கோயில்கள் உள்ளிட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்!

3 Min Read

சாலைகளில் நடப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையுடன் இணைந்தது (Right to Life) என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் வருவதற்கு முன்னால், சக்கரமும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னாலிருந்தே மனிதன் நடந்துகொண்டிருக்கிறான் என்ற உண்மையையும் அது நமக்கு நினைவூட்டியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

நடைப்பயிற்சிக்கு ஏற்ற பாதுகாப்பான மற்றும் வசதியான நடைபாதைகள் இல்லாததும், புதிதாக அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் இதற்கான காரணங்கள் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

காரணம், கடந்த சில ஆண்டுகளில் சாலை விபத்துகளில் பாதசாரிகளின் மரணம் கணிசமாக உயர்ந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2015-க்கும்
2024–க்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்த சாலை விபத்து மரணங்கள் 21.24% அதிகரித்துள்ளது. ஆனால், அதில் பாதசாரிகளின் உயிரிழப்புகள் சுமார் 163% அல்லது 2.63 மடங்கு அதிகரித்துள்ளன. சாலை விபத்துகளில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை 2015-இல் 13,894-ஆக இருந்த நிலையில், 2024-இல் 36,526-ஆக உயர்ந்துள்ளது. மொத்த சாலை விபத்து மரணங்களில் இவர்களின் பங்கு 9.5%-லிருந்து 20.61%ஆக, அதாவது இருமடங்கிற்கும் மேலாக அதிகரித் துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும்கூட பாதசாரிகளின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தன என்று தெரிவிக்கும் புள்ளி விவரங்களை மிகுந்த அக்கறையோடு நாம் கவனிக்க வேண்டும்.

தனது தந்தையுடன் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒரு டேங்கர் லாரி மோதி உயிரிழந்த சம்பவமே இந்த வழக்கின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. “அது தன் மகனுடன் மேற்கொண்ட கடைசி நடைப்பயணமாக இருக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?” என்று நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

பாதசாரிகளுக்கு உகந்த உள்கட்டமைப்பு வசதிகள் பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் முக்கியமாகும். நடைப்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்துவதுடன், இயந்திரமயமான போக்குவரத்துச் சாதனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது; மாசு அளவைக் குறைக்கிறது; நகர்ப்புற வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. எனவே, நடைபாதைகளை வெறும் மக்களுக்கான வசதிகளாக மட்டும் பார்க்காமல், அத்தியாவசியமான பொது உள்கட்டமைப்பாகக் கருத வேண்டும்.

இந்தத் தீர்ப்பு அரசுகளுக்கும் நகராட்சி நிர்வாகங்களுக்கும் ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், சேதமடைந்த நடைபாதைகள் சரிசெய்யப்பட வேண்டும். பாதசாரிகளுக்கான வசதிகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். நகர்ப்புறத் திட்டமிடலின்போது, வாகன ஓட்டிகளின் தேவைகளுக்கு இணையாகப் பாதசாரிகளின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் மக்கள் மய்ய அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.

அதே சமயம், சாலைகள் அமைக்கும்போது, நடைபாதைகள் முறைப்படி, போதுமான அளவு அமைக்கப்படுகின்றனவா என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அமைக்கப்பட்ட நடைபாதைகளும் நடப்பவர்களுக்கானதாக இருக்கிறதா என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். நடைபாதைகளில் சிறு வியாபாரிகள் கடைகள் வைக்கின்றனர்.  சாலையை ஒட்டிக் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள், தங்கள் கடைக்கான விளம்பரங்களை வைக்கவும், பொருள்களை அடுக்கிவைக்கவும், வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் நடைபாதைகளைப் பயன்படுத்துகின்றனர். இப்படி நடைபாதைகளை ஆக்கிரமிப்பதால், நடைபாதைகளில் நடக்க வேண்டியோர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

இவர்களையாவது அவ்வப்போது அப்புறப்படுத்தவும் சட்டங்கள் இருக்கின்றன; காவல்துறையும், நகர நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் கோவில்கள் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இருக்கின்றன. அவற்றையொட்டி, அது தொடர்பான வியாபாரங்கள், கோயிலுக்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துதல் என்று எல்லா சாலைகளிலும் இந்தச் சூழல் இருக்கிறது.

சாலையை அகலப்படுத்தும்போதும், புதுப்பிக்கும்போதும் எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன – ஆனால், கோயில்கள் மட்டும் அகற்றப்படுவதேயில்லை. அரசு ஆணைகள், உயர்நீதிமன்ற உத்தரவுகள், உச்சநீதிமன்றத்தின் கண்டிப்புகள் எல்லாம் அடுக்கடுக்காக இருக்கின்றன. ஆனால், எவையும் செயல்படுத்தப்படவில்லை. மற்ற வியாபாரிகளுக்கு இருக்கும் தடையும் நெருக்கடியும் பக்தி வியாபாரத்திற்கு இல்லை. நாளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு  அனுமதி பெறுவதற்கும்,  நெறிமுறைப்படுத்துவதற்கும் எந்த நடைமுறையும் இல்லை. மரத்துக்கு மரம் மஞ்சள், சிவப்பு, வெள்ளை வண்ணங்களைப் பூசியும், வண்ண வண்ண ஜரிகைத் துணிகளைக் கட்டியும் மிக எளிமையாக எந்த முதலும் இல்லாமல் கடவுள்கள் உண்டாக்கப்பட்டுவிடுகின்றன. ஒரே ஒரு தகர உண்டியல் தான் அதிகபட்ச முதலாக இருக்கக் கூடும். நாளடைவில் அந்த இடம் ஓர் அதிகாரப் பீடமாகிவிடுகிறது; மதவாதிகள் கூடாரமாகிவிடுகிறது; பங்குபிரிப்புகள் – சண்டைகளுக்கும் அடிகோலுகிறது.

நடைபாதைகளில் நடப்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டிருப்பது போல, நடைபாதைகளை ஆக்கிரமிப்பது குற்றமாக்கப்பட வேண்டும். அதை வணிகர்களையும், எளிய மக்களையும் மட்டும் தண்டிக்கும் வாய்ப்பாக்காமல், பக்தி வியாபாரிகளைத் தண்டிக்க வேண்டும். இவையெல்லாம் செய்யப்படுமேயாயின், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இன்னும் பொருள்பொதிந்ததாக அமையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *