சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் குறித்து பொதுமக்கள் தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியில் நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ரமேஷ் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில் களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு, லஞ்ச ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஅய்பி தரிசனத்துக்காக அமைச்சரிடமே ஊழியர்கள் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ற சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதேபோல, சமயபுரம் மாரியம்மன் கோயில், திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோயில் என பல இடங்களிலும் முறைகேடுகளைத் தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக தனக்கு புகார் அளிக்கும் வகையில் புதிய மின்னஞ்சல் முகவரியை அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் ஏதேனும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், கோயில் திருப்பணிகள் மற்றும் கோயில் தொடர்பான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்கள் நடைபெறுவதாக அறிந்தால், [email protected] எனும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம்.
தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங் களுடன் புகார்களைத் தெரிவியுங்கள். இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற் கான வழிவகைகளை நானும், எனது அலுவலகமும் நேரடியாக மேற்கொள்வோம்.”இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பொதுப்பணித் துறை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிறுவனத்தின் ஜி-மெயில் (Gmail) முகவரியை வெளியிட்டார். இது பரவலான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது அமைச்சர் ரமேஷ் புகார் தர பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அரசு டொமைனில் (tn.gov.in) உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரியை கடவுளை நம்பாமல் பொதுமக்களுக்கு வழங்கி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
