தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டுபிடிப்பு!

2 Min Read

தென்காசி, ஜூலை 7– தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி அகழாய்வில் 16 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அகழாய்வு தளத்தில் படிக்கட்டுகளை கொண்ட சதுர வடிவ செங்கல் கட்டுமான கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இது 2,500 ஆண்டுகள் பழமை யானதாகக் கருதப்படுகிறது.

படிக்கட்டு கிணறு

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: காரிச்சாத்தான் கிராமத்தில் கடந்த 1930ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 6 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்மூலம் இப்பகுதி ஒரு வணிகத் தலமாக இருந்திருக்கலாம். மலையடிப்பட்டி அகழாய்வில், 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால கிணறு கண்டறியப்பட்டுள்ளது. 4-க்கு 4 மீட்டர் அளவில் படிக்கட்டு அமைப்புடன் கூடிய செங்கல் கட்டுமானத்தில் இந்த கிணறு அமைந்துள்ளது.

இங்குள்ள செங்கற்கள் 40 செமீ நீளமும், 20 செமீ அகலமும், 7 செமீ கனமும் கொண்டதாக, மிகப் பெரியவையாக உள்ளன. கிணற்றின் உள்பகுதியில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததற்கான தடயங்கள் தெரிகிறது.

கோடை காலங்களில் இது பண்டையகால மக்களின் நீராதாரமாக இருந்திருக்கக் கூடும். இதுவரை 2 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அகழாய்வில் கிணற்றின் முழு ஆழம் தெரியவரும்.

கீழடி, காவிரிப்பூம்பட்டணம், அரிக்கமேடு போன்ற பகுதிகளில் கிடைக்கக் கூடிய செங்கல் அமைப்புகளை போன்றே இந்த கிணற்றின் கட்டுமானமும் உள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த அகழாய்விலும் கண்டறியாத வகையில் முதல் முறையாக படிக்கட்டு அமைப்புடன் இந்த கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிணற்றின் படிக்கட்டுகள் கற்களாலும், கிணற்றுச் சுவர்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. படிக்கட்டில் உள்ள தேய்மானம் நீண்ட காலமாக மக்கள் இந்த கிணற்றை பயன்படுத்தி உள்ளதை காட்டுகிறது.

இந்த அகழாய்வின் மூலம் வாழ்விட பகுதியும், இடுகாட்டு பகுதி யும் ஒரே இடத்தில் இருந்ததை கண்டறிய முடிகிறது அகழாய்வு தளத்தில் 16 குழிகள் மட்டுமின்றி, 2 இடுகாட்டு குழிகளிலும் அகழாய்வு நடைபெறுகிறது. அந்த குழிகளில் முதுமக்கள் தாழிகள், வரையப்பட்ட 3 பானைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், கீறல் குறியீடுகள் கொண்ட பானைகள், கண்ணாடி மணிகள், சுடுமண் சிற்பங்கள் விளையாட்டுக் கற்கள், கற்கருவிகள், இரும்புப் பொருட்கள், இரும்பு உருக்கின் கழிவுகள், ஹீமடைட் இரும்புத்தாது, உயர்தர தகர வெண்கலத் துண்டு ஆகியவை கிடைத்துள்ளன.

இங்கு கண்டறியப்பட்டுள்ள பொருள்களது காலத்தை தொல்லியல் சான்றுகள் மூலம் நுண்கற்காலம், இரும்புக் காலம், வரலாற்று தொடக்க காலம், வரலாற்றுக் காலம் ஆகிய அனைத்து பண்பாட்டு காலங்களிலும் இங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம் என அறிய முடிகிறது. இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *