சென்னை, ஜூலை 11- ஒருங்கிணைந்த கல்வி, நிர்வாக கட்டமைப்பை வழங்குவதற்காக மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க இ.எஸ்.அய். திட்ட மிட்டுள்ளது.
ஒன்றிய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.அய்.அய்), மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் செயல்பட்டு வருகின்றன.
இவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இ.எஸ்.அய். மருத்துவமனைகளில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்து இருக்கின்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், தனது மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை எண்ணிக்கை விரிவுபடுத்துவதற்காக தனித்துவமான மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை தொடங்கி, மருத்துவக் கல்வி நிர்வாகத்தை முழுமையாகப் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவ பல்கலைக்கழகம், இ.எஸ்.அய். மருத்துவ அறிவியல் மற்றும் தொழிலாளர் சுகாதார நிறுவனம் என்று பெயரிடப்பட உள்ளது. இது நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற தகுதியுடன் செயல்படும். இ.எஸ்.அய்.அய்-இன் 17 மருத்துவக் கல்லூரிகள், 2 பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 செவிலியர் கல்லூரிகள் ஒரே கல்வி மற்றும் நிர்வாக அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.
மேலும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. செவிலியர் கல்வி, அலுவலக உதவியாளர்கள், துணை சுகாதார அறிவியல், தொழிலாளர் சுகாதாரம், பொது சுகாதாரம், சுகாதார நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, சமூக பாதுகாப்பு போன்றவற்றுக்கான துறைக்களும் அமைக்கப்பட உள்ளது. இ.எஸ்.அய்.அய்-இன் மருத்துவக் கல்வி பிரிவை மேலும் வலுப்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.
தற்போது செயல்பாட்டு வரும் இ.எஸ்.அய்.அய். மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாக ரீதியாக அமைக்கப்பட உள்ளது. இ.எஸ்.அய்.அய் மருத்துவக் கல்லூரிகள், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறும் ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டு, கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கான வழிகாட்டல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
