திருட்டை மறைக்க மக்களைத் திசை திருப்பும் பித்தலாட்டம்!
ராமன் கோயிலில், பக்தியில்லாமல் செலுத்திய காணிக்கையே திருடப்பட்டதாம்!
லக்னோ, ஜூலை 16 அயோத்தி ராமன் கோயிலில் உண்மையான பக்தியின்றி செலுத்தியவர்களின் காணிக்கைகளே திருடப்பட்டிருக்கலாம் என உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா பேசியுள்ள கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
அயோத்தி ராமன் கோயில் நன்கொடைகள் திருடப்பட்டதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா கூறும்போது,
“கோயிலுக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகளைத் திரும்பக் கேட்பவர்கள் உண்மையான பக்தியுடன் காணிக்கை செலுத்தியிருக்க மாட்டார்கள். அப்படி உண்மையான பக்தியின்றி செலுத்தியவர்களின் காணிக்கைகளே திருடப்பட்டிருக்கலாம்” என குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருட்டை மறைக்க மக்களை திசை திருப்பும் பித்தலாட்டம் இது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டப்பேரவைத் தலைவரின் இந்தக் கருத்துக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பிரிவு தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது:
அரசின் தோல்வி இல்லையா?
பக்தர்களின் நோக்கத்தில்தான் தவறு இருக்கிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் கூறுவது, அரசின் பாதுகாப்புத் தோல்வியை மூடி மறைக்கும் செயலாகும்.
அப்படியெனில், பாரதிய ஜனதா அரசு இனி மக்களின் நம்பிக்கைகளைத் தணிக்கை செய்யப் போகிறதா?
உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகள் துணிச்சலாகத் திருடி வருகின்றனர். ஆனால், ஆட்சியில் உள்ளவர்களோ அதற்குப் பொறுப்பேற்காமல் இத்தகைய விசித்திரமான வாதங்களை முன்வைக்கின்றனர்.
சமாஜ்வாடி கட்சி கண்டனம்:
இதேபோல் சபாநாயகரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு குறித்து சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா கூறிய கருத்துகள் மிகவும் அவமானகரமானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை. அவர் வகிக்கும் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்குரிய கண்ணியத்துடன் பேச வேண்டும்.
மக்களின் மற்றும் பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை ஆட்சியாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை அவர் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ராமன் கோயில் காணிக்கை திருட்டுப் போன விவகாரத்தில், சட்டப்பேரவைத் தலைவரின் இந்த விசித்திரமான கருத்து உத்தரப்பிரதேச அரசியலில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
