மும்பை, ஜூலை 9 மகாராட்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் எரிவாயு நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சமையல் எரிவாயு உருளைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மகாராட்டிராவில் கடந்த சில நாள்களாகவே அதிக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ராய்காட் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், எச்பிசிஎல் எல்பிஜி உருளைகள் நிரப்பும் ஆலையில் வெள்ளம் புகுந்தது. இதில், எரிவாயு நிரப்பப்பட்ட மற்றும் காலியானவை என சுமார் 3,000 எல்பிஜி உருளைகள் பாதாளகங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், ஆற்றில் அடித்து வரப்படும் சமையல் எரிவாயு உருளைகளைத் தொட வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் யாரும் எந்தவித ஆபத்தான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்றும், ஆற்றிலோ அல்லது ஆற்றின் அருகிலோ எல்பிஜி சமையல் எரிவாயு உருளைகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
