சென்னை, ஜூலை 15– உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உயர்கல்வித் துறையின் கீழுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் (‘டி’ பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-2027ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விருப்பம் உள்ளவர்கள் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 24.07.2026 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
17ஆம் தேதி தொடங்குகிறது
17ஆம் தேதி தொடங்குகிறது
இணையத்தின் மூலம் தகவல் அளிக்கலாம்!
சென்னை, ஜூலை 15- மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027இன் முதல்கட்ட பணியான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு கோவை மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறுகிறது.
இதில் சுயமாக விவரங்களை இணைய வழியில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை https://se.census.gov.in எனும் இணையத்தளம் மூலம் வரும் 17.7.2026 முதல் 31.7.2026 வரை பொதுமக்கள் பதிவு செய்யமுடியும்.
இல்லையேல் 1.8.2026 முதல் 30.8.2026 வரை கணக்கெடுப்பாளர்கள் மக்களின் இல்லங்களுக்கே வந்து விவரங்களை சேகரிப்பார்கள். இந்த பணிகளின் போது பொது மக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் என்ன என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) அலுவலகத்தில் விவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதானமாக வீடு எப்படிப்பட்டது (தரை, கூரையின் பிரதான கட்டுமான பொருள் என்ன?), வீட்டில் சாதாரணமாக எத்தனை பேர் வசிப்பார்கள்; குடிநீருக்கான பிரதான ஆதாரம், விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிவுநீர் வெளியேற்ற இணைப்பு, சமையலறை வசதி, எல்பிஜி இணைப்பு-சமையலுக்கு பயன்படுத்தும் பிரதான எரிபொருள் என்ன? வாகனங்கள் (மிதிவண்டி, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப் வேன்), வானொலி, தொலைக்காட்சி மற்றும் பிற தொலைத்தொடர்பு வசதிகள் (இணையதள வசதி, மடிக்கணினி, தொலைபேசி, கைபேசி, ஸ்மார்ட்போன்) போன்ற கேள்விகள் இடம்பெறும்.
இந்த பணிகள் முடிந்த பின்னர் அடுத்த ஆண்டு (தோராயமாக 2027 பிப்ரவரி) விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். இதில் தான் விரிவாக நாட்டில் 2027ல் எத்தனை பேர் குடிமக்களக்காக உள்ளனர் என்ற விவரம் பட்டியலிடப்படும்.
காலநிலை மாற்றத்தால் குன்னூரில் நீர் பனிப்பொழிவு!
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வெலிங்டன், ஜூலை 15- காலநிலை மாற்றத்தால் குன்னூரில் தற்போது நீர் பனிப்பொழிவு காணப் படுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நீர் பனிப்பொழிவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கடந்த மாத இறுதியில் இருந்து பருவமழை தீவிரம் அடைந்தது. குன்னூர், வெலிங்டன், கேத்தி, எடப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. குன்னூர் பகுதியில் அதிகாலை நேரங்களில் கடும் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் கடும்குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்து வருகின்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் நீர் பனிப்பொழிவு காணப்படும். பின்னர் உறைபனி தாக்கம் அதிகரிக்கும். காலநிலை மாற்றம் காரணமாக தற்போது நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பசுமையான புல்வெளிகளில் நீர் துளிகள் கோர்த்து உள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் குன்னூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம், வெலிங்டன் ராணுவ மைதானம் மற்றும் பூங்காக்களின் புல்வெளிகளில் நீர் பனிப்பொழிவு படர்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். கடுங்குளிரை சமாளிக்க மக்கள் அதிகாலையில் ஸ்வெட்டர் அணிந்தவாறு வெளியில் செல்கின்றனர். குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடும் குளிர் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு செல்லாமல், தங்கும் அறையிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நீர் பனிப்பொழிவால் பொதுமக்கள், விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
