ராமன் கோயிலில் வி.அய்.பி. தரிசனத்துக்கு நபருக்கு ரூ.30 ஆயிரம் வசூலித்து ‘மகா கொள்ளை’ நாள்தோறும் அரங்கேறிவரும் தொடர் மோசடிகள் அம்பலம்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 4 அயோத் தியில் ராமன் கோயில் திறக்கப்பட்ட பிறகு, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்  வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அதீத பக்தியையும், விஅய்பிக்களின் அவசரத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ராமன் பெயரிலேயே அரங்கேறி வரும் தொடர் மோசடிகள் ஆன்மிகவாதிகளை அதிரவைத்துள்ளன. “புற்றுக்குள் இருந்து வரிசையாக கிளம்பும் விஷப் பாம்புகளைப் போல” நாள்தோறும் ஒரு புதிய கொள்ளை விவகாரம் அயோத்தியில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

விஅய்பி தரிசன பகற்கொள்ளை!

அயோத்திக்கு வரும் விஅய்பிக்கள் மற்றும் வசதி படைத்தவர்கள், ஒரே நாளில் தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பவும், ராமன் சிலைக்கு மிக அருகில் நின்று வழிபடவும் ஆசைப்படுகின்றனர். பக்தர்களின் இந்த ஆசையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய சில உள்ளூர் உணவு விடுதி நிர்வாகிகள் விஅய்பி தரிசன ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, ஒரு நபருக்கு ரூ. 30,000 வரை சுருட்டியுள்ளனர்.

ராமன் கோயில் ஊழியர்கள் சிலரின் உதவியோடு ‘விஅய்பி’ அனுமதிச் சீட்டுகளை மொத்தமாகப் பெற்று, அவற்றை இந்த உணவு விடுதி நிர்வாகங்கள் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு இந்த மெகா பித்தலாட்டத்தை நடத்தியுள்ளனர். இதன் மூலம் மாதம் தோறும் பல லட்ச ரூபாய் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டுள்ளது.

கள்ளநோட்டு முதல் காணிக்கை திருட்டு வரை

இந்த விஅய்பி தரிசன மோசடியின் பின்னணியில், ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ராம் சங்கர் யாதவ் (எ) டின்னு யாதவ் என்பவனுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயில் பணத்தை அள்ளிய கும்பல், விஅய்பி பாஸ் விவகாரத்திலும் கைவரிசையைக் காட்டியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

நிழற்ப்படம் எடுக்கவும் கட்டணமா?

இதுமட்டுமின்றி, கோயிலுக்கு வரும் சாதாரண பக்தர்களிடம், நிழற்ப்படம் எடுப்பதற்கு அனுமதி தருவதாகக் கூறி தனியாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல்வேறு குறுக்கு வழிகளில், கடவுள் பக்தர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த ஆன்மிக உலகையும் உலுக்கியுள்ளது.

தீவிர விசாரணையில் ‘எஸ்அய்டி’

ராமன் கோயில் விஅய்பி அனு மதிச் சீட்டு வழங்கியதில் விதிகள் எவ்வாறு மீறப்பட்டன? இதில் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த பெரிய தலைகளுக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பக்தர்களின் நம்பிக்கையை முதலீடாக்கி, ராமர் பெயரைச் சொல்லி நடத்தப்படும் இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள், அயோத்தி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *