பழநியில் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பதிவு சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது புகார்!

3 Min Read

பழநி, ஜூலை 14– பழநியில் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனிநபருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் நிலத்தை வாங்கிய, விற்ற நபர்கள் மீது கோயில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி மதிப்பிலான நிலம்

திண்டுக்கல் மாவட்டம், பழநி மலையடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமாக 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும். பழநி மலைக்கோயிலுக்கான கைங்கர்யங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட இந்த நிலத்தை சட்டப்படி யாரும் விற்பனை செய்ய முடியாது.

ஆனால், இந்த விதியை மீறி, திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை சார்பில், கடந்த 7ஆம் தேதி இந்த நிலம் இரு தனிநபர்களுக்கு வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் புகார்

இதுகுறித்து அறிந்த பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் (55), பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:”பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், சுயலாபத்திற்காக அதிகார அத்துமீறல் செய்து பத்திரப்பதிவு செய்த பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மோசடியாக கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், நிலத்தை கிரையம் பெற்ற வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகியோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த மோசடி பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகம் அளித்த இந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு சட்டப் பல்கலைக்கழகத்தின்

சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

சென்னை, ஜூலை 14- அரசு சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் வழங்கப்படும் முதுகலை சட்டப்படிப்பு (எல்எல்எம்) மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 13 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர் நலனை கருத்தில்கொண்டு கடைசி நாள் ஜூலை 17ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் சட்டப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (www.tndalu.ac.in) வாயிலாக வரும் 17ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேடு!

கண்டித்து தேர்வர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 14- சென்னை தேனாம் பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை-II தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், அதனை முழுமையாக விசாரணை செய்யாமல் பணி ஆணைகள் வழங்கக் கூடாது எனவும் கூறி தேர்வு எழுதியவர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கை அடங்கிய மனுவை டி.பி.ஹெச் அதிகாரியிடம் வழங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தீர்த்தகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்விற்கு முன் உரிய பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளவில்லை. பல மய்யங்களில் கணினி கோளாறால் தேர்வு தாமதமாக தொடங்கியது. தேர்வர்களின் இருக்கைகளுக்கு இடையே தடுப்புச் சுவர்கள் இல்லாததால் மற்றவர்களின் திரையை பார்க்கும் சூழல் ஏற்பட்டது.

மேலும், சில தேர்வு மய்யங்களில் உதவி கண்காணிப் பாளர்களாக கல்லூரி மாணவர்கள் நியமிக்கப்பட்டதால், அவர்கள் முறையாக கண்காணிக்காமல் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் பார்த்தும் கேட்டும் தேர்வு எழுதியுள்ளனர். புதுக்கோட்டை தேர்வு மய்யத்தில் கைப்பேசி மூலம் தேர்வர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 தேர்வர்கள் மற்றும் 2 உதவி கண்காணிப்பாளர்கள் மீது எப்.அய்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தேர்வு மய்யங்களில் தேர்வு நடைபெற்ற நேரத்தில் கணினியில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.

தேர்வு நடந்த நேரத்தில் சோதனைக் குழு (Flying Squad) பெரும்பாலான தேர்வு மய்யங்களை ஆய்வு செய்யவில்லை. இதன் காரணமாக முறைகேடுகள் தடுக்கப்படாமல் நடைபெற்றுள்ளன. இந்த குற்றசாட்டுகள் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் வரை சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *