தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி ‘மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா’வில் தமிழர் தலைவர் கருத்துரை

பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான் ‘சென்னை மாகாணச் சங்கம்’

சென்னை, ஜூலை,11 மணவழகர் மன்றத்தின் முத்தமிழ் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  “பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக, காங்கிரசிலிருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், ‘சென்னை மாகாணச் சங்கம்  அதில்  யானும், ஈ.வெ.ரா. வும் துணைத்தலைவர்களாக இருந்தோம்” என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதி யிருப்பதாக தமிழர் தலைவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

1957இல் தொடங்கப்பட்ட சென்னை மணவழகர் மன்ற அறக்கட்டளை, அதன் 70 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா 10.07.2026, வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில், மணவழகர் மன்றத்தின் செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதில் அவர், “தமிழ்த்தென்றல் திரு.வி.க.கூறியது போல், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவராகவும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. தாய் என்றும் பேசியிருக்கிறார்கள்” என்று ஒரு முக்கியமான வரலாற்றுக்குறிப்பை நினைவூட்டிப் பேசினார். வரவேற்புரை நிறைவு பெற்றவுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் செ.முகம்மது அலி, “இன்றைய தமிழர் நிலை” எனும் தலைப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன், “திரு.வி.க.வும், தொழிலாளர் இயக்கமும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர். முன்னதாகவே திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில், “இன்றைய அரசியல் சூழல் மாறியிருக்கிறது. அவர் வருவார், இவர் வருவார் என்று இல்லாமல் எவர் வந்தாலும் வராவிட்டாலும் மணவழகர் மன்றம் நிகழ்ச்சி நடைபெறும்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தொடங்கினார். தொடர்ந்து, தந்தை பெரியாருக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்கும் கருத்து மோதல்கள் இருந்தாலும் அது கண்ணியமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, “இது என்றைக்கும் பாடமாக இருக்கக்கூடியது” என்றார். மேலும், மணவழகர் மன்ற வரலாற்றில் மேனாள் நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், எ.ஆர்.லட்சுமணன், சுந்தரேசன் ஆகியோரை நினைவு கூறாமல் இருக்க முடியாது” என்றார். மேலும் அவர், வரவேற்புரை வழங்கிய கன்னியப்பன் அவர்களின் பணிகளையும் நினைவு கூர்ந்து பாராட்டினார்.

தொடர்ந்து, தனக்கு வழங்கப்பட்ட ‘தந்தை பெரியாரும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும்” என்ற தலைப்பை சுட்டிக்காட்டி, “Unlike poles attracks each other” என்ற காந்தவியலைச் சுட்டிக்காட்டி இருவரின் கருத்துகளையும், குணங்களையும் பட்டியலிட்டார். “சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்தார்” என்பதை முன்னோட்டமாகக் கூறிவிட்டு, நீதிக்கட்சி இருந்த காலத்தில், அதற்கு போட்டியாகத்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், சென்னை மாகாண சங்கம். அந்த சென்னை மாகாண சங்கத்தில், தந்தை பெரியாரும், திரு.வி.க.வும் துணைத் தலைவர்களாக இருந்ததை, திரு.வி.க.வே எழுதியிருப்பதை, அவரது எழுத்துகளிலேயே வாசித்துக்காட்டினார். வாசிக்கும் போதே அந்த தமிழின் இனிமையில் மனதைப் பறிகொடுத்து, “கடலூர் மாநாடு, ஈரோடு மாநாடுகளில் திரு.வி.க. பேசியதை கேட்கும் பேறு பெற்றவன் நான். அவரது பேச்சு மட்டுமல்ல, எழுத்தும் நம்மை ஈர்க்கக்கூடியது” என்று பெருமிதத்துடன் கூறினார். அடுத்து திரு.வி.க. சொன்ன இன்னுமொரு முக்கியமான கருத்தான, “தமிழ்நாடு காங்கிரஸ் ஈ.வெ.ரா வின் உழைப்பால் நன்றாக உண்டு கொழுத்தது” என்பதைச் சொன்னவுடன் பார்வையாளர்கள் நன்றாக ரசித்து சிரித்தனர்.

அடுத்து, “ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கம் எனது சன்மார்க்க இயக்கத்திலிருந்து பிறந்தது. 90% ஒற்றுமை! 10% வேற்றுமை! வேற்றுமை எங்களுக்குள் போரை மூட்டியது. ஆனால், வேற்றுமை ஆக்கம் பெறவில்லை” என்று திரு.வி.க. சொன்னதையே எடுத்துரைத்தார். மேலும் அவர், “அந்த வேற்றுமையும் கண்ணியத்துடன் இருந்தது. இது பொதுவாழ்வில் இருப்போருக்கு என்றைக்கும் பாடமாகும்” என்று கூறி, பெரியாரின் தொண்டும், உண்மையும் எப்படிப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பட்டியலிட்டு, காஞ்சிபுரம் மாநாட்டில் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்தாலும், சந்திக்கும் போது, காழ்ப்புக் காட்டாத நண்பர்களாகவே இருந்ததையும் சுட்டிக்காட்டி தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக மணவழகர் மன்றத்தின் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்வில்,  கழகத்தின் செயலவைத்தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,  தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோவி. ராகவன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர், முத்தையன், மோகன்ராஜ், கழகச் சொற்பொழிவாளர்கள் பிராட்லா, தேவநர்மதா, பெரியார் மாணாக்கன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ‌.தொண்டறம், சோழிங்கநல்லூர் ஜெயராமன்,  சுரேஷ், பெரியார் பெருந்தொண்டர் த.கு.திவாகரன், அரும்பாக்கம் தாமோதரன், யுகேஷ், தங்கமணி தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *