புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

2 Min Read

புதுச்சேரி, ஜூலை 15- புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக இலங்கைக்கு மருந்து கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

போலி மருந்து தொழிற்சாலை

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி நாடு முழுவதும் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது சில மாதங்கள் முன்பு தெரியவந்தது. டில்லியில் உள்ள பிரபல நிறுவனம் அளித்த புகாரின்பேரில் புதுச்சேரி சிபிசிஅய்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போலி மருந்து தொழிற் சாலை உரிமையாளர் ராஜா உட்பட 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும், மருந்து தொழிற் சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்து களை கைப்பற்றி, குடோன்களுக்கு சீல் வைத்தனர். உரிமையாளர் வீட்டில் இருந்து நகை, பணம், சொத்து பத்திரங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

பல மாநிலங்களுக்கும் தொடர்பு இருந்ததால் வழக்கை
சிபிஅய்-க்கு மாற்ற துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, இவ்வழக்கை சிபிஅய்-க்கு மத்திய உள்துறை மாற்றியது. இதையடுத்து சிபிஅய் அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதிதாக மீண்டும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகை சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக மருந்துகள் இலங்கைக்கு கடத்திக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் விசாரணையின் அடிப்படையில், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொண்டனர்.

போலி வலி நிவாரணி மாத்திரைகள்

ஆனால், அவர்கள் இலங்கைக்கு எந்த மருந்தையும் தாங்கள் அனுப்பவில்லை என்றும், அந்த மருந்து தங்களின் தயாரிப்பு இல்லை என்றும் கூறியுள்ளனர்.

அவர்களின் தொடர் விசாரணை யில், புதுவை மேட்டுப்பாளையம் குருமாம்பேட்டில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்று, வலி நிவாரணி மாத்திரைகளை போலியாக தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுவை காவல் துறையினருக்கு கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் புதுவை காவல் துறையினர், மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில் 3 லட்சம் போலி வலி நிவாரணி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்ததை கண்டறிந்தனர். அவற்றை கைப்பற்றிய காவல் துறையினர், போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரான சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.

இவர், மேட்டுப்பாளையத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக மருந்து தொழிற்சாலை நடத்தி வருவதும், இந்த நிறுவனத்தில் மேலும் சில மருந்துகள் தயாரிக்கப்படுவதும் தெரியவந்தது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, “இங்கு தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அனுமதி உள்ளதா? போலியாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்தி வருகிறோம். போலி வலி நிவாரணி மாத்தி ரைகள் இலங்கைக்கு மட்டும் அனுப்பிவைக்கப்பட்டதா?

வேறு மாநிலங்கள் அல்லது வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதா எனவும் விசாரணை நடைபெறுகிறது. புதுவையில் கைப்பற்றப்பட்ட மருந்துகளை, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *