புதுடில்லி, ஜூலை 13 அனில் அம்பானி குழுமத்திற்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கான அதிரடி உத்தரவை அமலாக்கத் துறை பிறப்பித்துள்ளது. தொழிலதிபர் அனில் அம்பானியின்,அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அனில் அம்பானி குழுமத்திற்கு, யெஸ் வங்கி ரூ.11,000 கோடி கடன் அளித்தது.
அதை அவர் முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராடெல், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனங்களுக்காக வாங்கிய கடன்களை, சட்ட விரோதமாக அவர் பயன்படுத்தியுள்ளார்.மொத்தம், ரூ.40,185 கோடி மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
அனில் அம்பானி குழுமத்தால் நடத்தப்படும் போலி நிறுவனங்கள், குழும நிறுவனங்களின் வலைப்பின்னல் மூலம், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிட் ஆகியவை திரட்டிய ரூ.15,548 கோடி நிதி திசை திருப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக,அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் மூலம், இந்த வழக் கில் அமலாக்கதுறையால் முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.20,367 கோடியாக அதிகரித்துள்ளது.
ககன்யான் விண்கலத்தில்
3 புதிய சோதனைகள் வெற்றி
புதுடில்லி ஜூலை 13- ககன்யான் விண்கலத்தின் ‘குழு தொகுதி’ (குரூவ் மாடுல்) அமைப்புகளுக்கான 3 முக்கிய சோதனைகள் வெற்றிகரமாக நடந்தது. இதில் முதல் சோதனையானது, விண்கலம் கடலில் விழுந்த பிறகு குழு தொகுதியை நேர் நிலையில் நிறுத்தி வைத்திருப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது.
2-ஆவது சோதனையானது, விண்வெளி வீரர்கள் தங்கும் ‘குழு தொகுதி’ மற்றும் மின்சாரம் மற்றும் உந்துவிசையை வழங்கும் ‘சேவை தொகுதி’ (சர்வீஸ் மாடுல்) ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பாகச் செயல்படும் ‘அம்பிலிக்கல்’ பொறிமுறையின் பிரிப்புச் சோதனையாகும். இதுவும் வெற்றிகரமாக நடந்தது.
3-ஆவது சோதனையானது, ‘உச்சப் பகுதி உறை’ (அபெக்ஸ் கவர்) பிரிப்பு நிகழ்வின்போது குழு தொகுதியின் கட்டமைப்பு உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதாகும். அதுவும் வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ கூறி உள்ளது.
