“ஆளுநரை ஆய்வு செய்ய விட்டு மாநில உரிமைகளில் சமரசம்” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சாடல்

2 Min Read

சென்னை, ஜூலை 3- “மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினர் இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், ‘’ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய ‘குதிரை பேர’ ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் – அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.

அரசியலமைப்புக்கும் – மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த ‘ஷோஃபா மாடல்’ அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம். ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன சமரசம் செய்யப்பட்டது என்று சட்டப்பேரவையில் கேட்டிருந்தோம்.

அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கொள்முதல் செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *