நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் பிறந்த ஊர் பட்டிவீரன்பட்டி. இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. பகுத்தறிவாளர்கள் நிறைந்த ஊர் என்கிற பெயர் இந்தக் கிராமத்திற்கு உண்டு. இந்தக் கிராமத்தில் அரைக்கால் சட்டை (Trouser) அணிந்து, “தீபாவளி கொண்டாடக் கூடாது ஏன்?” என்கிற துண்டறிக்கையை ஒரு சிறுவன் கொடுத்தார். அந்தச் சிறுவனின் பிந்தைய வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதை இந்த வாரத்தில் காண்போம்!
அய்யா வணக்கம்! தங்கள் பெயர் என்ன? எந்த ஊரில் பிறந்தீர்கள்?
என் பெயர் வீ.இராமசாமி. 1939 இல் பிறந்த எனக்கு, இப்போது 87 வயதாகிறது. அம்மா பகவதி அம்மாள், அப்பா வீராச்சாமி. நான் பிறந்தது திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை எனும் கிராமத்தில், வளர்ந்தது பட்டிவீரன்பட்டியில்! அங்குதான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆசிரியர் பயிற்சி வகுப்பை இரண்டு ஆண்டுகள் டி.கல்லுப்பட்டி எனும் ஊரில் முடித்தேன். பிறகு உடற்கல்விப் பயிற்சியை நிறைவு செய்து, கக்கன் பிறந்த ஊரான மேலூர், தும்பைப்பட்டி அரசுப் பள்ளியில்,1967 ஆம் ஆண்டு, முதன்முதலில் பணிக்குச் சேர்ந்தேன்.
உடற்கல்வி ஆசிரியராக 9 ஆண்டுகளும், உடற்கல்வி இயக்குநராக 24 ஆண்டுகளும் பணி செய்து ஓய்வு பெற்றேன். திருமணத்திற்குப் பிறகு பி.ஏ., முடித்து, பின்னர் B.P.Ed, (Bachelor of Physical Education), M.P.Ed ஆகியவற்றைக் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முடித்தேன். பணி செய்து கொண்டே அஞ்சல் வழியிலும், மாலை நேரக் கல்லூரியிலும் முடித்து, இந்த உயர்நிலைக்கு வந்தேன்.
திராவிட இயக்கச் சிந்தனை எப்போது அறிமுகமானது?
ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் அவர்களின் சொந்த ஊர் பட்டிவீரன்பட்டி என்பதாலும், அவர் நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் என்பதாலும் எங்கள் ஊருக்கு இயல்பாகவே ஒரு பெருமை உண்டு. இளம் வயதிலேயே கூட்டங்கள் கேட்பது, படிப்பகம் செல்வது போன்றவை நடைமுறையில் இருந்தன. எங்கள் கிராமத்தில் “திமுக மன்றம்” என்கிற பெயரில் படிப்பகம் ஒன்று இருந்தது. அதன் செயலாளராக நடராஜன் என்பவர் இருந்தார். என்னைப் போன்ற சிறுவர்களின் பொழுதுபோக்கே அங்கு செல்வதுதான்.
அப்போது எனக்கு 14 வயது இருக்கும். தந்தை பெரியார் எழுதிய “தீபாவளி கொண்டாடக் கூடாது ஏன்?” என்கிற கட்டுரையைத் துண்டறிக்கையாகக் கொடுத்தார்கள். அதைப் பத்து சிறுவர்கள் சேர்ந்து கிராமத்தின் பல வீடுகளுக்கும் கொடுத்தோம். சிலர் இதை “அதிகப்பிரசிங்கித்தனம்” என்றார்கள். அதேநேரம் கொள்கை சார்ந்த பத்திரிகைகளையும் நாங்கள் தொடர்ந்து வாசித்து வந்தோம்.
“உடற்கல்வி ஆசிரியர்” என்கிற அனுபவம் குறித்துக் கூறுங்கள்?
இப்போதும் பொது வெளியில் சந்திக்கும் சிலர், “நான் உங்கள் மாணவர்கள்”, என அறிமுகம் செய்து கொள்வார்கள். மகிழ்ச்சியாக இருக்கும். அந்தளவு பணியின் மீதும், மாணவர்களின் மீது அக்கறைக் கொண்டிருந்தேன். 20, 30 ஆண்டுகள் கழித்தும் ஆசிரியர், மாணவர்கள் தொடர்பு நீடிப்பது என்பது பெருமைக்குரிய ஒன்று. தஞ்சாவூர் மாவட்டக் காப்பாளராக இருக்கும் மு.அய்யனார் என்னிடம் தான் பள்ளிப் படிப்பையும், பகுத் தறிவுப் படிப்பையும் படித்தார். அப்போது நான் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பள்ளியில் வேலை செய்து கொண் டிருந்தேன்.
இரயில்வே, காவல்துறை, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பல நிலைகளில் எனது மாண வர்கள் இருக்கிறார்கள். உடற்கல்வி எனும்போது, மாணவர்களை மைதானத்தில் தான் சந்திக்க முடியும். எனினும் பிற ஆசிரியர்கள் வராத நாளில், என்னை வகுப்பிற்கு அனுப்புவார்கள். அப்போது பொது செய்திகள், ஒழுக்க நெறி, பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கருத்துகளைச் சொல்லிக் கொடுப்பேன். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்தக் கால “உண்மை” இதழில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடர்பான ஒரு கட்டுரை வந்தது. உடற்பயிற்சிகளின் தேவை, அதற்கேற்ற உணவுகள், ஆக்சிஜன் கொள்ளளவு, கால் தடம் எடுத்து வைப்பதில் ஓட்டப்பந்தய வீரர்களுக்கும், பிறருக்குமான வேறுபாடு என அந்தக் கட்டுரை விரிவாக, தெளிவாக இருந்தது. அதையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தேன்.
தங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?
எனது இணையர் பெயர் இராஜேஸ்வரி. இன்றைய எனது முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தவர். எங்களது சுயமரியாதைத் திருமணம் 1971 ஆம் ஆண்டு வத்தலக் குண்டில் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களை அழைத்திருந்தோம். ஆனால் அய்யா அவர்களுக்கு வர வாய்ப்பில்லை. எனவே அன்பில் தர்மலிங்கம் திருமணத்தை நடத்தித் தந்தார்கள். அன்றைய தினம் மதுரை, உத்தங்குடியில் வேளாண்மைக் கல்லூரி திறப்பு விழாவும் இருந்தது. அதை முடித்து அன்பில் தர்மலிங்கம் மதியம் ஒரு மணிக்குத்தான் திருமண மண்டபத்திற்கே வந்தார்.
எனது இணையர் திருமண நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்திருந்தார். படிப்பதில் ஆர்வம் அதிகம். திருமணம் முடிந்த அடுத்த நாளே, தட்டச்சுப் பயிற்சிக்குச் சென்றுவிட்டார். தொடர்ந்து சுருக்கெழுத்து (Short Hand) முடித்து, இளங்கலை பொருளாதாரத்தை அஞ்சல் வழியில் கற்று, சென்னைக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்துவிட்டார். எங்களுக்கு சுமதி, கார்க்கி என்கிற இரண்டு பெண் குழந்தைகளும், அருள்செல்வன் என்கிற பையனும் இருக்கிறார்கள். மூவருக்குமே சுயமரியாதைத் திருமணம் தான் செய்து வைத்தோம். மகள்களில் ஒருவர் கோயம்புத்தூரில் பேராசிரியராகவும், மற்றொரு மகள் கத்தார் நாட்டிலும் வசிக்கிறார். மகன் அமெரிக்காவில் இருக்கிறார். ஆசிரியர் அமெரிக்கா சென்றால், மருமகள் லாவண்யா உடன் சென்று சந்திப்பார்.
பணியில் இருந்த காலத்தில் கொள்கைப் பணிகள் எப்படி இருந்தன?
வத்தலக்குண்டில் இருந்த போது திண்டுக்கல், பழனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு மிதிவண்டியில் போன அனுபவம் உண்டு. திண்டுக்கல் “முனிசிபல்” மைதானத்தில் பெரிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் தந்தை பெரியாரிடம், ஜி.டி.நாயுடு ஒரு ரூபாய் நன்கொடை வழங்கினார். பெரியாரும் அதை “பவ்யமாக” பெற்றுக் கொண்டு பாராட்டிப் பேசினார்.
அதேபோல காந்தி கிராமப் பல்கலைக் கழகத் தலைவராக சவுந்தர்ராஜன் என்பவர் இருந்தார். கையில் துண்டுடன் (பொன்னாடை) மேடை ஏறியவர், அதைப் பெரியாரின் தோளில் போடாமல், கால்களில் வைத்தார். அப்போது சவுந்தரராஜன் கூறும் போது, “நான் அரைக்கால் சட்டை (டிரவுசர்) போட்ட காலத்திலேயே, தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர். அதனால் தான் பொன்னாடையைக் கால்களில் வைத்தேன்” என்றார். ஆனால் பெரியார் அதை ஏற்கவில்லை.
ஓய்விற்குப் பிறகு வாழ்க்கை எப்படிச் செல்கிறது?
நிறைவாக இருக்கிறது. இப்போது மதுரையில் வசிக்கிறோம். இன்னும் ஒரு செய்தி சொன்னால், உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஓய்விற்குப் பிறகு நான் பி.எல்., (Bachelor of Law) படித்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமும் வாங்கி, வழக்குரைஞராகவும் பதிவு செய்து வைத்துள்ளேன். திருமணத்திற்குப் பிறகு எப்படி B.A., B.P.Ed, M.P.Ed முடிக்க எனது இணையர் தூண்டுதலாய் இருந்தாரோ, அதேபோல பி.எட்., முடிக்கவும் அவர் உற்சாகம் தந்தார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கு அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். நானும், இணையரும் சென்று முதலமைச்சரைச் சந்தித்தோம். அப்போது முதலமைச்சர், “எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ளைச் சட்டைகள் தான் தெரிகிறது, நீங்கள் இருவரும் கருப்புடையில் வந்துள்ளீர்கள், மகிழ்ச்சி!”, என்றார்.
ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வருகிறபோது நாங்கள் சென்று பார்த்துவிடுவோம். திருச்சி பெரியார் உலகத்திற்கு 4 இலட்சம் நன்கொடை வழங்கியுள்ளோம். பொதுவாக நன்கொடை எழுதிக் கொடுக்கும் சீட்டில் “வளரும்” என்று தான் எழுதிக் கொடுப்பேன். ஏனெனில் நாம் பொருளாதார மேம்பாடு அடைய தந்தை பெரியார் சிந்தனைகள் தான் முக்கியக் காரணம். அதுமட்டுமின்றி “ஒழுங்குபடுத்தப்பட்ட” ஒரு வாழ்க்கை முறை நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறை தொடர்ந்தால் நமது மற்ற செயல்பாடுகளும், பொருளாதாரமும் தானாகவே நம்மிடம் வந்து சேரும். எனவே பெரியார் கொள்கையே எங்கள் வாழ்க்கை வெற்றிக்குக் காரணம்!
ஓர் உடற்கல்வி ஆசிரியராக, “நமது ஆசிரியர்” குறித்த தங்கள் பார்வை என்ன?
கருப்புச் சட்டைக் குடும்பங்களின் தலைவர், நமது இயக்கத்தின் ஈடுகட்ட முடியாத தலைவரே நமது ஆசிரியர். அவர் நமது பெருஞ்செல்வம்! சமுதாய நோக்கோடும், சமூகக் கவலைகளுடனும் இருப்பவர். என்னைப் போன்றோர் 90 வயது வரை வாழ்வோம் என்கிற நம்பிக்கையை அளித்த மனநல மருத்துவர். எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்தபோது சில சிரமங்கள் ஏற்பட்டு, பாதிப்புகள் உண்டாயின. ஆசிரியர் அவர்களின் ஆலோசனைகளும், தீர்வுகளும் தான் என்னை அதிலிருந்து மீட்டன. உடல் நிலையைக் கையாளும் திறன் ஆசிரியருக்கு எப்போதும் உண்டு. உணவு உள்ளிட்ட அனைத்திலும் கட்டுப்பாடு மிக்கவர். அதை நாமும் பின்பற்ற வேண்டும்.
ஒரு காலத்தில் நானும் வறுமையின் பிடியில் வாழ்ந்தவன் தான். இன்று யாராவது என்னை “நல்லவன்” என்று சொன்னால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரின் கொள்கைகள் தான். ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்’ என அனைத்துப் பத்திரிகைகளும் எங்கள் வீட்டிற்கு வருகிறது. எனக்கு வாசிப்பது மிகவும் பிடிக்கும். நமது இயக்க நூல்களும் நிறைய வைத்துள்ளேன்”, என உடற்கல்வி ஆசிரியர் இராமசாமி கூறினார்.
