடம் ‘கருவறையில் ஒரு பெண்ணிடம்?’ என்று விசாரித்தபோது ‘பிரசாதம் கொடுத்தேன்…’ என்று மழுப்பினான். அவனை அடிக்காத குறைதான். மற்றபடி, உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியேற்றிவிட்டோம். பத்ரி கோவில் ஊழியரும் கிடையாது; அரசு ஊழியரும் கிடையாது. பூர்வீகமாக முறை வைத்து பூஜை பண்ணுபவர். ஆனாலும், கோவில் கருவறையில் இழிவான செயலில் ஈடுபட்டவரை கோவிலில் வைத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவனும் ஊரைவிட்டே ஓடிட்டான்” என்றார்.

சி.சி.டி.வி. கேமரா இருந்தும், சிறீநிவாச பெருமாள் கோயிலுக்கு தனியாக வரும் பெண் பக்தைகளை நிதானமாக நோட்டம்விட்டு, கருவறைக்குள் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் பத்ரி. கோவிலுக்கு வரும் மூன்று பெண் பக்தைகளிடம் பத்ரி தொடர்பு வைத்திருந்தது, நட்பு வட்டத்தில் உள்ள ஒருவனுக்குத் தெரிந்துவிட, “நீ மட்டுமே அனுபவித்தால் எப்படி? கருவறைக்குள் நானும் வருவேன்; உன் வலையில் சிக்கிய பெண்களை எனக்கும் கொடு. இல்லையென்றால், உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவேன்” என்று மிரட்டியிருக்கிறான். பரிகாரம் பண்ணுவதாகச் சொல்லி பக்தர்களிடம் கல்லா கட்டி, செல்வச் செழிப்போடு வாழ்ந்துவருபவன் என்பதால், கை நிறைய பணத்தைக் கொடுத்து நண்பனைச் சரிக்கட்ட முயற்சித்திருக்கிறான் பத்ரி. அவனோ பத்ரியிடம் முரண்டு பிடித்திருக்கிறான். தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை என்ற கோபத்தில் ஒரு கட்டத்தில்… கருவறையில் பத்ரி ஒரு பெண்ணுடன் இருந்த இரண்டரை மணி நேர் சி.சி.டி.வி. ஃபுட்டேஜை கைப்பற்றி, பிளாக்மெயில் செய்திருக்கிறான். இதே ரீதியிலான பிளாக் மெயிலில் வேறு சிலரும் ஈடுபட, விவகாரம் கோவில் நிர்வாகம்வரை போய், விசாரணை நடந்து, பத்ரியை வெளியேற்றிவிட்டனர்.
சிறீ ஆண்டாள் கோவில் நிர்வாகமே அந்த சிசிடிவி பதிவை முற்றிலுமாக அழித்து, பத்ரியின் குற்றச்செயலை மறைத்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து புகார் எதுவும் வராததால், சட்ட நடவடிக்கை குறித்த அச்சமின்றி, ஜாலியாக எங்கெங்கோ சுற்றித் திரிகிறானாம் பத்ரி.
தனியாக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் ஜாக்கிரதை! என, தமிழ்நாட்டில் போர்டு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நம்மிடம் சீரியஸாகப் பேசினார். பத்ரி விவகாரத்தை நன்கறிந்த உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர்!
– ‘நக்கீரன்’, 2018 மார்ச் 27-29
* * * * *
கோயிலில் கொள்ளை அடிப்பவர்கள் பக்தர்களே!
குமுதம்: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத் தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?
ஜெயேந்திர சரஸ்வதி (காஞ்சி சங்கராச்சாரியார்) பதில்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அநேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள், நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகிவிட்டது, பணமுடை அதிகரித்துள்ளது.
(‘குமுதம்’ 12.09.1996)
* * * * *
சிதம்பரம் நடராஜன் கோயில் ஆண்டு வருமானம் ரூ.37,199, செலவு ரூ.37,000, மீதி ரூ.199. கோயில் தீட்சதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்.
தி.மு.க. ஆட்சியில் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கும் கீழ் வந்த நிலையில், 15 மாத கோயில் வருமானம் ரூ.25,12,485.
* * * * *
கொள்ளை அடிக்க உகந்த இடம் கோயிலே!
அயோத்தி கோயில் நன்கொடை எண்ணும் ஊழியா்கள் 50% போ் திடீா் ராஜிநாமா
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களது வேலையை திடீா் என ராஜிநாமா செய்துள்ளனா்.
அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்த வரும் பக்தர்கள் செலுத்திய நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் நன்கொடை எண்ணும் ஊழியா்கள் உள்ளிட்ட 8 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். நன்கொடை கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனா். கோயிலுக்குள் பணிக்கு வரும்போது கைப்பேசி உள்ளிட்டவை கொண்டு வர அவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் ஊழியா்கள் வர வேண்டுமெனில், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையால் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கோயிலில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களது வேலையை ராஜிநாமா செய்துவிட்டனா். இதுகுறித்து கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் கூறுகையில், ‘தினமும் 40 போ் வேலைக்கு வந்த நிலையில் தற்போது 15-20 பேரே வருகின்றனா். தங்களிடமும் விசாரணை நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தில் வேலையை ராஜிநாமா செய்துவிட்டனா். ஆனால் வேலையை ராஜிநாமா செய்ததற்கு, வேலை பளு அதிகமாகிவிட்டதாக காரணம் தெரிவித்துள்ளனா். முன்பு இரண்டு ஷிஃப்டுகளாக நடந்த நன்கொடை எண்ணும் பணி, தற்போது ஒரே ஷிஃப்டாக குறைக்கப்பட்டு, 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டியிருப்பதாக அவா்கள் கூறியுள்ளனா். முன்பு மேஜை, நாற்காலிகளில் வைத்து நன்கொடை எண்ணப்பட்டதாகவும், ஆனால் தற்போது தரையில் வைத்து எண்ணப்படுவதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்’ என்றனர்.
– ‘தினமணி’, 11.07.2026 பக்கம் 14
* * * * *

மத்திய அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பதில் சொல்ல தேவையில்லையாம்!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ்
இந்த மோசடி வராதாம்!
இந்த மோசடி வராதாம்!
அயோத்தி ராமர் கோயிலில் நடந்த திருட்டு இப்போது பெரிதாக வெடித்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ராமர் கோயில் தொடர்பான தகவல்களை கேட்க முடியாது என மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் பேசுபொருளாகியுள்ளது.
ராமர் கோயில் உண்டியல் தொடர்பாக நடந்த மிக பெரிய முறைகேடு இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல பூதாகரமான தகவல்கள் வெளியே வருகிறது. இதற்கிடையே சிறீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்திருந்த விளக்கம் இப்போது வேகமாக பரவி வருகிறது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தை நிர்வகிக்கும் சிறீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை, மத்திய அரசுக்கோ அல்லது உத்தரப் பிரதேச அரசுக்கோ பதிலளிக்கக் கடமைப்பட்டது அல்ல என்றும், தனது சொந்த முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் அதற்கு உண்டு என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
மத்திய தகவல் ஆணையத்திடம் கடந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல், ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்ட விவகாரம் பெரிதாக வெடித்துள்ள இந்த சமயத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை என்பது ஒரு முழுமையான சுதந்திரமான அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. ராமர் அறக்கட்டளையை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ கட்டுப்படுத்தாது என்பதோடு, இந்த அமைப்புக்கு அரசு சார்பில் நிதியும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
கடந்த 2019 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உத்தரவுக்கு இணங்க மட்டுமே இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என்றும் இதில் மத்திய அரசின் பங்கு வெறும் வழிகாட்டுதலாக மட்டுமே இருப்பதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறக்கட்டளையின் நிதி, நிர்வாகம் என எதிலும் அரசுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்பதால் அதன் செயல்பாடுகள் குறித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அந்த அறக்கட்டளைக்கே உரியது என்று கூறப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த அறக்கட்டளை குறித்த விவரங்களைக் கோரி விண்ணப்பதாரர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த அறக்கட்டளையை உருவாக்கியுள்ளதாகவும், அதன் பெரும்பாலான அறங்காவலர்களை அரசே நியமித்து இருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் ஒரு பொது அதிகாரம் கொண்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர் வாதிட்டார். மேலும், கையகப்படுத்தப்பட்ட சுமார் 70 ஏக்கர் நிலமும் இந்த அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என தீர்ப்பளித்தது. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்த அறக்கட்டளை உருவாக்கப்படவில்லை, மாறாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே உருவாக்கப்பட்டது என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது. மேலும், இது அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை என்பதோடு, அரசின் நிதி உதவியும் இதற்கு வழங்கப்படாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க வேண்டிய கட்டாயம் இந்த அறக்கட்டளைக்கு இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த விளக்கம் வந்து ஓராண்டு ஆகிவிட்டது என்றாலும் கூட இப்போது ராமர் கோயில் உண்டியலில் பணம் திருடப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஒருவேளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த அறக்கட்டளை இருந்திருந்தால் கூட வெளிப்படைத்தன்மை இருந்திருக்குமோ என சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தத் திருட்டு விவகாரம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு நன்கொடை பணத்தை திருடி வந்துள்ளனர். கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எங்கே உள்ளன என்பதை கண்டுபிடித்து, அதை மறைத்து உண்டியல் பணத்தை திருடியுள்ளனர். முதலில் வளாகத்திற்குள் இருக்கும் கழிவறைகளில் மறைத்து வைத்து, பின்னர் வெளியே கொண்டு சென்றுள்ளனர். வீடியோக்கள் அனைத்தும் 45 நாட்களில் டெலிட் ஆகிவிடுவதால் இதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது.
இந்தக் கழிவறை நாற்றத்தை என்னவென்று சொல்லுவது!
வளரும்
