மும்பை / சென்னை, ஜூலை 14 வியட்நாமில் நிகழ்ந்த கோர படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்களும் நேற்று (13.7.2026) இரவு விமானம் மூலம் மும்பை வந்தடைந்தன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்களைச் சென்னைக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் தனி விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வியட்நாமில் நிகழ்ந்த சோகம்
வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பூ குவாக் (PhuQuoc) தீவு அருகே 36 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அதிவேகப் படகு ஒன்று, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 10 பேர் தமிழ்நாட்டைசேர்ந்தவர்கள். பலியானவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர ஒன்றிய வெளியுறவுத் துறையும், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.
தூதரகம் மூலம் உடல்கள் ஒப்படைப்பு
வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று (13.7.2026) வெளியிட்ட சமூக ஊடக அறிக்கையில்: “விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் (VN979) மூலம் ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டன. இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்களைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தினரிடம் சேர்க்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை
திட்டமிட்டபடி நேற்று (13.7.2026) இரவு 15 பேரின் உடல்களும் மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தன. அங்கு உடல்கள் அந்தந்த மாநிலப் பிரதிநிதிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்களையும் மும்பையிலிருந்து சென்னைக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கொண்டு வரப்பட்டதும், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடல்கள் அனைத்தும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
