இரவு நேர வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் அதிக நேரம் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

புதுடில்லி, ஜூலை 16 உலகையே அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தின் நேரடிப் பாதிப்பாக, இந்தியாவில் இரவு நேர வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் தூக்க இழப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக ‘கிளைமேட் சென்ட்ரல்’  அமைப்பின் புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

இரவு நேரங்களில் வெப்பம் தணியாமல் அதிகரிப்பதால், தமிழ்நாட்டு மக்கள் ஆண்டுக்குச் சராசரியாக 84 மணி நேர தூக்கத்தை இழக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலகளாவிய பாதிப்பு: 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், உலகளவில் இரவு நேர வெப்பம் காரணமாக ஒரு நபர் ஆண்டுக்குச் சராசரியாக 56 மணி நேர தூக்கத்தை (சுமார் 7 இரவுகள்) இழந்துள்ளார்.

இந்தியாவின் நிலை: பருவநிலை மாற்றத்தால் தூக்க இழப்பைச் சந்திக்கும் உலகின் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் 107 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தென் மாநிலங்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

முதலிடத்தில் தமிழ்நாடு: தமிழ்நாடு மக்கள் ஆண்டுக்கு 84 மணி நேர தூக்கத்தை இழக்கின்றனர். இதில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இரவு நேர வெப்ப அதிகரிப்பினால் மட்டுமே ஒரு நபர் ஆண்டுக்குச் சராசரியாக 7.9 மணி நேர தூக்கத்தை இழக்கிறார்.

நகரங்களின் பட்டியல்: (ஒட்டுமொத்த தூக்க இழப்பு):சென்னை: 93 மணி நேரம்மும்பை: 84 மணி நேரம்கொல்கத்தா: 80 மணி நேரம்

பெங்களூரு: பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தூக்க இழப்பில் ஆண்டுக்கு 8 மணி நேர பங்களிப்புடன் முக்கிய இடத்தில் உள்ளது.

மகாராட்டிரா: சராசரியாக ஆண்டுக்கு 76.3 மணி நேர தூக்க இழப்பு (இதில் 5.8 மணி நேரம் பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடையது).

விபரீதங்கள் என்ன?

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஒரு நபர் நாளொன்றுக்கு 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்குவது அவசியமாகும். அவ்வாறு போதிய தூக்கம் கிடைக்காதபோது பின்வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன:

உடனடிப் பாதிப்புகள்: நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் அன்றாட செயல்பாட்டுத் திறன் குறையும். கவனம் சிதறுவதால் தவறுகள், விபத்துகள் மற்றும் உடல் வலி அதிகரிக்கும்.

நீண்ட காலப் பாதிப்புகள்: உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்), உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படுவதுடன், உயிரிழப்புக்கான ஆபத்தும் கணிசமாக அதிகரிக்கிறது.

இரவு நேர வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவது, வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *