சென்னை, ஜூலை 16- கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று (15.7.2026) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் நடந்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து முதலமைச்சரிடம் விவாதித்தோம்.
இந்த விவகாரத்தை கையி லெடுத்து எங்களுக்கு உதவுமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். கேரள அரசு ஏற்கெனவே போதைப்பொருள் வேட்டையாக ‘ஆபரேஷன் தூபான்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கடந்த 43 நாட்களாக இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து இடங்களிலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை.
எல்லைப் பகுதிகளில் எங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் ஆதரவை நாடி இங்கு வந்துள்ளோம். கடந்த வாரம் அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் போதைப் பொருள் மாஃபியாவுக்கு எதிராக எப்படி போர் தொடுப்பது என்பது குறித்து நாங்கள் விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.
அதுகுறித்து முதலமைச்சரிடம் விவாதித்தோம். அவர் ‘ஆபரேஷன் தூபான்’ திட்டத்துக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளார். ‘தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகள் அனைத்தும் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.
இணைந்து செயல்பட…
போதைப்பொருட்களைக் கொண்டுவர அல்லது விற்க முயல்பவர்களைப் பிடிக்க இரு மாநில காவல் படைகளும் கைகோர்த்துச் செயல்படும்’ என, முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
இதையடுத்து இரு மாநிலங்களும் இணைந்து விழிப்புணர்வு பிரச் சாரங்களை மேற்கொள்ளும் வகையில் விஜய்யை கேரளாவுக்கு அழைத்துள்ளேன். அதற்கும் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் விழிப்புணர்வு தூதர் மோகன்லாலுடன் விஜய் இணைந்து கேரளாவில் ஒரு பெரிய விழாவில் பங்கேற்பார்கள்.
கடந்த வாரம் கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை சந்தித்தேன். கருநாடக எல்லைப் பகுதிகளில் கேரள அரசுக்கு உதவுவதாக அவரும் உறுதியளித் துள்ளார்.
எனவே அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சி நிச்சயமாக இந்த சூழ் நிலையை மேம்படுத்தும். குறிப்பாக இளைஞர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாஃபியாவால் குறிவைக்கப்படுகிறார்கள்.
அனைத்துக் கட்சிகளும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முன்வர வேண்டும். இது ஒரு பெரிய அச்சுறுத்தல், நாட்டிற்கு எதிரானது. போதைப்பொருளுக்கு எதிராக நாம் போரிட வேண்டும். இதற்கான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
