இந்தியாவின் 16-ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) தமிழ்நாட்டில் தொடங்குகிறது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை இணையம் வழியாகப் பாதுகாப்பாகப் பதிவு செய்ய உதவும் ‘தன்-பதிவு’ (self-enumeration) வசதி, இன்று தொடங்கி ஜூலை 31 வரை 15 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும். இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இது குறித்த சில கவலைகளைப் பலர் வெளிப்படுத்தினாலும், காகிதங்களில் தரவுகளைத் தொகுத்தாலும் இறுதியில் அனைத்துத் தகவல்களும் எண்ம வடிவுக்குக் (டிஜிட்டல்) கொண்டு செல்லப்படவே போகின்றன என்பதால், அதற்கான முழுப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பாகிறது. இந்தியாவின் அடிப்படைப் பாதுகாப்புடன் இணைந்தது என்பதால், அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக ஓர் இணைப்பைக் கொடுத்து, அதில் பதிவேற்றச் சொல்வதில் உள்ள ஆபத்துகளை முன்கணித்துத் தான் இத்தகைய பணிகளைத் தொடங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கையை அரசு ஏற்படுத்த வேண்டும்.
முதியோர், கிராமப்புற சமூகங்கள் மற்றும் விளிம்புநிலைக் குழுக்கள் இணையதளங்களை அணுகுவதில் சிரமப்படக்கூடும். எனவே தன்-பதிவு முறையைத் தேர்ந்தெடுக்காத குடும்பங்கள், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ள வழக்கமான நேரடிக் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கு மக்கள் உண்மையான பதில்களை அளிப்பார்களா? குறிப்பாக, சொத்து, உடைமைகள் சார்ந்த கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களால் தாங்கள் பெற்றுவரும் குறைந்தபட்ச உதவிகளையும். மானியங்களையும் அரசு நிறுத்திவிடும் என்ற பயம் இருப்பதால், அவை குறித்த உண்மைத் தகவல்கள் கிடைக்குமா என்ற அய்யம் முன்னெப்போதையும் விட தீவிரமாக எழுந்துள்ளது. எடுத்துக்காட்டாக, குடும்பங்களின் மாதச் செலவுத் திட்டமிடலின்போது மானிய விலையில் கிடைக்கும் எரிவாயு, ரேசன் பொருட்கள் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டே மக்கள் கணக்கிடுகிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ஒன்றிய அரசு இவற்றில் கடுமையான கறார்த்தன்மையைக் காட்டுகிறது. உணவு உரிமைச் சட்டத்தைத் திருத்தி, ஒருவருக்கு 7 கிலோ, ஆனால் அதிகபட்சம் 35 கிலோ என்று வரையறை செய்கிறது. மானிய விலையில் வழங்கும் எரிவாயு உருளையின் எண்ணிக்கையைத் தேசிய சராசரியைக் கணக்கிட்டு ஆண்டுக்கு 4 என்று குறைக்கிறது. இப்படி எல்லா வகையிலும், அரசின் மானியங்களை எதிர்நோக்கியிருக்கும் நடுத்தர வர்க்க, ஏழை, எளிய மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் இந்தக் கேள்விகளுக்கு உண்மைப் பதில்கள் வருமா என்ற அய்யத்தை நாடு முழுக்கப் பலரும் எழுப்பியிருக்கிறார்கள்.
முதல் கட்டமாக நடைபெறும் இந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகுதான், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், நீண்ட காலமாக நாம் போராடி வரும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுதான் உண்மையில் மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதே, சமூக-பொருளாதார மற்றும் ஜாதிக் கணக்கெடுப்பும் (SECC) சேர்த்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அனைவரும் அவரவர் ஜாதியைக் குறிப்பிடும் வகையில், (Open Space) வாய்ப்பை வழங்கியதன் விளைவாக, எழுத்துப்பிழை வேறுபாடுகள், ஒவ்வொரு பகுதியிலும் வழங்கப்படும் பெயர்கள், உட்பிரிவுகள், ஒன்றுபோல் தோன்றும் சொற்கள், சீரற்ற பதிவுகள் காரணமாக 46 லட்சத்திற்கும் அதிகமான வெவ்வேறு ஜாதிப் பதிவுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக, தரவுகளைத் திறம்பட வகைப்படுத்தவோ அல்லது கொள்கை நோக்கங்களுக்காக அதிகாரப்பூர்வமாக வெளியிடவோ முடியவில்லை. அவ்வளவு பெரிய முயற்சி பயனற்றுப் போனது.
இந்தியா முழுவதும், ஆங்கிலேயர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி ஜாதிவாரிக் கணக்கெடுப்பான, 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏறக்குறைய 4,147 ஜாதிகளைப் பதிவு செய்தது, அதேசமயம் இந்திய மானுடவியல் ஆய்வு 1951 இல் சுமார் 6,325 ஜாதிகளை அடையாளம் கண்டது. 2011-ஆம் ஆண்டு செய்யப்பட்ட தவறை மீண்டும் செய்யாமல், ஒன்றிய அரசும், மாநில அரசும் வைத்துள்ள ஜாதிகளின் பட்டியலின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதுடன், விடுபட்ட ஜாதிகளைக் குறிப்பெடுக்கும் வகையிலான வாய்ப்புகளுடனும் இந்தக் கணக்கெடுப்பு அமைய வேண்டும். இதற்கு அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை வடிவமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை மிகுந்த கவனத்துடன் ஒன்றிய அரசு கவனிக்க வேண்டும்.
அந்த வகையில், கடந்த ஜூலை 4-ஆம் தேதி சேலத்தில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12-ஆம் தீர்மானத்தின் இப் பகுதி மிகவும் முக்கியமானதாகும். “ஒடுக்கப்பட்டோரான பட்டியல் ஜாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) குறித்த விவரங்கள் முழுமையாக எடுக்கப்படுதல் போலவே, பிற்படுத்தப்பட்டோர் குறித்த முழுமையான விவரங்களும் எடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளிலும் இடஒதுக்கீட்டுக்கு அளவிடற்குரிய தரவு (Quantifiable Data) இருக்கிறதா என்று கேட்டு, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க மறுக்கும் சூழலில், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமானதாகும். மாநிலங்கள் எடுக்கும் சமூகநீதி சர்வேக்கள் மற்ற வகையில் அரசுகள் தகவல் பெற உதவலாமே தவிர, இடஒதுக்கீட்டுக்குப் பயன்படாது. எனவே, இதில் குழப்பங்களை ஏற்படுத்தாமல், நீதிமன்றம் என்னென்ன விவரங்கள் கேட்கிறதோ அதன் அடிப்படை யில் தெளிவான, முழுமையான விவரங்கள் திரட்டப்பட்டு, உரிய காலத்தில் வெளியிடப்பட வேண்டும்”
மக்கள் தொகையை அரசு முறையாகக் கணக்கெடுக்கட்டும்; இந்த விவகாரத்தில் அரசு இயந்திரத்தின் நேர்மையை மக்கள் கணக்கெடுக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன்!
