சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்!
மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்!
நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை, ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்து நெய்வேலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை
நெய்வேலி, ஜூலை 11 சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்! மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்! தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு நாம் எந்த மேடையில் பேசினாலும், ஒரே குரல்தான் இருக்க வேண்டும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை
கடலூர் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், நெய்வேலி நகரம் முக்கிய கடைவீதியில் – காமராஜர் சிலை அருகில் 7.7.2026 அன்று காலை 10.30 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
எதையும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடியவர்கள் அல்ல நாங்கள். இதை மக்களுக்கு, அதுவும் குறிப்பாக நெய்வேலித் தோழர்களுக்கு தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறோம். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கக்கூடாது என்று நாங்கள் ஏதோ மேம்பாக்காகச் சொல்லவில்லை. நம்முடைய வரிப் பணத்தில் நடைபெறுகின்ற நிறுவனம்; நம்முடைய நெய்வேலி மக்கள், தோழர்கள் நிலம் கொடுத்தார்கள். ஆகவே, நாம் கேட்பதற்கு நியாயம் உண்டு. அந்த அடிப்படையிலே வருகிறபோது நண்பர்களே,
சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் ஒரு நிறுவனம்
தற்போது ஒன்றிய அரசிடமும், தமிழ்நாடு அரசின் சார்பில் சிப்காட், டிட்கோ போன்ற நிறுவனங்களிடமும் இருக்கும் பங்குகள் போக, நிப்பான் இந்தியா, எஸ்.பி.அய். லைஃப் இன்சூரன்ஸ், எல்.அய்.சி உள்ளிட்ட நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்டுக்காக வைத்துள்ளன. தனியார் வசமும் பங்குகள் உள்ளன. இந்த நிலையில் மேலும் பங்குகளை ஒன்றிய அரசு விற்பது பொதுத்துறை நிறுவனத்தை முற்றிலும் கைகழுவும் வேலையாகும். இந்த நிலக்கரி நிறுவனம் சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் ஒரு நிறுவனம்.
10–a(i) அப்பாயின்ட்மெண்ட் என்று சொல்லுவார்கள்; ஆனால் அதற்குக் கூட ஒரு கால நிர்ணயம் உண்டு!
ஆனால், தொழிலா ளர்களின் வயிற்றில் அடிக்கிறது. எப்படி என்றால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அவர்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள், காலம் காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருப்பார்களா? Temporary – Permanent என்று உண்டு அரசாங்கத்தில் கூட. உங்களுக்கெல்லாம் தெரியும், 10–A அப்பா யின்ட்மெண்ட் என்று சொல்லுவார்கள். ஆனால் அதற்குக் கூட ஒரு கால நிர்ணயம் உண்டு. ஆனால், இங்கே அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பட்டை நாமம். யாருக்குப் போகிறது அந்த லாபம்?
ஏனய்யா, ஹிந்தி படிக்க வேண்டும்? ஏனய்யா ஹிந்தியைத் திணிக்கிறாய்? என்று கேட்டால், என்ன சொல்கி றார்கள் தெரியுமா? ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று.
மனுதர்மம் ஏற்காத சமதர்ம ஆட்சி வந்தததினால், நம்மாட்கள் எல்லாம் நன்றாகப் படித்தனர்!
ஹிந்திக்காரர்களே வேலைக்கு இங்கேதான் வருகிறார்கள். அவர்க ளுக்கும் நாம்தான் வேலை கொடுக்கிறோம். நம் ஆள்களுக்கு இன்னொரு வசதி – நிறைய படிக்க வைத்திருக்கிறோம்; நிறைய படித்த தோழர்கள் எல்லாம் இப்பொழுது என்ன செய்கிறார்கள்? படிப்பினால், மனுதர்மத்தைக் கொன்றதினால், மனுதர்மம் ஏற்காத சமதர்ம ஆட்சி வந்தததினால், நம்மாட்கள் எல்லாம் படித்துவிட்டு, இப்பொழுது அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் இன்ஜினியர்களாகப் போய்விட்டார்கள். அதனால் கட்டடம் கட்டுவதற்கு ஆள் இல்லையா? சரி. வடக்கே இருந்து வரட்டும்; பீகார் திராவிடர் வரட்டும் என்று சொல்லி, அவர்களும் இங்கே வந்து, வசதியாக இருக்கிறார்கள். தமிழ்நாடு ஆட்சி போன்று, ‘திராவிட மாடல்’ ஆட்சி போன்று ஒரு பாதுகாப்பான ஆட்சி வடவர்களுக்குக் கிடையாது. அப்படியிருந்தும், சிலர் பொய்யான தகவலைச் சொல்லி, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தலாம் என்று நினைத்தார்கள். அது முடியாமல் போனது அவர்களால்.
மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்றைக்கு ஒரு பக்கம் இருந்தாலும், முன்னுரிமை யாருக்கு? மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் முன்னு ரிமை இருக்க வேண்டும். அந்த வாய்ப்பைப் புரிந்து கொள்ள வேண்டாமா? பீகார் மாநிலத்திற்குச் சென்று, வேறொரு மாநிலத்துக்காரரை முதலமைச்சர் என்று சொன்னால், ஏற்றுக் கொள்வார்களா? பக்கத்தில் இருக்கிற கருநாடகத்துக்காரர்களே நமக்குத் தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்களே.
நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். அந்த மின்சாரத்தைப் பக்கத்துப் பக்கத்து மாநிலங்களுக்குக் கொடுக்கவேண்டும். உற்பத்தி செய்வது நாம். ஆனால், நம்முடைய ஊர் மக்கள் இருட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
என்ன லாபம்? அதாவது பட்டை நாமம் நமக்கு.
முன்னுரிமை தமிழ்நாட்டுக்குத் தான் இருக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிற மின்சாரத்தைக் கொடுப்பதில், முன்னுரிமை தமிழ்நாட்டுக்குத் தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், அதிக மான அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து, நமக்கில்லாமல், இன்னொருவருக்குக் கொடுப்பது எப்படி இருக்கிறது என்றால், ‘‘பட்டுச்சேலையை இரவல் கொடுத்தவன், மணக்கட்டையைத் தூக்கிட்டுக் கொண்டு பின்னாலேயே ஓடினான்’’ என்று தந்தை பெரியார் சொல்லுவார். அவர்கள் தனியார் துறை தனியார் துறை என்று ஊக்கப்படுத்தி, மிகப்பெரிய அளவிற்கு நாட்டு மக்களுக்கு இழப்புத்தான் மஞ்சியிருக்கிறது.
தேர்தல் நிதி அதிகமாக யாருக்கு வந்திருக்கிறது?
ஏன் தனியார் துறை? CSR என்று ‘பிரதமர் பண்ட்’ என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். அதில், Corporate Social Responsibility – அதற்கு நன்கொடை. அந்த நன்கொடை எவ்வளவு கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. தேர்தல் நிதி அதிகமாக யாருக்கு வந்திருக்கிறது? பிஜேபி அமைப்புக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தான் வழிநடத்துகிறது. அந்த நிதியெல்லாம் தனியார் துறையால்தான் அளிக்கப்பட்டு இருக்கிறது.
உங்களுக்குப் புரிகின்றதா? முதலில் தனியார் துறையை ஊக்கப்படுத்தி, அதை லாபம் அடையச் செய்து, அந்த லாபத்திலிருந்து, தேர்தல் நிதியாகவும், மற்ற நிதியாகவும் வாங்கிக் கொள்கிறார்கள்.
வெளியில் பார்த்தீர்கள் என்றால், ‘‘நாங்கள் ஊழலே பண்றது இல்லை பார்த்தீர்களா’’ என்று சொல்கிறார்கள்.
‘‘ராமன் கோயில் ஊழல் என்ன பாடுபடுகிறது’’ என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
திருச்சி ‘பெல்’ கம்பெனி தமிழ்நாட்டுக்கு வரக் காரணமாக இருந்தவர் காமராஜர்!
ராமனுக்கே சேர்ந்து, சிறீராம ஜெயம் பாடினார்கள். ‘ராம் ராம்’ என்று சொன்னார்கள். ‘ஹரே ராம்’ என்று அவர் நிற்கிறார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, இன்றைக்கு நம்முடைய நிலை என்ன? எனவேதான், நண்பர்களே! தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது; இதே மாதிரி நவரத்தினா என்று சொல்லக்கூடிய திருச்சி பிஎச்இஎல் (BHEL) –இல் வரும்போதே, அதைத் தொடங்கும்போதே, காங்கிரசில் இருந்த தலைவர்களான நிஜலிங்கப்பா, கருநாடகத்திற்கு வேண்டும் என்றார். வடநாட்டுத் தலைவர் ஒருவர், உத்தரப்பிரதேசத்திற்கு வேண்டும் என்றார். ஆந்திராவில் சஞ்சீவ ரெட்டி, அய்தராபாத்தில் வையுங்கள் வசதியாக இருக்கும் என்றார். ஆனால், இதோ சிலையாக இருக்கிறாரே காமராஜர் அவர்கள், அவர்தான், ‘‘இல்லை, திருச்சிக்குத் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்’’ என்று சொன்னார். அதனால் இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, இதில் கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை, எல்லோரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.
ஒன்றுபட முடியாது, அரசியல் குறுக்கே நிற்கிறது என்று சொன்னால், ‘பரவாயில்லை, தனியாகவாவது போராடுங்கள்.’’ நாங்கள் இந்த மேடையில இன்றைக்குப் பேசுறோம். இதையே மாலையில் இடதுசாரி நண்பர்கள் வந்து பேசுகிறார்கள். தனிக்கூட்டம் போட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், அரசியல்வாதிகளுக்கு அரசியல் தேவை. அதனால், அவர்கள் தனியாகத்தான் இருப்பார்கள். ‘‘வருவாங்க, போவாங்க’’ அதெல்லாம் சர்வசாதாரணம்.
எங்களுக்குத்தான் ஒரே வழி இருக்கிறது. ‘எக்ஸிட் – என்ட்ரன்ஸ்’ இரண்டும் இருக்கிறது அங்கே. எப்போது வசதியாக இருக்கிறதோ, உள்ளே வருவாங்க! எப்பொழுது வசதி குறைவோ வெளியே போவார்கள். நாங்கள், தாயும் –பிள்ளையுமாக இருக்கிறவர்கள்; ஒரே வழியில் தான் என்றைக்கும் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். என்றைக்கு இருந்தாலும் மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய சூழல் இருக்கும்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு நாம் எந்த மேடையில் பேசினாலும், ஒரே குரல்தான் இருக்க வேண்டும்!
ஆகவேதான், அவர்கள் இந்த மேடையிலே பேசுகிறார்களா அல்லது தனித்த மேடையிலே பேசுகிறார்களா என்பது பற்றியெல்லாம் கவலையில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு நாம் எந்த மேடையில் பேசினாலும், ஒரே குரல்தான் இருக்க வேண்டும். அந்தக் குரல்தான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாறுபடக் கூடாது. ‘‘ஒன்றிய அரசாங்கமே, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. வேலைவாய்ப்பு உரிய அளவில் எங்கள் மக்களுக்குக் கொடுக்க வேண்டும். ‘ஒப்பந்தத் தொழிலாளர்கள்’ என்ற பெயராலே பட்டை நாமம் சாத்தாதீர்கள்’’ என்பதாக அந்தக் குரல் இருக்கவேண்டும். இவை எல்லாம் தேவையான உரிமைகள் – இதைத் தொடர்ந்து நாங்கள் வற்புறுத்துவோம்.
பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், இப்பொழுது இந்தக் குரலை எல்லோரும் கேட்கிறார்கள். ‘சமூக நீதி வேண்டும்’ என்று கேட்கிறார்கள்.
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே எம்.ஏ. வகுப்பு கடைசி ஆண்டு படிக்கிறேன். சிதம்பரம் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களுடைய தலைமையிலேயே இங்கே கூட்டம் போடுவதற்காக வந்தோம். இந்த எல்லைக்குள்ளேயே கூட்டத்துக்கு அனுமதி கிடையாது. அதனால் என்ன செய்தோம் என்றால், பக்கத்து ஊரான மந்தாரக் குப்பத்தில் அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். அப்பொழுதெல்லாம் இவ்வளவு பெரிய இடம் கிடையாது, வசதி கிடையாது.
(தொடரும்)
