மக்களாட்சியின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களும், மக்களின் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளும் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஓர் அரசின் கடமையாகும். ஆனால், மகாராட்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு நிகழ்வு, ஒட்டுமொத்த ஜனநாயகப் பண்புகளையும் கேலிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
ரூ. 7,000 கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மும்பை – புனே சுரங்கப்பாதை, திறக்கப்பட்ட சில நாட்களிலேயே, பெய்த முதல் மழையைக்கூடத் தாங்காமல் இடிந்து விழுந்திருக்கிறது. உலகமே வியந்து பாராட்டும் உலக சாதனை என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட ஒரு திட்டம், முதல் மழையிலேயே நிலச்சரிவிலும் இடிபாடுகளிலும் சிக்கியிருப்பது அப்பட்டமான ஊழலையும், தரமற்ற கட்டுமானத்தையுமே காட்டுகிறது.
இந்தத் தவறைச் சுட்டிக்காட்டிய ஊடகங்களையும், இது குறித்துச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பார்த்து, அம்மாநில முதலமைச்சர் (துணை முதலமைச்சர்) தேவேந்திர பட்னாவிஸ் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரிகத்தின் உச்சக்கட்டம்.
அதிகாரத் திமிரா? அவதூறுப் பேச்சா?
“நாயின் கழிவுகள் நாற்றத்தைப் பரப்புவது போல் ஊடகங்கள் எழுதுகின்றன, அவர்கள் நாயின் பிள்ளைகள்” என்று ஒரு மாநிலத்தின் உயரிய பொறுப்பில் இருப்பவர் பேசியிருப்பது, அவர் தன் நிதானத்தை இழந்துவிட்டார் என்பதைத் தாண்டி, அவரிடம் தார்மீகப் பொறுப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.
கேள்விகளை எதிர்கொள்ள முடியாத பலவீனம்: ரூ.7,000 கோடியில் கட்டப்பட்ட தரம் குறைந்த பாதையைப் பற்றிய கேள்விக்கு கட்டுமானத் தரம் குறித்து விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து, கேள்வி கேட்பவர்களை “நாயின் பிள்ளைகள்” என்று வசைபாடுவது, தவறை மறைக்கப் பார்க்கும் பலவீனமான முயற்சியே ஆகும்.
அவை நாகரிகம் அற்ற போக்கு: சட்டமன்றம் என்பது விவாதங்களுக்கும், மக்கள் நலன் சார்ந்த கேள்விகளுக்குமான தளம். அங்கு ஒரு முதலமைச்சர் இத்தகைய கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன் படுத்துவது ஒட்டுமொத்த அவையின் கண்ணியத்தையும் சீர்குலைப்பதாகும்.
மக்களை மிரட்டும் தோரணை
“அத்தனை பேரையும் ஒட்டுமொத்த மக்கள் ஆதரவோடு விரட்டியடிப்போம்” என்று கோபாவேசமாகக் கூறுவது, ஊழலைத் தட்டிக்கேட்பவர்களுக்கு விடுக்கப்படும் அப்பட்டமான மிரட்டலாகும்.
ஊழலை மூடிமறைக்க ‘தேசப்பற்று’ என்னும் கேடயம்!
“மகாராட்டிராவை உலக அரங்கில் அவமானப்படுத்த நினைக்காதீர்கள்” என்று பட்னவிஸ் பேசியிருப்பது, தங்களின் நிர்வாகத் தோல்வியை ‘மாநிலப் பெருமை’, ‘தேசப்பற்று’ என்ற போர்வைக்குள் ஒளித்து வைக்கப் பார்க்கும் வழக்கமான தந்திரமே ஆகும்.
உண்மை என்னவென்றால், தரம் குறைந்த கட்டு மானத்தால் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததுதான் மகாராட்டிராவிற்கு அவமானம். அதைச் சுட்டிக்காட்டி, மக்களின் உயிரைப் பாதுகாக்க நினைத்த ஊடகங்களோ, எதிர்க்கட்சிகளோ மாநிலத்திற்கு அவமானத்தைத் தேடித்தரவில்லை.
பா.ஜ.க.-வின் அரசியல் கலாச்சாரம் மீதான விமர்சனம்!
இந்த விவகாரத்தில் பாஜக-வின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரை இருக்கும் தலைவர்களின் அரசியல் நாகரிகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிகார பலமும், பெரும்பான்மையும் கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம், யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம் என்ற மனப்பான்மை மக்களாட்சிக்கு ஆபத்தானது.
ஊழலை விமர்சிப்பது ஊடகங்களின் கடமை. அதைக் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. இந்தக் கடமையையும் உரிமையையும் “நாயின் கழிவு” என்று ஒப்பிட்ட பட்னாவிஸின் பேச்சு, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
ஒரு நாகரிகமான அரசில், விமர்சனங்கள் மதிக்கப்பட வேண்டும்; தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதை விடுத்து, ஊழலைத் தட்டிக்கேட்பவர்களை அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் பேசுவது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடே தவிர வேறில்லை. மக்களின் வரிப்பணத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள், தங்களின் நாத்தவறுகளுக்கு முதலில் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
