இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து அரியானாவில் ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

3 Min Read

புதுடில்லி, ஜுலை 3– அரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்தியா – ஜப்பான் வருடாந்திர மாநாடு டில்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டில்லிக்கு வந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டில்லியில் உள்ள அய்தராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:

இந்தியாவின் ஆட்டோ மொபைல், மின்னணு துறை வளர்ச்சிக்கு ஜப்பான் முக்கிய பங்களிப்புகளை வழங்கி உள்ளது. தற்போது ஏஅய் (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதவிர, மருந்து உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், உயிரி தொழில்நுட்பம், நிதிச் சேவை தொடர்பாகவும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்தியா- ஜப்பான் பயோ காஸ் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் புதிதாக 1,000 பயோ காஸ், இயற்கை உரத் தொழிற்சாலைகள் கட்டப்படும். இதன்மூலம் இந்திய கிராமங்கள் வளர்ச்சி அடையும். இந்தியாவில் கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகரிக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. பேட்டரி, பசுமை ஹைட்ரஜன், அணுசக்தி, கப்பல் கட்டு மானம், விமானப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து பணியாற்றும்.

இந்தியாவின் பெட்ரோலிய கையி ருப்பை அதிகரிக்க தேவையான தொழில் நுட்ப உதவிகளை ஜப்பான் வழங்கும். எரிசக்தி, அரியவகை கனிமங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். ஜப்பான் – இந்திய கடற்படைகள் இணைந்து விரைவில் போர்ப் பயிற்சிகளில் ஈடுபடும். இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இரு நாடுகள் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் போர்க் கப்பல்களுக்கு தேவையான சிறப்பு ஆன்டெனாக்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் எதிரிகளின் ரேடார்களால் இந்திய, ஜப்பானிய போர்க் கப்பல்களை கண்டுபிடிக்க முடியாது. வரும் காலத்தில் இணைந்து போர்க்கப்பல்கள் தயாரிக்கவும் கொள்கைரீதியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரியானாவின் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற இந்திய – ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றக்கூட்டத்தின்போது பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் இணைந்து காணொலி வாயிலாக இந்த புதியகார் தொழிற்சாலையை தொடங்கி வைத்தனர். சுமார் 800 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். முதல் கட்டமாக, இங்கு ஆண்டுக்கு 5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும்.

பின்னர் படிப்படியாக இது 10 லட்சம் வரை அதிகரிக்கப்பட உள்ளது. பொருளாதார மன்றக் கூட்டத்தில் சனே டகாய்ச்சி பேசியபோது, ‘‘மும்பை – அகமதாபாத் இடையே2027-ல் புல்லட் ரயில் சேவையைதொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை ஜப்பான் வழங்கும். இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான இ-10 ஷிங்கன்சென் அறிமுகம் செய்யப்படும்’’ என்றார். இந்தபுல்லட் ரயில்கள் மணிக்கு 320 முதல் 400 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன்மூலம் மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் அகமதாபாத் செல்ல முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *