அயோத்தி, ஜூலை 8 அயோத்தியில் உள்ள ராமன் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் அப்பணத்தைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது.
இத்திருட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வரு கிறது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அவினாஷ் சுக்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அயோத்தி ராமன் கோவில் உண்டியல் பணத்தைத் திருடி, தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலிக்கு ஆடம்பரப் பரிசுகளை வாங்கியதாகக் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரி வித்துள்ளார்.
அயோத்தி ராமன் கோவில் பணத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்பிஅய் தற்காலிக ஊழியர் அவினாஷ் சுக்லா, தான் திருடிய பணத்தில் சுமார் ரூ.19 லட்சத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்காகச் செல வழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், அவினாஷ் சுக்லா தனது காதலியின் வங்கி வழிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.2.5 லட்சம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார்.
மேலும், அவருக்கு ஒரு விலை யுயர்ந்த ‘அய்’போன் ஒன்றையும் உண்டியல் பணத்தில் வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். தனது ஒரு சகோதரனின் ஆடம்பரத் திருமணத்திற்காக ரூ.6 லட்சம் பணத்தை அவர் செலவிட்டுள்ளார். மற்றொரு சகோதரனுக்கு ரூ.5 முதல் 6 லட்சம் வரை நேரடி ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார்.
திருடப்பட்ட பணத்தைக் கொண்டு சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பில் ஒரு மாருதி காரை வாங்கியுள்ளார். காவல்துறை யினரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, இந்தக் காரைத் தனது சகோதரர் அபிஷேக் பெயரில் அவர் பதிவு செய்திருந்தார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவினாஷ் சுக்லாவிடமிருந்து ரூ. 20.39 லட்சம் ரொக்கம், 1,121 அமெரிக்க டாலர், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமன் கோவில் உண்டியல் பண முறைகேடு புகாரைத் தொடர்ந்து, சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தனது பதவியிலிருந்து விலகி யுள்ளார். அவரது பதவி விலகலை அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
சம்பத் ராயின் பதவி விலகலையடுத்து, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் மூத்த நிர்வாகியும், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியுமான கிருஷ்ண மோகன் இடைக்கால பொதுச்செயலாளராக நிய மிக்கப்பட்டுள்ளார்.
