நெய்வேலியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

5 Min Read

இலாபம் கொழிக்கும் என்.எல்.சி.யின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா?
தனியார் மயம் என்றால், சமூகநீதிக்குச் சவக்குழியே!
என்.எல்.சி. பங்குகளின் பெரும் பகுதியைத்
தமிழ்நாடு அரசுக்கு அளிக்கட்டும், தமிழ்நாடு அரசும் முன்வரட்டும்!
இது முதற்கட்டப் போராட்டமே! பல கட்டப் போராட்டங்களை நடத்துவோம்

நெய்வேலி,  ஜூலை 7  ‘‘இலாபம் கொழிக்கும்  என்.எல்.சி. பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது. தனியார் மயமானால், இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து. என்.எல்.சி. தன் பங்குகளைத் தனியாருக்கு விற்குமானால், அதனைத் தமிழ்நாடு அரசுக்கு விற்கட்டும்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நெய்வேலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்குப் பேட்டி!

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து, இன்று (7.7.2026) முற்பகல் திராவிடர் கழகம் சார்பில் கண்டன அறப்போராட்டம் நடைபெற்றது. அறப் போராட்டத்திற்குப் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால், என்.எல்.சி. நிறுவனம் பங்குகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறதே, அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: இது முதல் கட்டம்தான். என் உரையில் நான் கடைசியாக முடிக்கும்போது சொன்னபடி, முதற்கட்டப் போராட்டம்தான் இது. அனைவரையும் நாங்கள் ஒருங்கிணைப்போம். தமிழ்நாட்டில், இந்நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல, பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்றால்,  அதனை எதிர்த்து, மக்கள் பெருந்திரள் போராட்டமாக, மக்களைத் திரட்டி நடத்துவோம்.

அதனுடைய பார தூர விளைவுகளை – இரண்டு ஆபத்துகளைப்பற்றிச் சுருக்கமாக என் உரையில் சொன்னேன்.

முதலில், தனியாருக்கு இந்தப் பொருள் கொள்ளை யடிக்கப்பட்டு, லாபம் போகிறது. அதைவிட, சமூகநீதிக்கு இது பெரிய கேடாகும்.

தனியார்த்துறை பெருகினால்
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!

பொதுத் துறை நிறுவனங்களாக இருக்கக்கூடிய வங்கிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றில், இட ஒதுக்கீடு மூலம் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. தனியார்த் துறை நிறுவ னங்களில் இப்போது இட ஒதுக்கீடு இல்லை. ஆகவே, சமூகநீதிக்கும் இப்போது பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

இது சமூகநீதிப் போராட்டத்திற்கான இன்னொரு தூண்டுதலாகும்.

மூன்றாவதாக இதில் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால், எல்லாவற்றையும் தனியார் மயம், தனியார் மயம் என்று சொல்கிறார்கள். ஆகவே, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.

அது முடியுமா? என்று கேட்கிறார்கள்.

அதற்கு அமெரிக்காவே சாட்சி. அமெரிக்கா என்பது மிகப்பெரிய அளவில் முதலாளித்துவ நாடாகும். அங்கே தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு உண்டு. அதனைப் பின்பற்றவேண்டும்.

ஆகவே, இது முதற்கட்டப் போராட்டம்தான். இந்நிலை தொடர்ந்தால்,  மீண்டும் தமிழ்நாட்டில், இந்தக் கிளர்ச்சித் தீவிரமாகும்.

மேகதாது அணை கட்டப்பட்டால்,
தமிழ்நாட்டுக்கு ஆபத்து!

செய்தியாளர்: மேகதாது அணை கட்ட  கருநாடக அரசு முயற்சி செய்கிறதே, அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்கு மின்சாரம் வேண்டும். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்கமாட்டார்கள். கருநாடக அரசிடமிருந்து நாம் கேட்பது பிச்சையல்ல; உரிமை.

காவிரிப் பிரச்சினை ஏற்பட்டு, காவிரி நதிநீர் தாவா முடிந்து,  நமக்குத் தண்ணீர் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்ய, காவிரி நடுவர் மன்றம் அமைத்த நேரத்தில்கூட, ஒன்றிய அரசு, நியாயமாக அதனை அமைக்கவில்லை. அக்குழுவில், பொதுவான நிலையில் உள்ளவர்களைப் போடவில்லை. அதை அப்போதே நாம் எதிர்த்தோம்.

