அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள் உரிய விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்!

 நீதி வேண்டும் என்பது வெற்று முழக்கம் அல்ல; அது மனித குலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால அரசியல் மாற்றத்தின் அடிப்படை!
காவல் நிலையத்திலோ, சிறையிலோ கைதிகள் சித்திரவதை மரணம் என்பதெல்லாம் மனித உரிமைகளுக்கு எதிரானது!
அதிகார வர்க்கத்தின் மனநிலையில் மாற்றம் தேவை!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

நீதி வேண்டும் என்பது வெற்று முழக்கம் அல்ல; அது மனித குலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால அரசியல் மாற்றத்தின் அடிப்படை! காவல் நிலையத்திலோ, சிறையிலோ கைதிகள் சித்திரவதை மரணம் என்பதெல்லாம் மனித உரிமைகளுக்கு எதிரானது! அதிகார வர்க்கத்தின் மனநிலையில் மாற்றம் தேவை! அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள் உரிய விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்! என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

Contents
 நீதி வேண்டும் என்பது வெற்று முழக்கம் அல்ல; அது மனித குலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால அரசியல் மாற்றத்தின் அடிப்படை! காவல் நிலையத்திலோ, சிறையிலோ கைதிகள் சித்திரவதை மரணம் என்பதெல்லாம் மனித உரிமைகளுக்கு எதிரானது! அதிகார வர்க்கத்தின் மனநிலையில் மாற்றம் தேவை! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கைமக்கள் மத்தியில் பெரிதும் பேசுபொருளானது!அய்க்கிய நாடுகள் அவையில் உடன்படிக்கை!மனிதநேயமற்ற நடத்தைகள் தொடர் கதையாவதா?‘லோக்நீதி-சிஎஸ்டிஎஸ்’ அமைப்பின் ஆய்வறிக்கை!மனித குலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால அரசியல் மாற்றத்தின் அடிப்படைஉரிய உளவியல் பயிற்சி காவல்துறையினருக்கு அவசியம்!

அவரது அறிக்கை வருமாறு:

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் மாதம் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கேயே காவல்துறையினரின் கடுமையான தாக்குதலால் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த காவல்மரணங்கள் தொடர்பான வழக்கு ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடைபெற்று கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில், இதில் தொடர்புடைய 9 பேருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டது.

மக்கள் மத்தியில் பெரிதும் பேசுபொருளானது!

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கும்போதே 2025 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் என்பவர் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதுவும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசுபொருளானது. ஆனால், இவை அல்லாமலும், பல காவல்மரணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

காவல் நிலையத்திலோ, சிறையிலோ கைதிகள் மரணம் அடையும்போது, அவை இயற்கையான மரணங்களாக இருப்பது வேறு. அது இயல்பானது, அதற்குக் காவல்துறையோ, சிறைத் துறையோ பொறுப்பேற்க முடியாது. ஆனால், விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, சிறைக்குள்ளேயும் நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள், தாக்குதல்கள், சித்திரவதைகள் தான் இத்தகைய கொடும் மரணங்களாக மாறிவிடுகின்றன. தண்டனை முறைகளிலும், விசாரணை முறைகளிலும் பெரும் மாறுதல்கள் காலந்தோறும் ஏற்பட்டு வந்துள்ளன. ‘சித்திரவதைக்கு உள்ளாக்குதலே தண்டனை’ என்னும் நிலையிலிருந்து மனித சமூகம் எவ்வளவோ மாறி வந்துவிட்டது.

ஆனாலும், அதிகாரம் கையிலிருக்கும் அகந்தையில், நிகழ்த்தப்படும் சித்திரவதைகள் இன்னும் குறைந்தபாடில்லை. காவல் நிலையங்களுக்குள்ளும், சிறைகளுக்குள்ளும் எது நடந்தாலும் யாரும் கேட்பாரில்லை என்ற எண்ணமே சிறிய அளவில் தொடங்கி கொலைகள் வரை கொண்டு செல்கிறது.

அய்க்கிய நாடுகள் அவையில் உடன்படிக்கை!

‘‘சித்திரவதை’’ என்பது, ஒரு நபரிடமிருந்தோ அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ தகவலையோ அல்லது ஒப்புதலையோ பெறு வதற்காகவோ, அவர் அல்லது மூன்றாம் தரப்பினர் செய்த அல்லது செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு செயலுக்காக அவரைத் தண்டிப்பதற்காகவோ; அவரை அல்லது மூன்றாம் தரப்பினரை அச்சுறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ; அல்லது ஏதேனும் ஒரு வகையான பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்த வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ, ஒரு நபர் மீது உடல் ரீதியான அல்லது மன ரீதியான கடுமையான வலியையோ அல்லது துன்பத்தையோ வேண்டுமென்றே திணிக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கும். இத்தகைய வலியோ அல்லது துன்பமோ, ஒரு பொது அதிகாரியால் அல்லது அதிகாரப்பூர்வ நிலையில் செயல்படும் வேறொரு நபராலோ, அல்லது அவர்களின் தூண்டுதலாலோ, ஒப்புதலுடனோ அல்லது மவுனச் சம்மதத்துடனோ திணிக்கப்படுவதாகும்” என்று அய்க்கிய நாடுகள் அவையால் 1983 டிசம்பர் 10 இல் ஏற்கப்பட்ட ‘சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை’ வரையறுக்கிறது. இந்த உடன்படிக்கையில் 1997 ஆம் ஆண்டு இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது.

இவ்வளவுக்கும் இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள சித்திரவதை என்பதற்கான விளக்கத்தில் இருந்து, ‘சட்டபூர்வமான நட வடிக்கைகளின் விளைவாகவோ, அவற்றின் இயல்பான பகுதியாகவோ அல்லது அவற்றுடன் தொடர்புடையதாகவோ ஏற்படும் வலி அல்லது துன்பம் இதில் அடங்காது’ என்று விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் அதிகாரப்பூர்வ நிலையில் உள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மற்றொருவருக்குக் கடுமையான மன அல்லது உடல் ரீதியான வலியையோ அல்லது துன்பத்தையோ ஏற்படுத்துவதே சித்திரவதை எனப்படும். சில சமயங்களில், ஒரு குற்றத்திற்கான ஒப்புதலைப் பெறுவதற்கோ அல்லது தக வல்களைப் பெறுவதற்கோ அதிகாரிகள் ஒருவரைச் சித்திரவதை செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல், சில வேளைகளில், சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு தண்டனையாகவும் கூட ‘சித்திரவதை’ பயன்படுத்தப்படுகிறது.

மனிதநேயமற்ற நடத்தைகள்
தொடர் கதையாவதா?

இவ்வளவு நெறிமுறைகளும், சட்டங்களும், தீர்ப்புகளும் இருக்கும் சூழலில் தான் இன்னும் காவல் சித்திரவதை மரணங்கள் தொடர்கின்றன. 9 பேருக்குத் தூக்கு தண்டனை, அதுவும் இரட்டை மரண தண்டனை என்று வழங்கப்பட்டிருக்கும் நிலையிலும், அதுகூட மனதில் தைக்காமல், கடந்த இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து 4 காவல் மரணங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. அண்மையில் நாகர்கோவில் மாவட்டச் சிறை யில் நீதிமன்றக் காவலில் இருந்த மாற்றுத் திறனாளியான சபரிவர்மன் என்பவர் கடந்த 12 ஆம் தேதி இரவு சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார். அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. அது தொடர்பாகக் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது மூன்று காவலர்களைக் கைது செய்துள்ளது அரசு. எட்டு சிறைக் கைதிகளும் இதில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறை சந்தேகப்படுகிறது. அவர்களைக் கைது செய்திருப்பதாகவும் காவல்துறை தென்மண்டல அய்.ஜி. தெரிவித்துள்ளார். இத்தகைய மனிதநேயமற்ற நடத்தைகள் தொடர் கதையாவதா? இது கடுமையான கண்ட னத்திற்குரியதாகும்.  இதுகுறித்து உரிய, சரியான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். தேவையானால், முந்தைய வழக்குகளைப் போல சி.பி.அய். விசாரணை நடத்தப்படவேண்டும்.

இன்னொரு புறத்தில், இவற்றுக்கான அடிப்ப டைக் காரணங்கள் ஆராயப்பட
வேண்டாமா?

‘லோக்நீதி-சிஎஸ்டிஎஸ்’ அமைப்பின் ஆய்வறிக்கை!

பணியிட மாற்றம், நிர்வாக ரீதியான தண்டனைகள், கைதுகளையும் கடந்து சித்திரவதை செய்யும் மனநிலை எங்கிருந்து வருகிறது? ‘லோக்நீதி-சிஎஸ்டிஎஸ்’ அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று, தமிழ்நாட்டுக் காவல் துறையினரில் 91 சதவீதம் பேர் குற்றப் புலனாய்வின்போது ‘சித்திரவதை தேவை’ என்ற ஆபத்தான மனநிலையைக் கொண்டி ருப்பதாகக் குறிப்பிடுகிறது. இந்த மனநிலையில் குஜராத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறை இருக்கிறது என்பது ஆபத்தான போக்காகும். காவல்துறையின் இந்த வரம்பு மீறிய அத்துமீறல்களுக்கும், சிறைக் கொடுமை களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக் காவல் துறையின் ஒட்டுமொத்த மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம் என மனித உரிமைப் போராளிகள் வலியுறுத்துகின்றனர். காவல்துறை யில் மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தின் மனநிலையிலும் மாற்றம் வர வேண்டும்.

மனித குலத்தின்
பல்லாயிரம் ஆண்டுகால
அரசியல் மாற்றத்தின் அடிப்படை

காவல்துறையினர் மீதிருக்கும் நெருக்கடி யும், பணி அழுத்தங்களும், அரசியல் அழுத்தங்க ளும் கூட இத்தகைய மனநிலைக்குக் காரண மாகின்றன.  திருப்புவனம் அஜித்குமார் கொலை யில், அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. யார் அந்த அதிகாரிகள்? யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கொலை நடந்தது? அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதுபற்றி எந்தத் தகவலும் இல்லை! அது மட்டுமல்லாமல், திரையில் காவல்துறை ‘நாயகர்கள்’ செய்யும் அத்துமீறல்களை ‘ஹீரோ யிசம்’ என்று காட்டி உருவாக்கப்பட்டுள்ள மக்களின் மனநிலையும்கூட இத்தகைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகின்றன. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், அடிப்படை மனித உரிமைகளை விஞ்சியதாக இருக்க முடியாது. நிரூபிக்கப்பட்ட கொடும் குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்தே உலகின் பார்வை மாறிவரும் சூழலில், விசாரணையின் காரணமாகவும், குற்றம் நிரூபிக்கப்படாத சூழலிலும் கடும் சித்திர வதைகளும், அதன் காரணமான மரணங்களும் ஒருபோதும் ஏற்கத்தக்கவையல்ல. அன்றாடம் குற்றச் செயல்களைக் கண்டும், அவற்றைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவுமான பணிகளால் உருவாகும் இயல்பான மன அழுத்தமும், அதிகாரமும் இருபுறமும் இருந்து தரும் நெருக்கடியும் ஒரு சேர காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கும், சலிப்புகளுக்கும், அதீத செயல்களுக்கும் காரணமாகிறது என்பதும் அடிப்படை உண்மை.

உரிய உளவியல் பயிற்சி
காவல்துறையினருக்கு அவசியம்!

ஓரிடத்தில் ஏற்படும் அழுத்தம் இன்னோரி டத்தில் வெடிக்கும் என்பது இயற்கை! நீண்ட காலத் தீர்வுகளுக்கு உரிய உளவியல் பயிற்சி காவல்துறையினருக்கு அவசியம்! அதற்கான ஏற்பாடுகளை முன்னுரிமை கொடுத்து அரசு மேற்கொள்ளவேண்டும்.

நீதி வேண்டும் என்பது வெற்று முழக்கம் அல்ல; அது மனித குலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால அரசியல் மாற்றத்தின் அடிப்படை.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

16.7.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *