‘நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்!’ விருதுநகர் விவசாயிகள் புகார்!

3 Min Read

சிறீவில்லிபுத்தூர், ஜூலை 3- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்யப்படுவதாக விருதுநகர் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

நெல் கொள்முதல்

விருதுநகர் மாவட்டத்தில் ராஜ பாளையம், சிறீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ராஜபாளையம், சிறீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மய்யத்தில் தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு சன்ன ரகம் குவின்டாலுக்கு ரூ.2,545, மோட்டா ரகம் குவின்டாலுக்கு ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வெளிச் சந்தையைவிட அதிக விலை கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையத் துக்கு விற்பனை செய்ய வருகின்றனர். கொள்முதல் மையத்தில் 40 கிலோ எடையுள்ள மூட்டைக்கு ரூ.40-அய் விவசாயிகளிடம் இருந்து கறாராக வசூல் செய்து வருகின்றனர். பணம் தர மறுக்கும் விவசாயிகளிடம் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது, கல், மண் உள்ளது எனக் கூறி எடை போடாமல் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

வெளிச்சந்தையை விட நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் அதிகம் கிடைக் கிறது. அதனால்தான், அனைத்து விவசாயி களும் அரசு நெல் கொள்முதல் நிலை யத்தை நாடுகின்றனர். இதை பயன்படுத்தி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ.40-இல் இருந்து ரூ.60 வரை கட்டாயமாக வசூல் செய்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் முதல்போக சாகுபடியில் ஒரு லட்சம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு மூட்டைக்கு ரூ.40 என்றால் ரூ.40 லட்சம் சட்டவிரோதமாக வசூல் செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் ஒரு பருவத்துக்கு விவசாயி களிடமிருந்து பல 100 கோடி ரூபாய் சட்டவிரோதமாக வசூல் செய்யப்படுகிறது.

மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் கடந்த காலங்களில் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூல் செய்வதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் நெல் மூட்டைக்கு விவசாயிகளிடம் பணம் வசூலிப்பது வேதனையாக உள்ளது. முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக நெல் கொள்முதல் நிலைய பணி யாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல்நிலையங்கள் ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு நிரந்தர ஊதியமாக இல்லாமல் கொள்முதல் அளவைப் பொறுத்து கமிஷன் அடிப் படையில் ஊதியம் வழங்கப் படுகிறது.

நெல் கொள்முதல் நிலைய நடப்பு செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக வழங்கப்பட வேண்டிய ரூ.20 ஆயிரம் முறையாக அரசு தரப்பில் தரப்படுவதில்லை. நெல் எடை போடும் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மூட்டைக்கு ரூ.10 என்ற கூலியும் போது மானதாக இல்லை.

மேலும், நெல் எடை போடும்போது ஏற்படும் இழப்புகள், எடை குறைவு, சேதம் ஆகியவற்றுக்கு பணியாளர்களே பொறுப்பு என்பதால், விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு இவ்வளவு என நிர்ணயித்து பணம் வாங்கப்படுகிறது.

இதுபோன்ற நடைமுறை சிரமங்களை சரிசெய்ய அரசு முன்வந்தால், விவசாயி களிடமிருந்து பணம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இப்பிரச்சினைக்கு அரசுதான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *