பரபரப்பு தகவல்கள்
போபால், ஜூலை 10 பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் ரூ.1,160 கோடி மெகா அரிசி ஊழல் அம்பலமாகி உள்ளது.
இந்த அரிசி எத்தனால் ஆலைகளுக்கு விற்கப்படுவதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிரபல ‘தைனிக் பாஸ்கர்’ நாளிதழ் வெளிகொண்டு வந்துள்ள இந்த விவகாரம், பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.
எத்தனால் ஆலைகளுக்கு தாரை வார்ப்பு
மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு குவிண்டால் ரூ.4,000 வீதம் ஏழைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக அரசு வாங்கிய சத்தூட்டப்பட்ட அரிசி, எத்தனால் ஆலைகளுக்கு வெறும் ரூ.2,320-க்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள ‘சுழற்சி’ முறை அதிர்ச்சியளிக்கிறது:
படி 1: அரசிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு எத்தனால் ஆலைகளுக்காக அரிசி வாங்கப்படுகிறது.
படி 2: அந்த அரிசி, தனியார் அரிசி ஆலைகளுக்கு (கைமாற்றப்படுகிறது.
படி 3: அரிசி ஆலைகள், அதே பழைய அரிசியை மீண்டும் “புதிய அரிசி” என்று பாலிஷ் செய்து அரசிடமே ஒப்படைக்கின்றன.இடையில், ஆலைகளுக்கு அரசு கொடுத்த அசல் நெல் மூட்டைகள் வெளிச்சந்தையில் விற்கப்பட்டு, தனியார் முதலாளிகள் கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். ஏறத்தாழ 50 லட்சம் குவிண்டால் அரிசியில் இந்த நாடகம் அரங்கேறியுள்ளது. பா.ஜ.க. அரசு மற்றும் தனியார் முதலாளிகளின் கூட்டுச் சதியால் ரூ.1,160 கோடி அரிசி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தொடரும் முறைகேடுகள்!
2026-லும் இத்தகைய பழங்கால பாணி அரிசி கடத்தல் மற்றும் சுழற்சி ஊழல் நடப்பது வெட்கக்கேடானது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் என்பது அன்றாட அலுவல் நடைமுறைபோன்று ஆகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இத்தனை கோடிகள் எங்கே போகின்றன?
பள்ளிக்கூடக் குழந்தைகள் மற்றும் ஏழைகளின் ஊட்டச்சத்துக்காக ஒதுக்கப்படும் உணவில் கைவைப்பது மனிதநேயமற்ற செயல். சாலை, சுரங்கப்பாதை என உள்கட்டமைப்பில் தொடங்கி, ஏழைகளின் பசி போக்கும் அரிசி வரை மக்களின் கண் முன்னே இத்தனை கோடிகள் ஊழல் செய்யப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது.