மேட்டூர் தண்ணீரை இந்த ஆண்டு திறக்க முடியவில்லை. ஜூன் மாதம் 12 ஆம் தேதி வழக்கமாகத் திறந்து விடுவார்கள். அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. காரணம் என்னவென்றால், நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை.  ஒகேனக்கல் வழியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, பிலிகுண்டு மற்ற இடங்களிலிருந்து வருகிறது என்றால், கருநாடக மாநிலத்தில் நிறைய மழை பெய்து, அவர்களால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாது என்ற சூழ்நிலையில், அங்கே இருக்கின்ற மழை நீர் வெள்ளமாக வருகிறபோது மட்டும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடுகிறோம் என்று கணக்குக் காட்டி விடுவார்கள்.

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் இரட்டை நிலை!

ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்வார்கள், ‘ட்ரைனேஜ் அவுட்லெட்’ என்று.  கூடுதல் தண்ணீரைத் திறந்துவிடுவது என்பது, கொடை உள்ளத்தாலோ, நியாய உள்ளத்தாலோ அல்ல; தங்கள் மாநிலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உள்நோக்கத்தில்தான்; அப்படி இல்லையென்றால், கருநாடகம் வெள்ளத்தில் மிதக்கும் என்பதால்தான்!

ஆகவேதான், கருநாடக அரசு, மேகதாது அணையைக் கட்டக்கூடாது. ஆனால், ஒன்றிய அரசு, ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்ற நிலையான இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. தெளிவான நிலை இருக்கவேண்டும்.

இதற்கு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் போதாது. ஏற்கெனவே இப்பிரச்சினையில், தமிழ்நாடு அரசுக்கு எங்களுடைய கருத்துரையைச் சொல்லியிருக்கின்றோம். எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து, பல கட்டப் போராட்டங்களை நடத்தவேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரு முழு அடைப்பை நடத்தவேண்டும். அதற்கு அரசே முன்வரவேண்டும்.  இதற்கு முன்பு, காவிரிப் பிரச்சினையில், தமிழ்நாடு அரசு ஒத்துழைத்திருக்கிறது. முழு அடைப்பின் மூலமாக, தமிழ்நாடு ஒன்றுபட்டு இருக்கிறது.

மேடைகள் தனித்தனியாக இருக்கலாம்; அரசியல் நம்மைப் பிரிக்கலாம்; மதங்கள் பிரிக்கலாம். ஆனால், இதுபோன்ற உரிமைகளில் பிரிந்து இருக்கக்கூடாது, ஒன்றுபட்டு இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய அவசியம் முக்கியம்.

புதுவகையான நிதி ஆதாரமாக அமையும்

செய்தியாளர்: என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகள் விற்பனைத் தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு உங்களுடைய கோரிக்கை என்ன?

தமிழர் தலைவர்: என்.எல்.சி. நிறுவனப் பங்குகளைத் தாராளமாக தமிழ்நாடு அரசு வாங்கலாம்.  தமிழ்நாடு அரசு என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு உரியது என்று அர்த்தம். ஆகவே, தமிழ்நாடு அரசு, அந்தப் பங்குகளை வாங்கவேண்டும்.

நிதித்துறை இப்படி இருக்கிறதே, என்று சொல்லாதீர்கள்.

என்.எல்.சி. பங்குகளை வாங்கினால், அது முதலீடு. நிதிக்குத் திண்டாடிக் கொண்டிருக்கின்ற ஓர் அரசுக்கு, இன்னொரு வகையான, புதுவகையான நிதி ஆதாரமும் அமையும். இதனால், இரண்டு வகையில் லாபங்கள் ஏற்படும்.

‘‘இன்னும் கொஞ்சம் கூடுதலாக பங்குகளைக் கொடுங்கள் எங்களுக்கு – நீங்கள் விற்கவிருக்கின்ற பங்குகளை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்பதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்வரவேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அவசர முடிவெடுக்கவேண்டும்.

என்.எல்.சி. மீதான நம்பகத்தன்மை குறைகிறது!

செய்தியாளர்: 50 சதவிகிதத்திற்குக் குறைவாக இருந்தால்தான், தனியாருக்கு விற்பனையாகும். தனியாருக்குப் போகவில்லை என்று என்.எல்.சி. நிறுவனம் சொல்கிறதே?

தமிழர் தலைவர்: அதனுடைய நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது. அதை நிலைநாட்டட்டும். தனியாருக்கு விற்கமாட்டோம் என்றால் நல்லதுதான். 50 சதவிகிதம், 60 சதவிகிதம் என்பதை அவர்களே நிர்ணயம் செய்துகொண்டதாகும். இது மக்கள் நிறுவனம், ஆகவே, மக்கள் நிறுவனமாக இருக்கட்டும்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *