‘பச்சை அட்டைக் குடிஅரசு’ செய்திருக்கிற அறிவுப் புரட்சி என்பது
சமுதாயத்தையே ஒரு நூறாண்டு காலத்துக்குள் புரட்டிப் போட்ட மிகப்பெரிய புரட்சியாகும்!
சமுதாயத்தையே ஒரு நூறாண்டு காலத்துக்குள் புரட்டிப் போட்ட மிகப்பெரிய புரட்சியாகும்!
சென்னை, ஜூலை 15 ‘பச்சை அட்டைக் குடிஅரசு’ செய்திருக்கிற அறிவுப் புரட்சி என்பது சமுதாயத்தையே ஒரு நூறாண்டு காலத்துக்குள் புரட்டிப் போட்ட மிகப்பெரிய புரட்சியாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
்கடந்த 6.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
1927 ஆம் ஆண்டு நவம்பரில் திருநெல்வேலியில் சுயமரியாதை மாநாடு கூடியது. ஏறத்தாழ 99 ஆண்டு களுக்கு முன்னால் – ஓராண்டு வந்தால் 100 ஆம் ஆண்டு. அந்த சுயமரியாதை மாநாட்டில் டி.கே. சிதம்பர நாத முதலியார் பங்கேற்கிறார். இவர் இந்து அறநிலையப் பாதுகாப்பு துறை ஆணையராக இருந்தவர்.
‘குடிஅரசு’வில் முதலாண்டில் பெரியார் எழுதுகிறார், ‘‘நான், யார் யாரைத் தாக்கினேன் என்று எனக்கே தெரியாது. யாரை விட்டு வைத்தேன் என்று எனக்கே தெரியாது. ‘இன்னார் இனியர்’ என்று பார்க்காதே – வேண்டியவர், வேண்டாதவர்கள் என்பது எனக்கு இல்லை. இன்னும் யாரைத்தான் தாக்கப் போகிறேனோ, எனக்கே தெரியாது’’ என்று எழுதுகிறார்.
உள்ளத்தில் உள்ளதை
அப்படியே எடுத்துச் சொல்வது!
அப்படியே எடுத்துச் சொல்வது!
‘‘குடிஅரசுக்கு இன்றிருக்கும் யோக்கியதை உங்களுக்குத் தெரியும். அதில் மக்கள் மனதைக் கவரத்தக்க அளவு கடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் என்ன? அய்யாவின் அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை; பின்னர் எது? அவர் உள்ளத்தில் உள்ளதை அப்படியே எடுத்துச் சொல்வது.’’
‘‘உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்’’
இன்றைக்கு அந்த அளவிற்கு உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் சொல்கிற ஒரு தலைவர். இதுதான் பெரியா ருடைய தனித்த அடையாளம். பெரியாரின் தனித்த சிந்தனைக்கு மிக முக்கியமான பாராட்டு இதுதான்.
தந்தை பெரியார்பற்றி, டி.கே.சி.
‘‘இராமசாமிப் பெரியார் உண்மையிலேயே ஒரு பெரியார் என்பதற்கும், ஒரு பெரிய சக்தி வாய்ந்தவர் என்பதற்கும் வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது, ஓர் உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன:-
- அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும்.
- அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்பட வேண்டும்.
- அவர் கடுமையாக வையவும், சபிக்கவும்பட வேண்டும்.
எனவே, இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர், நம் பெரியாராவார்.
தேசிய இயக்கத்தில் பெரிதும் ஈடுபட்டு மனப்பூர்வ மாக உழைத்தவர். பல கஷ்டம் என்பதையும், அதற்காக நஷ்டங்கள் அடைந்தவர் என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை… சமுதாயத் துறையில் இறங்கி, வைக்கம் முதலிய இடங்களில் தாழ்ந்த மக்களுக்காகச் சத்தியாக்கிரகம் முதலியவை செய்து, அதற்காகச் சிறையும் சென்று, தெருவில் நடக்கும் உரிமை முதலியவற்றை நிலைநாட்டியவர் நம் பெரி யாரேயாவார்.
சுயமரியாதை உணர்ச்சியைத் தமிழ்நாட்டில் துவக்கி விட்டவர் நாயக்கர் ஆவர். பார்ப்பனரல்லாத இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமையும், அவருக்கே உரித்தானது. இன்று, இம்மாகாணம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது இயக்கம் கொண்டாடப்படுகிறது. அம்மகத்தான பெருமைக்கு அருகர் நாயக்கரே. இதைப் பற்றி மேலும் கூறுவது மிகையே.
முதன்முறையில் அவர் பிரசங்கத்தைக் கேட்டபோது நான் பிரமித் துப் போனேன். அவருடைய பேச்சில் ஆற்றல் தொக்கி நிற்கிறது.
‘குடிஅரசு’வின் பெருமை மிக ஆகும். ஆடாததை யெல்லாம் ஆட்டி வைத்த பெருமை, ‘குடிஅரசு’வுக்கே உரித்தானதாகும். இதற்குக் காரணம், பெரியாரின் சொல்லும், எழுத்தும் வன்மை கொண்டதாக இருந்ததே!
அவருடைய ‘குடிஅரசு’ பத்திரிகையில், மக்கள் மனத்தைக் கவரத்தக்க அளவு கடந்த சக்தி இருப்பதற்குக் காரணம், அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. தன் உள்ளக்கிடக்கையில் உள்ளதை, அப்படியே எடுத்துச் சொல்வதுதான். உண்மையிலேயே எத்தகைய கல்வியாளரும் கோடிக்கணக்கான ஜன சமூகமும் திகைக்கத்தக்க பத்திரிகையை இவர் நமக்குக் கொடுத்தி ருக்கிறார்’’ என்றார்.
எல்லோரையும்
ஈர்க்கக்கூடிய பேச்சு!
ஈர்க்கக்கூடிய பேச்சு!
அதுவும் அய்யாவின் எழுத்து, உரை என்பவை மிகச் சாதாரண தமிழிலேயேதான் இருக்கிறது என்று குறிப்பிட்டு, அந்தச் சாதாரண தமிழ்தான், படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு என்று வ.ரா.வில் இருந்து, கல்கி போன்றோர் வரை அய்யாவினுடைய பேச்சைப்பற்றிச் சொல்வார்கள்.
‘‘நாயக்கர் படிப்பில் பட்டதாரி அல்ல; எத்தகைய கல்வியாளரும் கோடிக்கணக்கான ஜன சமூகமும் திகைக்க வன்மை உடைய பத்திரிகையை இவர் கொடுத்தது பூர்வ புண்ணியமே! (பக்தர்கள் மொழி) இவருடைய எழுத்துகள் இவர் பேசுவது போலவே இருக்கும்.’’ அந்தக் காலத்தில் சாமி. சிதம்பரனாருடைய ‘கமெண்ட்’ இது.
‘‘இவருடைய எழுத்துகள் இவர் பேசுவது போலவே இருக்கும். எப்பொழுது திங்கட்கிழமை வருகிறது என்று வாசகர்கள் காத்திருப்பார்கள்.’’
மூன்று ஏடுகளும் தனித்தன்மையானதாகும்!
இந்தச் சிறப்பு நமக்குத் தெரிந்து, மூன்று பத்திரிகைகளுக்குத் தான் உண்டு. அவை எல்லாம் லட்சக்கணக்கில் போகிற பத்திரிகைகள் இல்லை. இது எங்களைப் போன்றவர்களுக்கே தெரியாத செய்தி. ஆனால், எனக்குத் தெரிந்த செய்தி என்னவென்றால், வாரம் தவறாமல் எப்பொழுது அண்ணாவின் ‘திராவிட நாடு’ வரும், என்று கேட்கக்கூடிய கூட்டம் உண்டு. அதே மாதிரி எப்பொழுது ‘விடுதலை’ வரும் என்று கேட்கக்கூடிய கூட்டம் உண்டு. ஆக, இந்த மூன்று ஏடுகளும் தனித்தன்மையானதாகும்.
நாளிதழ் ஒன்றை வாங்கினார் ஒருவர்; ‘‘அந்த நாளிதழை ஏன் நீங்கள் வாங்குகிறீர்கள்’’ என்று இன்னொருவர் கேட்டார்.
அதற்கு அவர் பதில் சொன்னார், இந்த நாளிதழில்தான் பக்கங்கள் அதிகம். பொட்டலம் கட்டுவதற்கும் மற்றவற்றிற்கும் வசதியாக இருக்கும்’’ என்றாராம்.
ஆகவே, பொட்டலம் கட்டுகிற பத்திரிகைகளும் இருக்கின்றன. ஆனால், புத்தியில் பொறி தட்டக்கூடிய பத்திரிகைகளும் வந்திருக்கின்றன. அதுதான் மிகவும் சிறப்பானதாகும்.
‘குடிஅரசு’ செய்த புரட்சி !
அந்த வகையில் அய்யா அவர்களுடைய ‘குடிஅரசு’ செய்த புரட்சி சிறப்பானதாகும். நேற்று கூட நான் சொன்னேன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் சென்று, ‘‘உங்களுக்கு யார் ஆசிரியர்?’’ என்று கேட்டார்கள். ‘பச்சை அட்டைக் குடிஅரசு’தான் என்றார்.
‘பச்சை அட்டைக் குடிஅரசு’ செய்திருக்கிற அறிவுப் புரட்சி சமுதாயத்தையே ஒரு நூறாண்டு காலத்துக்குள் புரட்டிப் போட்ட மிகப்பெரிய புரட்சியாகும். அந்த சிந்தனையினுடைய கூர்மையின் உதாரணத்திற்காக உங்களுக்குச் சென்ற தொடர் சொற்பொழிவிலும் சிலவற்றைச் சொன்னேன்.
(தொடரும்)
